SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சியில் சூறாவளி காற்றுடன் கன மழை காற்றில் பறந்த புழுதி, குப்பை வாகன ஓட்டிகள் கடும் அவதி

5/19/2017 12:49:03 PM


திருச்சி, :   திருச்சியில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கன மழை பெய்ததது. இதனால் விளம்பர பேனர்கள் கிழிந்தன. பறந்து வந்த குப்பைகள் சாலையில் முழுவதும் பரவிக்கிடந்தன. இதன் காரணமாக வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.   
கடந்த 4ம் தேதி அக்னி வெயில் தமிழகத்தில் தொடங்கியது. தொடக்க நாட்களில் குறைவாக இருந்தாலும் அடுத்தடுத்து நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். மதிய நேர வேலையில் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை சாலைகளில் குறைவாகவே காணப்பட்டன.  

இந்நிலையில் நேற்று காலை 9 மணி முதல் வெயிலின் தாக்கம் மற்ற நாட்களை காட்டிலும் அதிகளவில் சுட்டெரித்தது. மதியம் நேரத்தில் வெயிலின் உக்கிர வேகமானதையடுத்து அனைத்து தரப்பு மக்களும் உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் பாதிக்கப்பட்டனர். சுமார் 5 மணியளவில் தென் திசையில் இருந்து கருமேகங்கள் திரண்டு வர சிறிது நேரத்தில் கடுமையான வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள வருண பகவான் மழையை பொழிய உள்ளதாக எண்ணி பெரும்பாலான குடியிருப்புவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 ஆனால் சிறிது நேரத்தில் பலத்த சூறாவளி காற்று வீசி சாலையோர முட்புதர்களில் தேங்கி கிடந்த குப்பைகளை ஒட்டு மொத்தமாக சாலைகளில் வாரி வீசியது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் கிழித்தெறியப்பட்டது. பெரும்பாலான மரங்கள் வேறொடு சாய்ந்து வீடு மற்றும் சாலைகளை ஆக்கிரமித்துக்கொண்டது. குறிப்பாக திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு முன்பும், மெயின் கார்டுகேட் பகுதியில் உள்ள ஜவுளிக்கடை முன்பு இருந்த மரங்கள் சாலையில் விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்களின் இலைகள் மற்றும் சிறிய குச்சிகள் சாலையில் விழுந்து குப்பைகளாக காட்சியளித்தன.

 ஏர்போர்ட் போலீஸ் நிலையம் முன்பு இருந்த ராட்சத வேப்பமரம் பாதையை ஆக்கிரமித்து சாய்ந்ததால் பணியில் இருந்த போலீசார் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பாரதியார் சாலையில் உள்ள ரயில்வே அருங்காட்சியகம் பஸ் நிறுத்த நிழற்குடை மேற்கூரை சரிந்து விழுந்தது. மத்திய பஸ்நிலையம், ரயில்நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் 2 அடி தூரம் தூக்கியெறியப்பட்டன. இந்த சம்பவங்களால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர். சிறிது நேரத்தில் மேகங்கள் திரண்டு வர திருச்சி மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததது. கால இடைவெளியின்றி சூறாவளி காற்று மழை தொடர்ச்சியாக நிகழ்ந்ததால் திருச்சியில் உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழையால் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து பள்ளமான பகுதிகளில் தேங்கி நின்றது.

 முக்கிய வீதிகளில் சாக்கடை கால்வாய்களை மாநகராட்சி நிர்வாகம் தூர்வாராததால் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் அடைத்து கொண்டதால் மழைநீர் வடிய வழியின்றி சாலைகள் மற்றும் குடியிருப்புகளை ஆக்கிரமித்து கொண்டு செல்ல வழியின்றி காணப்பட்டது. சூறாவளி காற்று வீசியபோது ஏற்பட்ட மின்தடை மழைக்கு பின்னரும் நள்ளிரவு வரை பெரும்பாலான இடங்களில் மின் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் கொசுக்கடியால் அப்பகுதி மக்கள் தூக்கத்தை தொலைத்தனர்.
செல்போன் டவர் முறிந்து விழுந்தது

திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சிக்குட்பட்ட ஜெய்நகரில் திருநாவுக்கரசு மகன் சுந்தர்ராஜன் என்பவர் வீட்டு மாடியில் தனியார் செல்போன் டவர் 80 அடி உயரத்தில் இருந்தது. அந்த செல்போன் டவர் சூறாவளி காற்றுடன்  பெய்த மழையில் அடியோடு பெயர்ந்து விழுந்தது. இதில் சுந்தர்ராஜன் பக்கத்து வீட்டில் இருந்த கம்ப்யூட்டர் புரவுசிங் சென்டர் மற்றும் குமார் என்பவரது வீடு மீதும் விழுந்தது. இதில் கம்ப்யூட்டர் சென்டரில் படித்துக்கொண்டிருந்த 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அலறியடித்துக்கொண்டு வெளியில் ஓடிவந்தனர். மேலும் குமார் வீட்டு மாடியில் இருந்த குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி உடைந்து மேலும் மின் மோட்டார் பைப் லைன் உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்தது. மேலும் அந்தப் பகுதியில் இருந்த இன்னொருவீட்டின் மேற்கூரை ஓடுகளும் நொறுங்கியது. அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்த தாசில்தார் ஷோபா, இன்ஸ்பெக்டர் மதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு  சென்று பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்

திருச்சியில் நேற்று மாலை கருமேகங்கள் திரண்டு வர பலத்த சூறாவளி காற்று வீசியது. போதிய வெளிச்சமின்மை மற்றும் பலத்த காற்று காரணமாக மலேசியாவில் இருந்து திருச்சி விமானநிலையத்திற்கு மாலை 4.45 மணிக்கு வந்த ஏர் ஏசியா விமானம் கோவை விமான நிலையத்திற்கும், சென்னையில் இருந்து திருச்சிக்கு மாலை 5.30 மணிக்கு வந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் மதுரைக்கும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் விமானம் இறங்குவதற்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்ட பிறகு ஜெட் ஏர்வேஸ் விமானம் இரவு 9 மணிக்கும், ஏர் ஏசியா விமானம் இரவு 9.45 மணிக்கும் வந்து சென்றது. இதனால் பயணிகள் மற்றும் அவர்களின் வருகைக்காக காத்திருந்த உறவினர்கள் கடும் அவதியுற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • salemchennairoad

  பொதுமக்கள் எதிர்ப்பு மீறி நடைபெறும் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் : விளை நிலங்கள் அழியும் அபாயம்!

 • icffactorychennai

  சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆய்வு

 • RaghulGandhi48thBday

  ராகுல் காந்தியின் 48வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

 • IndonesiaTobaLake

  இந்தோனேஷிய ஏரியில் 80 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்

 • KiteWarPalestine

  பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்