SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிர்காலத்தில் பெரும் பேறு காத்திருக்கிறது!

2015-09-09@ 11:32:12

சிறுகதை

லிங்கேஸ்வரனின் மன வாட்டத்தை அவருடைய முகம் சொன்னது. வெகுநாட்கள்வரை ரொம்பவும் சாமர்த்தியமாகத் தன் ஏமாற்றத்தை முகத்திலும்,  சொல்லிலும், செயலிலும் காண்பிக்காமல் அவர் சமாளித்துக் கொண்டார் என்றாலும், இப்போது அறுபதைக் கடந்துவிட்ட நிலையில் உள்ளம் தானாக  வெளிப்படுவதை அவரால் தவிர்க்க முடியவில்லை. இருபது வருடங்களுக்கு மேலாகவே அவருடைய மனவாட்டத்தை அறிந்தவள் அவர் மனைவி,  உமையாள். தான் என்னதான் ஆறுதல் சொன்னாலும் அவரால் அமைதியடைய முடியாது என்று அவளுக்குத் தெரியும்; ஆனாலும் வேறு  வழியில்லாமல் அவ்வப்போது அவரிடம், ‘உங்களுக்கு நான், எனக்கு நீங்கள். இப்படியே இருந்துவிட்டுப் போவோமே, எதற்காக எதிர்கால, அதுவும்  நம்மால் காணமுடியாத ‘புதிர்கால’ குழப்பம்?’ என்று கேட்டு அவரை ஆசுவாசப்படுத்த முனைவாள்.

புதிர்காலம்? ஆமாம், லிங்கேஸ்வரனின் வேதனையே இவ்வுலகின் எதிர்காலத்தைப் பற்றி அல்ல; தன் மரணத்துக்குப் பிறகான ‘எதிர்காலம்’ பற்றிதான்.  இறப்புக்குப் பிறகான காலம் எப்படிப்பட்டது என்பது மனித அறிவுக்கு எட்டாத புதிராக இருப்பதால் உமையாளை பொறுத்தவரை அது புதிர்காலம்!  ஆனாலும், லிங்கேஸ்வரன் தன்னுடைய ஆழ்ந்த ஆன்மிக ஈடுபாட்டின் காரணமாக பிதுர் உலக வாழ்க்கையில் நம்பிக்கை வைத்திருந்தார். அங்கே  உடலை நீத்த ஆன்மாக்கள் வாழ்வதாகவும், அவர்களுக்கு அவர்களுடைய வாரிசுகள் ‘நீத்தார் கடன்களை’ நிறைவேற்ற, அதனால் அவர்கள்  குளிர்கிறார்கள் என்றும் நம்பினார். அப்படிப்பட்ட பேரானந்தம் தன் ஆன்மாவுக்குக் கிடைக்காமல் போய்விடுமே என்று பெரிதும் வேதனைப்பட்டார் அவர்.
 
தனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து தன் தாத்தா, தன் தகப்பனார் இருவரும் அவர்களுடைய இறுதி காலம்வரை தத்தமது மூத்தவர்களுக்கு வருடம் தப்பாமல், அமாவாசை தப்பாமல், தமிழ் மாதப் பிறப்பு தப்பாமல், திதி தப்பாமல் நீத்தார் கடனை செவ்வனே நிறைவேற்றியதை அவர்  உடனிருந்தே பார்த்தவர். அப்படி அந்த சம்பிரதாயத்தை நிறைவேற்றும் கடமை உணர்வு, அப்படியே அவர் ரத்தத்தில் ஊறிவிட்டது ஆனால், தான் தன்  இறுதிக் காலம்வரை தம் முன்னோர்களுக்கு இந்தக் கடனை அனுசரிக்கத் தயாராக இருந்தபோதிலும், தனக்கென ஓர் ஆண் வாரிசு உதிக்காமல்,  தனக்கும், தன் மூதாதையருக்கும் செய்யவேண்டிய புதிர்கால சடங்குகள் நிறைவேற்றப்படாமலேயே போய்விடுமோ என்று பெரிதும் அஞ்சினார் அவர்.

