விரிவாக்கப்பட்ட பகுதிகளில் சிறுநீரக ரத்த சுத்திகரிப்புக்கு 4 மையங்கள் துவங்கப்படும் மாநகராட்சி ஆணையர் தகவல்
பதிவு செய்த நேரம்:2013-03-16 10:13:36சென்னை, : சென்னை மாநகராட்சி சார்பில் நுங்கம்பாக்கம் மற்றும் பெரம்பூர் ரத்த சுத்திகரிப்பு நிலையத்தில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமை ஆணையாளர் விக்ரம் கபூர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது, அவர் கூறியதாவது:
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஒரு வாரத்துக்கு 3 முறை சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) செய்ய வேண்டும். இதற்கு தனியார் மருத்துவமனையில் ஒரு வருடத்துக்கு ரூ1.5 லட்சம் வரை செலவாகும். ஆனால் சென்னை மாநகராட்சி முற்றிலும் இலவசமாக தொடர்ந்து செய்து வருகிறது.
மேலும் இந்த நிதியாண்டில் விரிவாக்கப்பட்ட பகுதிகளான எர்ணாவூர், முகப்பேர் மேற்கு, மதுரவாயல், ஜல்லடியன்பேட்டை ஆகிய 4 இடங்களில் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு மையம் ஆரம்பிக்க பணிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் மேலும் பலருக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
வருங்காலத்தில் மக்களிடையே இத்தகைய சிறுநீரக நோய் தாக்கத்தை குறைக்க வேண்டுமெனில் ஆரம்ப கட்டத்திலேயே அதற்கான பரிசோதனையை செய்து சிகிச்சை பெற்று கொள் வது அவசியமாகும்.
அந்த வகையில் மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சென்னை பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் சிறுநீர் மற்றும் ரத்தப்பரிசோதனை செய்து அறிகுறி உள்ள 1709 பேருக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தியுள்ளது.
இவ்வாறு விக்ரம் கபூர் கூறினார்.
இலவச மருத்துவ முகாமில் நுங்கம்பாக்கம் ரத்த சுத்திகரிப்பு நிலையத்தில் 142 பேருக்கும், பெரம்பூரில் 126 பேருக்கும் ரத்தம் மற்றும் சிறுநீரக பரிசோதனை செய்யப்பட்டது. இப்பரிசோதனையில் சிறுநீரக நோய்க்கான ஆரம்ப கட்ட அறிகுறி கண்டறியப்பட்டவர்களுக்கு மாநகர ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் உரிய சிகிச்சை அளிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
முகாமில் டாக்டர் சவுந்தரராஜன் கலந்து கொண்டு சீரிய ஆலோசனைகளை வழங்கினார்.










