திருச்சி அருகே மொபட் மீது கார் மோதல் கணவன்,மனைவி பலி போதை ஆசாமிகளால் விபரீதம்

Date: 2015-02-02 12:01:30

துறையூர், : துறையூர் அருகே போதை ஆசாமிகள் வந்த கார் பைக் மீது மோதி கணவன்,மனைவி பலியாயினர். குழந்தை பலத்த காயமடைந்தது.
 துறையூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(36).இவரது மனைவி பிரியதர்ஷினி(32). சுரேஷ்குமார் சென்னையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவர் நேற்றிரவு 8.30 மணியளவில் ஒரு பைக்கில் தனது மனைவி, குழந்தை ஹாசினி(4)யுடன் பெரம்பலூர் அருகேயுள்ள நக்கசேலத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். துறையூர் பெரம்பலூர் சாலையில் சிலோன் ஆபிஸ் என்ற இடமருகே சென்றபோது எதிரே வந்த கார் பைக் மீது மோதியது.

இதில் சுரேஷ்குமாரும், பிரியதர்ஷினியும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர். பலத்த காயமடைந்த குழந்தை ஹாசினி துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து துறையூர் இன்ஸ்பெக்டர் செழியன்,எஸ்ஐக்கள் நாதப்பன், திருப்பதி, சிதம்பரம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் வந்த துறையூரை சேர்ந்த லோகநாதன் மற்றும் பலரை தேடி வருகின்றனர். காரில் வந்தவர்கள் மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Like Us on Facebook Dinkaran Daily News