தான் சந்தித்த ஓரிரு ஜோதிடர்கள் தனக்கு நிச்சயம் ஆண் வாரிசு உண்டு என்று அறுதியிட்டுக் கூறியபோது மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்  காத்திருந்தார் அவர். ஆனால், மூன்று முறையும் பெண்ணாகவே பிறந்துவிட்ட பிறகு, அவருக்கு ஜோதிடம் மீதான நம்பிக்கை நீர்த்துப் போனாலும், மரணத்துக்குப் பிறகான ‘வாழ்க்கை’யில் தனக்கு நிம்மதியில்லாமல் போய்விடுமோ என்ற ‘பயம்’ அவரை வாட்டியது. உமையாளுக்கு என்ன  சொல்வதென்றே தெரியவில்லை. ‘இது என்ன பைத்தியக் காரத்தனம்,’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள். கொஞ்சம் அரசல், புரசலாக  லிங்கேஸ்வரனின் மனக்குழப்பம் வெளியே தெரிய வரவே சில உறவினர்களும், நண்பர்களும் வெளிப்படையாகவே அவரை கேலி செய்ய  ஆரம்பித்துவிட்டார்கள்.

‘‘உன் ஆண் வாரிசு உனக்கு நினைவஞ்சலி செலுத்துவதை நீ பார்க்க முடியுமா? ‘நீ’யே இல்லாதுபோன பிறகு அப்புறம் பார்ப்பது என்பது எப்படி?  இப்படிக் கொஞ்சம்கூட பகுத்தறிவுக்குப் பொருந்தாமல் பேசுவதால் யாருக்கு என்ன லாபம்?’’ ‘‘உங்களுக்கெல்லாம் எப்படியோ, என்னைப் பொறுத்தவரை  மகன் வாரிசு இல்லாதது பெரிய இழப்புதான். என் மூதாதையருக்கான அஞ்சலியை எனக்குப் பிறகு யாராலும் தொடர முடியாது என்ற ஏக்கம் எனக்குள்  ஆழமாகப் பதிந்துவிட்டது. அதை யாராலும் மாற்ற முடியாது..’’ என்று வீம்பு பதில் கொடுத்தார் லிங்கேஸ்வரன். அவர் மனைவி உமையாளுக்கோ
இவருடைய இந்தப் போக்கு தன்னுடைய மூன்று பெண் குழந்தைகள் மனசிலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடக்கூடாதே என்று தவிப்பாக  இருந்தது. இந்தக் குழந்தைகள் என்ன செய்யும்? தாங்களே விரும்பியா பெண்களாக ஜனித்தார்கள்?
 
இப்படித்தான் எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்? ஒரு மகன் இல்லையே என்று ஏங்குவதைவிட,  இறைவனால் கொடுக்கப்பட்ட இந்த மூன்று பெண்களையும் கரைசேர்த்து அவர்களுடைய நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்வதுதானே சரியானது? நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும், ‘இப்படிக் குறைபட்டுக்கொண்டு மாய்வதைவிட யாரேனும் ஒரு பையனை தத்து எடுத்துக் கொள்ளேன்.  அவனால் உன் இறுதிக்கால ஆசையும் நிறைவேறும்,’ என்றும் யோசனை சொன்னார்கள். ஆனால், லிங்கேஸ்வரன் அதற்கு உடன்படவில்லை. ‘‘என்  மூன்று பெண் குழந்தைகளுடைய வசதிகளிலும், வாய்ப்புகளிலும் பங்குபோட இன்னொரு வாரிசை நான் தேர்ந்தெடுத்துக்கொள்ள மாட்டேன்,’’ என்று  உறுதியாகச் சொல்லிவிட்டார்.

தன்னுடைய பெண் குழந்தைகளின்மீது இப்படி ஒரு பாசம் வைத்திருக்கும் இதே காரணத்தால்தான் அடுத்த குழந்தையாவது பையனாக இருக்குமா  என்று பரீட்சிக்கவும் அவர் விரும்பவில்லை. ஆனால், பையன் இல்லாத குறை மட்டும் மனசை அரித்துக் கொண்டேயிருந்தது. ‘சரி, தத்துப் பிள்ளையும்  வேண்டாம், இனி ஒரு சொந்தப் பையனுக்காக முயற்சிக்கவும் வேண்டாம் என்ற பட்சத்தில், தேவையில்லாமல் புழுங்கிச் சாவானேன்?’ ‘இந்தச்  சூழ்நிலையில், இந்த ஜன்மத்தில் தனக்கு விதித்தது இதுதான் என்று அமைதியடைய வேண்டியதுதானே!’  என்று ஆளாளுக்கு அவரிடம் தமது  கருத்துகளைத் தெரிவித்தார்கள். இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார் லிங்கேஸ்வரன். பலராலும் பிரபலமாகப் பேசப்பட்ட, மிகவும் சரியாகக்  கணிக்கக்கூடியவராக உள்ள ஒரு ஜோசியரைப் போய்ப் பார்ப்பது என்று தீர்மானித்தார்.
 
