SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

“டாஸ்மாக் கடை திறந்தால் குடும்பத்துடன் தீக்குளிப்போம்” 15வது நாளாக பெண்கள் போராட்டம்

4/21/2017 10:44:37 AM

மேச்சேரி: மேச்சேரி அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 15வது நாளாக பந்தல் அமைத்து பெண்கள் தங்களது குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேச்சேரி அருகே குக்கல்பட்டி கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, வருவாய் துறை மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் ரேசன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர். இருந்தபோதிலும், மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னைக்கு தீர்வு காணவில்லை. இதனால் மனவேதனைக்கு ஆளான பெண்கள் தங்களது குழந்தைகளுடன் அப்பகுதியில் பந்தல் அமைத்து தொடர்ந்து 15வது நாளாக கருப்பு கொடி ஏற்றி காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும் நாளை கடையை திறக்க, டாஸ்மாக் அதிகாரிகள் ஏற்பாடு செய்வதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பெண்கள் கூறுகையில், எங்களது எதிர்ப்பையும் மீறி, கடையை திறந்தால் அனைவரும் குடும்பத்துடன் தீக்குளிப்போம். அரசு மதுக்கடை மூலம் வரும் வருமானத்தை கொண்டு வழங்கப்படும் அரசின் எந்த இலவச பொருட்களும் எங்களுக்கு தேவையில்லை. மதுக்கடையை மூடினாலே பெரிய புண்ணியம், என்றனர். அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட மக்கள் : மேச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட ஓலைப்பட்டி கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி, போலீஸ் துணையுடன் வருவாய்துறை மற்றும் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் நேற்று மதுக்கடையை திறந்தனர். இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் பெண்கள் நேற்று மாலை தங்களது கைக்குழந்தையுடன் திரண்டு சென்று கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த மேட்டூர் தாசில்தார் வீரப்பன், கலால் கோட்ட அலுவலர் உண்ணாமலை ஆகியோர் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களது ரேசன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைப்பதாகவும் கூறினர். இதில் அதிர்ச்சிக்குள்ளான அதிகாரிகள், “ உடமைகளை பெறவும், டாஸ்மாக் கடையை அகற்றவும் கலெக்டருக்குதான் அதிகாரம் உள்ளது. தங்களிடம் எந்தவிதமான அதிகாரமும் இல்லை, என்றனர். இதை மக்கள் ஏற்க மறுத்து,  கடையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர். இதனிடையே மேட்டூர் எஸ்பி தினகரன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேச்சேரி போலீசார், “இப்பிரச்னை குறித்து கலெக்டரிடம் மனு கொடுங்கள்” என்று கூறினர். இதையடுத்து கிராம மக்கள் நாளை கலெக்டரை சந்தித்து தங்களது ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க போவதாக கூறினர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SvetlanaVillageRussia

  மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

 • karaneeswarargod

  காரணீஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழா : சவுடல் விமானத்தில் காரணீஸ்வரர்

 • TorontoPedestriansAttack

  கனடாவில் பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல்: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

 • Sachin45thBirthday

  மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் 45வது பிறந்தநாள்: சில அரிய புகைப்படங்களின் தொகுப்பு..

 • SingaporeperumalTemple

  164 ஆண்டு பழமையான சிங்கப்பூர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: அந்நாட்டு பிரதமர் உட்பட 40,000 பேர் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்