வழிப்பறி கும்பலை சேர்ந்த 4 பேர் கைது: இருவர் தப்பினர்
பதிவு செய்த நேரம்:2013-03-16 10:47:09மதுரை, : மதுரை அருகே வழிப்பறி கும்பலை சேர்ந்த 4பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2பேரை தேடி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் பகுதியில் அடிக்கடி வழிப்பறி, திருட்டு நடந்து வந்தது. ஆஸ்டின்பட்டி பகுதியில் மர்மகும்பல் பதுங்கி இருப்பதாக எஸ்பி பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. திருப்பரங்குன்றம் டிஎஸ்பி புருசோத்தமன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்றிரவு ஆஸ்டின்பட்டி பகுதியில் மர்மகும்பலை சுற்றி வளைத்தனர்.
போலீசை கண்டதும் 2பேர் தப்பியோடி விட்டனர். 4பேர் மட்டும் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்த பட்டாகத்தி, கம்பி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், மதுரை கீரைத்துறையை சேர்ந்த மகாலிங்கம், நடராஜன், சதீஷ், ஆனந்த் என தெரியவந்தது. தப்பி ஓடியவர்கள் இதே பகுதியை சேர்ந்த கார்த்திக், ராஜேஸ்கண்ணா எனவும் தெரியவந்தது. இவர்கள் திருட்டு, வழிப்பறி என பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள். நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.









