வருமான வரி அலுவலகத்திற்கு பூட்டு போட்ட சட்ட மாணவர்கள்
பதிவு செய்த நேரம்:2013-03-16 11:35:13கோவை,: கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒரு பகுதியினர் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மூன்றாம் ஆண்டு மாணவர் பகத்சிங் தலைமையில் நேற்று 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரேஸ்கோர்சில் உள்ள முதன்மை வருமான வரி ஆணையர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். பின்னர் இரண்டாவது தளத்தில் உள்ள இணை கமிஷனர் கோபக்குமார் அறைக்குள் நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது அலுவலகத்தை உள்புறமாக தாழிட்டுக்கொண்டு தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
அறையை திறக்கும்படி வருமானவரித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டும் மாணவர்கள் திறக்கவில்லை. அதிவிரைவுப்படையினருடன் வந்த போலீஸ் துணை கமிஷனர் பிரவேஷ்குமார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களை வெளியே வரும்படி அழைத்தார். கதவை திறக்க மறுத்து விட்டனர். பின்னர் வருமானவரித்துறை கூடுதல் கமிஷனர் முகேஷ்குமார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் போனில் பேசி பார்த்தார். உண்ணாவிரதமிருந்து வரும் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணவேண்டும். அதுவரை அலுவலகத்தை திறக்கமாட்டோம் எனக்கூறி கோஷம் எழுப்பினர். பின்னர் உண்ணாவிரதமிருந்த மாணவர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மதியம் கதவை திறந்து வெளியேறினர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது இலங்கை தேசிய கொடியையும் எரித்தனர்.