ஜோசியர் அவருடைய ஜாதகத்தை வாங்கிப் பார்த்தார். வலது ஆள்காட்டி விரலை கட்டங்களில் ஓட்டினார். நிமிர்ந்து லிங்கேஸ்வரனைக் கூர்மையாகப்  பார்த்தார். ‘‘நீங்கள் அதிர்ஷ்டக்காரர்,’’ என்றார். லிங்கேஸ்வரன் நிமிர்ந்து உட்கார்ந்தார். என்ன சொல்ல வருகிறார் ஜோசியர்? இனிமேலும் ஆண்  வாரிசுக்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறாரா? அவருடைய மனவோட்டத்தைப் படித்தார் ஜோசியர். மெல்ல சிரித்தார். ‘‘இந்த ஜன்மத்தில் உங்களுக்கு  ஆண் வாரிசே கிடையாது,’’ என்றார். ஏற்கெனவே அந்த உண்மையை எதிர்கொள்ளத் தயாராக இருந்த லிங்கேஸ்வரன், அமைதியானார். நாற்காலியில் உள்ளடங்கி அமர்ந்துகொண்டார். ஜோசியர் சொல்லப் போவதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார். ‘‘மோட்சகாரகன் என்று சொல்லப்படுபவர் கேது.  அதாவது, இவர் ஒருவருடைய ஆத்மாவை நேரடியாக மோட்சத்துக்கு அனுப்பி வைப்பார்.

அதாவது, இறைவனோடு ஐக்கியப்படுத்திவிடுவார். உங்கள் ஜாதகப்படி மோட்சஸ்தானமாகிய 12வது இடத்திலேயே, மோட்சகாரனாகிய கேது  அமைந்திருப்பதால், நீங்கள் இறைத்தன்மை பெற்றுவிடுவீர்கள். அதாவது, இனி உங்களுக்கு மனிதப் பிறப்பு கிடையாது; ஏன் எந்தப் பிறப்புமே  கிடையாது. உங்களுக்கு மட்டுமல்ல; உங்கள் மூதாதையர் அனைவருக்குமே உங்களால், உங்களுடைய இந்த அமைப்பால் பூரணத்துவம் கிடைக்கப்  போகிறது. அவர்கள் இனி வருடந்தோறும் யாரிடமிருந்தும் நீத்தார் கடன் நிறைவேற்றுவதால் உண்டாகும் பலனை எதிர்பார்க்கவேண்டியிருக்காது.  ஆமாம், அவர்கள் மோட்ச மண்டலத்திற்கு முன்கூட்டியே போய் உங்களை இனிதே வரவேற்பார்கள்.

கவலைப்படாதீர்கள்.’’ லிங்கேஸ்வரனின் மனக்கூண்டிலிருந்து குழப்பப் பறவை விடுதலை பெற்று ஆனந்தமாக சிறகடித்துப் பறந்தோடியது. ஆனாலும்,  ‘‘இன்னும் எத்தனை நாள்...’’ என்று இழுத்தார். ‘‘அது இறைவன் ரகசியம். அதைச் சொல்ல எனக்கு அதிகாரமும் இல்லை; எனக்குத் தெரியவும்  தெரியாது. இருக்கட்டுமே, உங்களுடைய இறுதி நாள் என்பது நாளையாகவும் இருக்கட்டுமே அல்லது அடுத்த வருடம், அடுத்த ஐந்தாவது வருடம்  என்றும் இருக்கட்டுமே! அதுவரை இறைப்பணி செய்ய கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, மோட்சம் ஏக உங்களை மேலும்,  மேலும் தகுதியாக்கிக்கொள்ளுங்களேன்...’’ புதுத் தெம்புடன் எழுந்தார் லிங்கேஸ்வரன். பெறற்கரிய பெரும் பேற்றினை அடைய தன்னைத்  தயார்படுத்திக் கொள்ளவும், தகுதியாக்கிக் கொள்ளவும் தீர்மானித்துக் கொண்டார்.

பிரபுசங்கர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்