SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்பாளுக்கு பிரதான விழாவான ஆடித்தபசு வரலாறு

2015-07-30@ 10:29:20

ஆடித்தபசு - 30.07.2015

தபசு என்றால் தவம் என பொருள்படும். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கரநாராயணராக வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு திருநாள். இந்த விழா 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருவார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார். அப்போது, விவசாயிகள் விளைபொருட்களை அம்பாளுக்கு காணிக்கையாக அளிப்பர்.

ஆடி மாதத்தில்தான் அன்னை பார்வதி தவம் செய்து ஐயனை மீண்டும் அடைந்தாள். இதனை ஆடித் தபசு என சிறப்பாகக் கொண்டாடுகிறோம். சங்கர நாராயணர் கோயிலில் ஆடித் தபசு, பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சங்கரனும் நாராயணரும் ஒன்று என்று காட்டும் இத்தலத்தில், தபசு இருந்து பலன் அடைந்தவள் அம்பிகை. அம்பிகையின் தவம் பலித்ததனால், பக்தர்களும் தங்கள் பிரார்த்தனை நிறைவேற இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள். நாக அரசர்களான சங்கன் சிவன் மீதும், பதுமன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் சிவன் பெரியவரா, திருமால் பெரியவரா என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர்.

இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு தெரிவிக்க, இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். இதையடுத்து, இருவரும் சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், சிவன், சங்கரலிங்கமாகவும் எழுந்தருளினார். நாகராஜாக்கள் இருவரும் சங்கரலிங்கத்தை வழிபட்டு வந்தனர். சந்திரன் (மதி) போல பொலிவான முகம் கொண்ட அம்பிகை, இங்கு தவம் புரிய வந்தபோது, தேவலோக மாதர்கள் பசுக்கள் வடிவில் அவளுடன் வந்தனர். எனவே இவள், கோமதி என்று பெயர் பெற்றாள். ஆவுடையாம்பிகை என்றும் இவளுக்கு பெயர் உண்டு. திங்கள்கிழமைகளில் இவளுக்கு மலர் பாவாடை, வெள்ளிக் கிழமையில் தங்கப்பாவாடை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர்.

இங்கு அம்பாள் சந்நிதி முன்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை, ஆக்ஞா சக்கரம் என்கின்றனர். மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இந்த சக்கரத்தின் மேல் அமர்ந்தால், நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. சிவன், அம்பாள் சந்நிதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர் சந்நிதி உள்ளது. சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி, காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான். திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது.

இவர் பக்கமுள்ள  திருவாசியில் நாகவடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இந்த சந்நிதியில் காலை பூஜையில் துளசி தீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில் விபூதி தருவர். பூஜையின் போது வில்வம், துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள். சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர். எனவே திருமாலுக்கு உகந்த வகையில் சங்கரநாராயணர் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. இச்சந்நிதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படும். சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். ஆடித்தபசன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியே புறப்பாடாகிறார்.

சுவாமி பிரகாரத்தில் வன்மீகநாதர் சந்நிதி இருக்கிறது. புற்று வடிவில் அமைந்த இச்சந்நிதியில் சிவன் சுயரூபத்துடன் காட்சி தருகிறார். தலைக்கு மேலே குடை பிடித்தபடி இருக்கும் நாகத்தின் மீது இவர் அமர்ந்திருப்பது அபூர்வ அமைப்பு. புற்றுக்குள் இருப்பவர் என்பதால் இவருக்கு இப்பெயர். நாகதோஷம் உள்ளவர்கள் புற்று மீது மஞ்சள் தூவி வேண்டிக் கொள்கிறார்கள். சிவன் சந்நிதி கருவறை சுற்றுச்சுவர் பின்புறத்தில் லிங்கோத்பவர் இருப்பார். சில தலங்களில் திருமால் காட்சி தருவார். ஆனால் இங்கு யோக நரசிம்மர் இருக்கிறார். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. பல் வலி உள்ளவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

சென்னை மாங்காடு காமாட்சி, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் ஆகிய திருத்தலங்களில் அன்னை கோமதியை தவக்கோலத்தில் காணலாம். சங்கரன்கோவில் பாம்புகள் வழிபட்ட கோயில் என்பதால் இங்கு புற்று இருக்கிறது. புற்று மண்தான் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் இந்த மண்ணை நீரில் கரைத்து சாப்பிடுகின்றனர். மேலும் வீடுகளில் பூச்சி, பல்லி, வயல்களில் பாம்புத் தொல்லை இருந்தால் மூலவர் சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அந்தந்த பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை. சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான் லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வர். ஆனால், சங்கரன்கோவிலில் சித்திரை மற்றும் ஐப்பசி மாதப்பிறப்பன்று அன்னாபிஷேகம் செய்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-09-2019

    19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_shankaiii1

    பியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி

  • paris_taksi11

    போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு

  • 18-09-2019

    18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • guiness_sathana

    எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்