SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூரவ ஜன்மன்த்து பந்தம்

2015-05-07@ 10:45:44

 சிறுகதை

மோகன், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவன். நடுத்தர வர்க்கத்தினன். நாணயமானவன். ஒரு சராசரி குடும்பத்தின் அத்தியாவசிய வசதிகளைச் செய்துகொண்டவன். ஆனால், அவனுக்கு ஒரு குறை. அது ஒரு குழந்தை இல்லாததுதான். திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகின்றன. அவன் நாற்பதை எட்டிவிட்டான்; மனைவிக்கும் முப்பத்தெட்டு வயதாகிவிட்டது. இனியும் குழந்தை பிறக்குமா என்பதில் இருவருக்குமே சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. மருத்துவப் பரிசோதனைகள் இருவருமே குழந்தை பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்கள்தான் என்று அறுதியிட்டுச் சொல்லிவிட்டன. ஆனாலும், கரு உருவாகாததற்கு என்ன காரணம் என்று இருவருக்குமே புரியவில்லை.

இயல்பான தாம்பத்திய வாழ்க்கைக்குப் பிறகும், உடலில் எந்தக் குறையும் இல்லை என்று மருத்துவம் சொன்ன பிறகும், கர்ப்பம் தரிக்காததன் வேதனை இருவர் மனதிலும் ஏகமாகப் படிந்திருந்தது. பரிசோதித்த முறை தவறாயிருக்குமோ என்ற சந்தேகத்தில் மேலும் இரு மருத்துவக் கூடங்களில் பரிசோதனை மேற்கொண்ட மோகன், அந்த இடங்களிலிருந்தும் அதே முடிவுகள் வரவே மிகவும் சோர்ந்துபோனான். நண்பன் ஒருவன் ஒரு யோசனை சொன்னான்: ‘‘மோகன், உன்னுடைய வருத்தம் நியாயமானதுதான். குறையென்று எதுவுமில்லாதிருந்தும் உன் நியாயமான எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை என்பது உள்ளபடியே பெரும் துக்கம்தான்.

நீ ஏன் கருத்தரிப்பு மருத்துவமனை எதிலாவது ஆலோசனை கேட்கக்கூடாது?’’ ‘‘அதையும் நான் விசாரித்துவிட்டேன், குமார். ஏகப்பட்ட செலவு, என்னென்னவோ கட்டுப்பாடுகள், விதிமுறைகள். எனக்கென்ன புரியவில்லை என்றால், ஒரு குறையும் இல்லாத நாங்கள் எதற்காக இந்தச் செலவுகளை மேற்கொள்ளவேண்டும் என்பதுதான். அதோடு இந்த சிகிச்சை முறைகள் எங்களை மேலும் பலவீனப்படுத்திவிடுமோ என்றும் அச்சமாக இருக்கிறது. அடிப்படையில் நம்பிக்கை கொள்ளாமல் இந்த சிகிச்சைகளை மேற்கொண்டால் அதற்குப் பலன் இருக்குமா என்ன?’’ ‘‘நீ சொல்வதும் சரிதான்,’’ குமார் சொன்னான். ‘‘சந்தேகத்துடனேயே மேற்கொள்ளும் எந்தச் செயலும் சீராக அமையாதுதான்.

சரி, உனக்கு விருப்பம் இல்லாவிட்டால் அந்த முயற்சி வேண்டாம், ஏதேனும் ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளேன். உனக்கும் ஆறுதலாக இருக்கும்; அந்தக் குழந்தைக்கும் ஆதரவாக இருக்கும்...’’ பளிச்சென்று நிமிர்ந்தான் மோகன். நல்ல யோசனைதானே! நமக்குக் குழந்தை வேண்டும் என்ற ஏக்கத்துக்கு இந்த யோசனை நல்ல வடிகாலாக அமையுமே! காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதோடு, வீண் செலவும், அதனால் மன அழுத்தமும்தானே இதுவரை மிச்சம்! ஒருவேளை இந்த மன அழுத்தத்தாலேயே மனம் ஒன்றாமல் நாங்கள் இருவரும் இருக்கிறோமோ!

