மண்டபத்தில் மின்கசிவால் தீ விபத்து திருமணத்திற்கு வந்தவர்கள் ஓட்டம் ஆத்தூரில் பரபரப்பு

Date: 2015-02-02 12:31:35

ஆத்தூர், : சேலம் மாவட்டம் ஆத்தூரில், மண்டபத்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், திருமணத்திற்கு வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் உள்ளது. இங்கு இன்று(திங்கட்கிழமை) காலை ஒரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையொட்டி, நேற்று மாலை அங்கு பெண் அழைப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மணமக்கள் மேடையில் அமர வைக்கப்பட்டு திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன.

அப்போது, மேடையின் பின்புறம் உள்ள சுவிட்ச் போர்டில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதனைக்கண்டு மேடையில் நின்று கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அவர்களை தொடர்ந்து மணமக்களும் எழுத்து ஓடத் துவங்கினர். சிறிது நேரத்தில் சுவிட்ச் போர்டில் பிடித்த தீ மளமளவென மின்சார ஒயர் வழியாக மற்ற இடங்களுக்கும் பரவ துவங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மண்டப மின் பராமரிப்பு பணியாளர் விரைந்து செயல்பட்டு மண்டபத்தின் மின் இணைப்பை துண்டித்தார். அதன் பின்னும் தீ பற்றி எரிந்ததால் மண்டபத்தினுள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைந்தனர். தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின் தொடர்ந்து திருமண நிகழச்சிகள் நடைபெற்றது.

Like Us on Facebook Dinkaran Daily News