குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மறுத்த மாமனார் வெட்டி கொலை மாமியார் உயிர் ஊசல் கோர்ட்டில் மருமகன் சரண்
பதிவு செய்த நேரம்:2013-03-16 10:13:41ஆவடி, : குடும்பம் நடத்த மனைவியை அனுப்ப மறுத்த மாமனார் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். தப்பி ஓடிய மருமகன் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
ஆவடி அடுத்த திருநின்றவூர் கிருஷ்ணாபுரம் 4வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் அருணாச்சலம் (60). இவரது மனைவி முனியம்மாள் (55). இவர்களது மகள் சரஸ்வதி (30). வியாசர்பாடி சத்திய மூர்த்தி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருணாச்சலம் (35). இவருக்கும் சரஸ்வதிக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு பரத் (8), அனிதா (4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2 ஆண்டுக்கு முன்பு குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டில் சரஸ்வதி தஞ்சமடைந்தார். அருணாச்சலம் பலமுறை குடும்பம் நடத்த அழைத்தும் சரஸ்வதி வர மறுத்துவிட்டார்.
இந்நிலையில், மீண்டும் மனைவியை அழைத்து செல்ல அருணாச்சலம் நேற்று முன்தினம் மாமனார் வீட்டுக்கு சென்றார். வீட்டில் சரஸ்வதி, குழந்தைகள் இல்லை. அங்கு இருந்த மாமனார் அருணாச்சலம், மாமியார் முனியம்மாளிடம் மனைவியை பற்றி கேட்டுள்ளார்.
அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ‘என் மனைவியை என்னுடன் வாழவிடாமல் தடுப்பது நீங்கள்தான். நீங்கள் உயிருடன் இருக்கும் வரை அவள் என்னுடன் வரமாட்டாள்’ என கூறிக்கொண்டு மாமனார், மாமியாரை உருட்டுக் கட்டையால் தாக்கியதுடன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டார்.
படுகாயம் அடைந்த அருணாச்சலம்-முனியம்மாள் தம்பதியின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அருணாச்சலம் இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் முனியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து திருநின்றவூர் இன்ஸ்பெக்டர் சத்தியன் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மருமகன் அருணாச்சலத்தை தேடிவந்தார். இதற்கிடையில் அருணாச்சலம் எழும்பூர் 5வது நீதிமன்றத்தில் நேற்று மாலை சரணடைந்தார். அவரை விசாரித்த நீதிபதி புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
போலீசார் அருணாச்சலத்தை ஓரிரு நாளில் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அவரிடம் விசாரித்த பின்னரே கொலைக்கான முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.