அதனாலேயே குழந்தைப் பேறு கிட்டாமலேயே போய் விடுகிறதோ! ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்வதால், இனி மருத்துவம், சிகிச்சை, அதனால் உடல் உபாதை என்ற இம்சைகள் எதுவும் இல்லாமல் போகுமே! பெருமூச்சு விட்டுக்கொண்டான். மனைவியிடம் அந்த யோசனையைச் சொன்னான். முதலில் அவளுடைய கண்களில் பிரகாசம் ஒளிர்ந்தாலும், கூடவே தயக்கமும் தெரிந்தது. ‘‘அது சாத்தியமாகுமா? என்னென்னவோ சட்ட திட்டங்கள் எல்லாம் உண்டு என்று கேள்விப்பட்டேனே...’’ என்று கேட்டாள் மனைவி. ‘‘ஆமாம்,’’ ஆமோதித்தான் மோகன். ‘‘சட்டப்பூர்வமான நடைமுறைகளுக்கு நாம் உட்படத்தான் வேண்டும். அதுதான் நம் ஆதரவை நாடி வரும் குழந்தைக்கு ஆயுள் பாதுகாப்பு.

முதலில் ஏதேனும் ஆதரவற்றோர் நிலையத்தைத் தேட வேண்டும். பிறகு அங்கே நம் விருப்பப்படி ஒரு குழந்தையைத் தேர்வு செய்யவேண்டும். அப்புறம், கோர்ட் மூலமாக அந்தக் குழந்தையைப் பராமரிக்கும் உரிமையைப் பெறவேண்டும். அதன் பிறகுதான் நாம் அந்தக் குழந்தைக்குப் ‘பெற்றோர்’களாவோம், அதுவும் ‘நம்’ குழந்தையாகும்.’’ ‘‘அப்படியானால் ஒரு நல்ல நாளாகப் பார்த்துச் செய்யலாம்,’’ அவள் உடனே அந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்தாள். பிறகு குமாரின் உதவியுடன் ஆதரவற்ற சிறுவர்கள் பராமரிக்கப்படும் மையம் ஒன்றிற்கு தன் மனைவியுடன் சென்றான் மோகன். அங்கே குழந்தைகள் என்னவோ உற்சாகமாக விளையாடிக்கொண்டும் சிரித்துப் பேசிக்கொண்டும், பெரு மகிழ்ச்சியில்தான் ஆழ்ந்திருந்தார்கள்.

தங்களுக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லையே என்ற ஏக்கம் அவர்களது நடவடிக்கைகளில் பிரதி பலிக்கவில்லை. வெகுளித்தனமான, குழந்தைத்தனமான சூழல் அங்கே நிலவியிருந்தது. அவர்களையெல்லாம் பார்த்தபோது மனசு கனத்தது மூவருக்கும். அந்தக் குழந்தைகள் அங்கே வந்து சேர்ந்ததற்கு எத்தனையோ காரணங்கள், கதைகள், பொய்கள், திருட்டுத்தனங்கள், காதல் ஏமாற்றங்கள், திருமணத் தோல்விகள்... மைய மேலாளரைப் பார்த்து விவரம் சொன்னார்கள். கொஞ்சமும் விவரம் தெரியாத சிறு குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ளச் சொல்லி அவர் யோசனை சொன்னார். அந்த வகையில் சிலநாட்களுக்கு முன் வந்து சேர்ந்த ஒரு கைக்குழந்தை அவர்களுடைய தத்துப் பெண்ணாக வளர்க்கப்பட சரியான தேர்வாக அமையும் என்று மேலும் அவர் சொன்னார்.

அதுவும் ஒப்புக்கொள்ளக் கூடியதாக இருந்தது மோகனுக்கு. நன்கு வளர்ந்த பிறகு தான் தத்தெடுக்கப்பட்டவள்தான், பெற்றெடுக்கப்பட்டவள் இல்லை என்ற உண்மை அந்தக் குழந்தைக்குத் தெரிந்தாலும் பரவாயில்லை; அதற்குக் கைக்குழந்தையைத் தத்தெடுப்பதுதான் சரியானது என்றே அவனும் நினைத்தான். பால பருவம் வரையிலாவது அவர்கள்தான் தன்னுடைய பெற்றோர் என்று அந்தக் குழந்தை கருதுவாளேயானால், அதுதான் தங்களுக்கும் பெருத்த ஆறுதலாகவும், நிம்மதியாகவும் இருக்கும் என்றே மோகன் தம்பதி கருதினர். எந்த மன வலியுமின்றி அந்தக் குழந்தையைக் கொஞ்சலாம், சீராட்டி, தாலாட்டி வளர்க்கலாம்...

