மருதமலை கோயிலில் ஆறு கால பூஜைகள் துவங்கியது
பதிவு செய்த நேரம்:2013-03-16 11:34:50கோவை, : மருதமலை சுப்ரமணி சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முதல் ஆறு கால பூஜைகள் தொடங்கின. முதல் கால வேள்வி நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது.
மருதமலை கோயிலில் நேற்று காலை 7 மணிக்கு மங்கள இசையுடன் கணபதி வழிபாடு நடைபெற்றது. பின்னர் ஒன்பது கோள்களுக்கு வேள்விகள் அமைத்து பூஜைகள் நடைபெற்றது. சோமு குருக்கள் மற்றும் வி.பி. குமரசிவாச்சாரியார் தலைமையில் 150 சிவாச்சாரியார்களால் ராஜகோபுர விமான கலசங்கள் மதியம் 1 மணியளவில் நிறுவப்பட்டது. பின்னர் மூலவருக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்று வேள்வி கூடம் புகுத்தி திருநீர் வழங்கப்பட்டது. இதை அடுத்து ராஜ கோபுர நுழைவாயில் கதவுகள் திறக்கப்பட்டது. இதில் இணை ஆணையர் மற்றும் கோவில் தக்கார் நடராஜன், துணை ஆணையர் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாலை 4 மணிக்கு திருமுறை மங்கள இன்னிசை நடைபெற்றது. அதன் பின்னர் கணபதி வழிபாடு, திருமுளைப்பாலிகையிடுதல், வேள்வி கூட்டுவோர்க்கு திருகாப்பு அணிவித்து, திருகுடங்கள் நிறுவி, அருட்சக்தியை திருக்குடங்களில் எழுந்தருளச் செய்து, மங்கள இசையுடன் ஞான வடிவுடை திருகுடங்கள் வேள்வி கூடம் புகுத்தி, முதற்கால வேள்வி பூஜை துவங்கியது. கனி கிழங்கு மூலிகைகள் உள்ளிட்ட பல்பொருள் வேள்வி நடைபெற்றது.
இன்று காலை 8 மணி முதல் இரண்டாம் கால வேள்விகள் நடைபெறவுள்ளது. மாலை மூன்றாம் கால வேள்விகளும் நடைபெறவுள்ளது. நான்காம் மற்றும் ஐந்தாம் கால வேள்ளி பூஜைகள் நாளை நடைபெறவுள்ளது. நாளை மறு நாள் அதிகாலை 4 மணிக்கு கணபதி வழிபாடு முடிந்தவுடன் ஆறாம் கால வேள்வி பூஜைகள் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து காலை 9.30 மணிக்கு ராஜ கோபுரம், மூலவர் விமானம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் சம கால திருக்குட நன்னீராட்டும் நடைபெறவுள்ளது. மேலும் நாளை முதல் மகா அன்னதானம் நடக்கிறது. இந்த அன்னதானத்தில் சமையல் மற்றும் பரிமாறுதல் உதவிகள் செய்ய விருப்பமுள்ளவர்கள் 80150-23465 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.










