பாரிமுனையில் பரபரப்பு கோயில் குளத்தை தூர்வாரும்போது சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி
பதிவு செய்த நேரம்:2013-03-16 10:13:24தண்டையார்பேட்டை, : சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் மிகப்பழமையான கச்சாலீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கான குளத்தில் தண்ணீர் வற்றியுள்ளது. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை சார்பில் கோயில் குளத்தை தூர் வாரி சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. போரூர் சேர்ந்த ஒருவர் டெண்டர் எடுத்தார். குளத்தை சுத்தம் செய்ய 10 நாட்களாக 20 வேலை செய்து வருகின்றனர்.
இவர்களில் நேற்று மாலை 15 பேர் டீ சாப்பிட வெளியே சென்றனர். 5 பேர் மட்டும் குளத்தில் வேலை பார்த்த்தனர். அப்போது குளத்தில் மோட்டார் மூலம் தண்ணீர் விட்டு சோதனை செய்ய இருந்தனர். ஒருவர் மோட்டாரை போடுவதற்காக சென்றார். மோட்டோர் போட்டதும் குளத்தில் தண்ணீர் நிரம்பும்போது, திடீரென தெற்கு பக்கம் தூர் வாரி கொட்டப்பட்டிருந்த மண் சரிந்து, சுவரும் சாய்ந்தது. இதில் 4 பேரும் மணலில் சிக்கினர். அங்கு இருந்த பெரிய மரமும் வேரோடு குளத்தில் விழுந்தது.
தகவலறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 4 பேரையும் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சாலிகிராமத்தை சேர்ந்த மதியழகன் (35), ராஜா (27) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். போரூரை சேர்ந்த குமார், சாலிகிராமத்தை சேர்ந்த நடராஜ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர். இதுகுறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்த சம்பவம் மாலை 6 மணி அளவில் நடந்தது. உடனே கோயிலில் ஏற்றப்பட்ட தீபங்கள் அணைக்கப்பட்டு, கோயிலை மூடிவிட்டனர். கடந்த டிசம்பர் மாதம் மகரஜோதியின் போது சிலர் கோயிலின் உள்ளே உள்ள குளத்தின் அருகில் பட்டாசு வெடித்து மாசுபடுத்தி உள்ளனர். இதை மறைக்க அவசர கதியில் தூர்வாரும் பணி நடந்ததாக பக்தர்கள் சிலர் கூறுகின்றனர்.