அடுத்தடுத்த நடவடிக்கைகளை மையத்தின் மேலாளர் எடுத்துச் சொல்ல, குமாரின் உதவியுடன் ஒரு நல்ல நாளில் குழந்தையை மோகன் தம்பதி தத்தெடுத்துக் கொண்டார்கள். ரொம்பவும் ஆசையாக ‘ஆனந்தி’ என்று குழந்தைக்குப் பெயரிட்டார்கள். அந்த ஆறுமாதக் குழந்தையும், தனக்குத் தக்கப் புகலிடம் கிடைத்தது புரிந்ததோ என்னவோ, அழகாகச் சிரித்தது. வாழ்வின் நிறைவை முழுமையாக அனுபவித்தான் மோகன். அவன் மனைவிக்கோ சொல்லவே வேண்டாம். ஆனந்தியை விதவிதமாக அலங்கரித்துப் பார்த்து மகிழ்ந்தாள். கன்னங்கள் வழித்துத் தன் நெற்றிப் பொட்டுகளில் திருஷ்டியை சொடக்கினாள். உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரிடத்திலும், ‘என் மகள், என் ஆனந்தி’ என்று சொல்லிச் சொல்லி ஆனந்தப்பட்டுக் கொண்டாள்.

சில குதர்க்கவாதிகள், ‘ஹுக்கும். உன் சொந்தப் பெண்ணாக்கும்? யாருடையதோ, என்ன ஜாதியோ...’ என்றெல்லாம் விமர்சனம் செய்தபோது ‘‘இது என் குழந்தைதான்,’’ என்று தீர்மானமாகச் சொல்லி, அந்தத் தீர்மானத்தை, ஆனந்தியை மார்போடு இறுகப் பற்றியிருந்த பிணைப்பில் உறுதிப்
படுத்தினாள். பிறகு கூடுமானவரை தன்னை நம்பிக்கை இழக்கச் செய்பவர்களின் தொடர்பைத் துண்டித்துக்கொள்ள ஆரம்பித்தாள். குழந்தை வளர வளர அவளுடைய எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் செலவுகளுக்காக சேமிக்கத் தொடங்கினான் மோகன். நல்ல உத்யோகம், நல்ல சம்பளம் என்றிருந்ததனால் சேமிப்புக்கு பிரச்னையில்லை.

கூடவே ஜோதிட ரீதியாக குழந்தையின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளவும் விரும்பினான். அதையே தன் மனைவியிடம் சொன்னபோது அதை அவள் ஏற்கவில்லை. ‘இப்போதே எதுக்குங்க அதெல்லாம்? ஏதாவது ஏடாகூடமாகச் சொல்லிவிடப்போறாங்க. இப்பதான் நாம நிம்மதியா இருக்கோம். உறவுக்காரங்க சிலபேர் நம்மை சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்கறாங்க; அவங்க வாயை மெல்லறதுக்கு நாமே ஏன் அவங்களுக்கு அவலைத் தரணும்?’ என்று சொல்லித் தயங்கினாள். மோகனுக்கும் அது சரியெனப்பட்டாலும், குழந்தையின் எதிர்காலத்தைத் தெரிந்துகொண்டால் என்ன என்ற ஜோதிட ஆர்வம் அதற்கும் முன்னே வந்து நின்றது.

தன் குழந்தையின் படிப்பு, வேலை அல்லது திருமணம் என்ற எதிர்காலத் திட்டங்களுக்கு யாரேனும் ஜோதிடர் கொஞ்சம் கோடி காட்டினால் அதற்கேற்ப இப்போதே திட்டமிட்டுக்கொள்ளலாமே என்று நினைத்தான். மனைவிக்குத் தெரியாமல் அப்படி ஒரு ஜோதிடரைப் பார்க்கலாம் என்று யோசித்தான். அவரிடம் விவரம் கேட்டுத் தெரிந்துகொண்டபின் அது சொல்லக்கூடியதாக இருந்தால் அவளிடம் சொல்வது; இல்லாவிட்டால் தானே முழுங்கி விடுவது என்று தீர்மானித்தான். இதுபற்றி குமாரிடமும் அவன் எதுவும் தெரிவிக்கவில்லை. மனைவியைப் போலவே அவனும் ஏதாவது முட்டுக்கட்டை போட்டுவிடுவானோ என்று பயந்தான்.

‘ஒருவேளை ஆனந்தி உன் சொந்தக் குழந்தையாக இருந்தால் மனைவி பேச்சை மீறி உன் விருப்பம்போல நடவடிக்கை எடுப்பாயா?’ என்று மனசாட்சி கேட்டது. தத்தாக எடுத்தப் பிள்ளைதானே, ஜோசியர் பாஸிடிவாகச் சொன்னால் அதை ஏற்றுக்கொள்வது, நெகடிவாகச் சொன்னால் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றிருப்பது அல்லது கவலைப்படாமல் இருப்பது - ஏனென்றால் ஆனந்தி உன் சொந்தக் குழந்தை இல்லையே!’ என்று அவனுடைய மனசாட்சி அவனைக் குத்தியது. தலையை சிலுப்பிக்கொண்டு மனசாட்சியை அவன் மறுத்தாலும், ஜோதிடம் பார்த்திட வேண்டும் என்ற ஆவலை மட்டும் அடக்க முடியவில்லை. ஒரு ஜோதிடரைப் போய்ப் பார்த்தான். ஆரம்பத்திலேயே தன் கட்டணம் இத்தனை என்ற வியாபார தொனியில்தான் பேசினார் ஜோதிடர்.

