இலங்கையில் இனப்படுகொலை மாணவர்கள் போராட்டத்தில் 8 பேர் மயங்கி விழுந்தனர் திருச்சி ஜி.ஹெச்.சில் அனுமதி
பதிவு செய்த நேரம்:2013-03-16 12:18:16
திருச்சி, : இலங்கை யில் பொது வாக்கெடுப்பு நடத்த கோரி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் நடத் திய போராட்டத்தின்போது 2 மாணவிகள்உள்பட 6 பேர் மயங்கி விழுந்தனர்.
இலங்கையில் தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரியும், ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இனப்படுகொலை செய்த இலங்கைக்கு எதிராக ஐ.நா சபையில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் திருச்சியில் பெரியார் ஈ.வெ.ரா அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்ர் வெஸ்ட்ரி பள்ளி சாலையிலுள்ள பிரதேச ராணுவத்தின் 117 பட்டாலியன் அலுவலகம் முன் அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டதுடன் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்தனர். கலெக்டர் ஜெயஸ்ரீ சந்திப்பிற்காக நீண்ட நேரம் வெயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது மேனகா உள்ளிட்ட 2 மாணவிகள் மயங்கி விழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் கோரிக்கையை கலெக்டர் ஏற்றதால் அனைவரும் கலைந்து சென்றனர்.
திருவெறும்பூர்: துவாக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று 2வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இருந்தனர். இதில் விமல், சந்துரு, தர்மராஜ், யாசர், யுவராஜ், பாஸ்கர் ஆகியோர் மயக்கம் அடைந்தனர். இவர்களும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே திருச்சி தாசில்தார் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். எம்பிக்கள் நேரில் வந்து எங்களது கோரிக்கைகளை மக்களவையில் பேசுகிறோம் என உறுதியளித்தால் போராட்டம் விலக்கப்படும் என்று தெரிவித்த மாணவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.










