SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புகையான் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறை

1/28/2016 10:01:03 AM

நாகை, : சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர்  அழகர், திட்ட ஒருங்கிணைப்பாளர் அனுராதா ஆகியோர் கூட்டாக  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தற்போது நிலவி வரும் வானிலை சூழ்நிலையால் நடப்பு சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களில் புகையான் தாக்குதல் தென்படுகிறது. புகையான் தாக்குதலை தடுக்க நடவிற்கு முன் தண்ணீர் தேங்கி நிற்காமல் வயலை சீராக சமப்படுத்த வேண்டும். புகையான் பூச்சி தாக்குதலை எதிர்பார்க்கும் இடங்களில் ஒவ்வொரு 8 அடிக்கும் ஒரு அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். நெற்பயிரை கிழக்கு மேற்கு திசையில் நட வேண்டும். ஏன்னெனில் சூரிய ஒளி பயிரின் அடிப்பகுதி வரை ஊடுருவி செல்வதால் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் குறையும். வரப்புகளில் உளுந்து, தட்டைப்பயறு போன்ற பயறு வகை பயிர்களை சாகுபடி செய்வதால் நன்மை செய்யும் பூச்சிகளான பொறி வண்டுகள், கண்ணாடி இறக்கை பூச்சிகள், சிற்படு ஈக்கள், சிலந்திகள் பெருகும். இவை நெற்பயிரில் தீமை செய்யும் பூச்சிகளை பிடித்து தின்று விடும். நெருக்கமாக நடுவதுதான், எல்லா விதமான பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதலுக்கு காரணம். நெருக்கமாக நடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவு நுண்ணுட்டங்களையும், பேரூட்டங்களையும் சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதால் இயற்கையாகவே பயிர்களுக்கு நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கும். தேவைக்கு அதிகமாக இடப்படும் உரங்கள், பூச்சி, நோய்களின் பெருக்கத்திற்கு காரணமாகி விடும். மேலும் உரங்களை சரியான தருணத்தில் பிரித்து இட வேண்டும். பொதுவாக அதிகளவு சாம்பல் சத்து இடுவதால் பயிர்களில் நோய்களுக்கு எதிர்ப்புத்திறனை கொடுக்கும். கண்டிப்பாக தழைச்சத்தை பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக இட கூடாது. புகையானுக்கு எதிர்ப்பு சக்தி, மறு பெருக்கத்தை உண்டாக்கும் செயற்கை வகை பைரித்திராய்டு பூச்சி கொல்லி மருந்துகளான லாம்டா சைகளோத்திரின், சைப்பர் மெத்தரின், பென்வலரேட், மீத்தைல் பாரத்தியான், குய்னால்பாஸ் போன்ற மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பூச்சி கொல்லி மருந்துகளை பயிரின் அடிப்பகுதியில் படும்படி தெளிக்க வேண்டும். புகையான் தாக்குதல் தென்பட்டவுடன் தண்ணீரை வடிகட்டி பட்டம் பிரித்து விட்டு காய விட்டு காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும். புகையான் தாக்குதல் இருக்கும்போது, தழைசத்தை இடகூடாது. தாக்குதல் ஆரம்ப நிலையில் இருக்கும்போது, லெக்காணி என்ற பூஞ்சாணத்தை ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் 20 கிலோ மண்ணில் கலந்து தூவ வேண்டும். இந்த பூஞ்சாணம் புகையான் நோயை ஏற்படுத்தி கொல்லும் தன்மை கொண்டது. தாக்குதல் பொருளாதார சேத நிலையை தாண்டும் போது, வேப்ப விதைச்சாறு 5 சதவீதம்  அல்லது அசாடிராக்டின் 500 மி.லி. அல்லது தயாமீத்தாக்சாம் 40 கிராம், பியூப்ரோபேசின் 320 மிலி அல்லது இமிடாக்குளோபிரிட் 50 மி.லி. இவற்றில் ஏதாவது ஒன்றை விசைத்தெளிப்பானாக இருந்தால் 100 லிட்டர், கைத் தெளிப்பானாக இருந்தால் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தண்டின் அடிப்பகுதி நன்றாக நனையும்படி தெளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்