அந்த தோரணையே அவனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ‘சரி, பிரபல ஜோதிடர். அப்படித்தான் பந்தா பண்ணிக்கொள்வார். அவர் தன்னை
எளிமையாகக் காட்டிக்கொண்டால் பிறருக்கு இளக்காரமாகப் போய்விடுவோம் என்று கருதியிருப்பார் போலிருக்கிறது.’ அவர் மீதான ஓர் உயர்ந்த மதிப்புடன் அவர்முன் உட்கார்ந்த மோகனுக்கு அடுத்தடுத்து பெரிய அதிர்ச்சிகளைக் கொடுத்தார் ஜோதிடர். அவன் தத்தெடுத்த குழந்தையால் அவனுக்குத் தீராத மனக்கஷ்டம் வரும் என்றார். அதாவது, அந்தக் குழந்தை வளர்ந்து, பெரியவளாகி மோகனை அவமானப்படும் சூழலுக்கு உட்படுத்துவாளா என்று கேட்டால் அப்போது இல்லையாம்; இப்போதிலிருந்தே அந்தக் கஷ்டம் அவனுக்கு ஏற்பட்டுவிடுமாம்.

அதுவும் உடனடியாக! அப்படி அந்தக் குழந்தையால் என்ன கஷ்டம்தான் வந்துவிட முடியும்? அதிகபட்சம் தான் உடல்நலம் குன்றி மரணமடையலாம். அதுவும் அந்தக் குழந்தையின் ராசி என்று எப்படி அனுமானிக்க முடியும்? தற்போதைய நிலவரப்படி தனக்கு எந்த உடற்குறையும் வருவதற்கான அறிகுறியும் இல்லை... அடுத்து ஜோதிடர் சொன்ன பரிகாரம்தான் அவனுக்குத் தலை சுற்ற வைத்தது: ‘நீங்கள் தத்தெடுத்தக் குழந்தையை விட்டு பிரிந்திருக்க வேண்டும். ஒரு ஐந்து வருடங்களாவது அப்படிப் பிரிந்திருந்தால்தான் தோஷம் விலகும்.’’அதிர்ச்சியால் அப்படியே உறைந்துவிட்டான் மோகன். அந்தக் குழந்தை வந்தபிறகுதான் மனசில் எவ்வளவு ஆனந்தமான நிம்மதி நிலவுகிறது! தன் பாசத்தைக் கொட்டி, சீராட்டி வளர்த்து வரும் அந்தக் குழந்தையைப் பிரிவதாவது!

அதன் மழலைச் சிரிப்பில் மெய்மறந்திருக்கும் சுகானுபவத்துக்கு ஈடு இணை உண்டா! என்னவோ ஏற்கெனவே நன்கு அறிமுகமானாற்போல தன் பிஞ்சுக் கைகளை நீட்டுவதும், மோகன் முகத்தை அப்படியே வருடுவதும், அந்தத் தளிர் ஸ்பரிசத்தால் உடலே சிலிர்ப்பதும், அதனாலேயே கண்களில் நீர் தளும்புவதும், ‘ஒருநாளும் இவளைப் பிரியாத வரம் தா இறைவா’ என்று வேண்டிக்கொள்வதும்... குழந்தையை விட்டு விலகுவதாவது! மனசு கனத்துவிட்டது மோகனுக்கு. மனைவி பேச்சைக் கேட்டிருக்கலாம். இவரைப் பார்க்க வந்திருக்கவே கூடாது என்று தன்னைத் தானே நொந்துகொண்டான். மோகன் ஏதோ பெருஞ்சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு கலக்கமுற்றாள் மனைவி.

இப்படி ஒரு இருண்ட முகத்தோடு அவனை அவள் அதுவரை கண்டதேயில்லை. தாங்கொணா குற்ற உணர்வோடு தான் ஜோதிடரைப் பார்த்ததையும், அவர் சொன்னதையும் அவளிடம் தயங்கித் தயங்கிச் சொன்னான். ‘‘இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன். இப்பவே என்ன அவசரம்? ஏதேனும் உடம்பு சரியில்லேன்னா உடனே டாக்டரைப் பார்க்கறது நியாயம்; ஆனா, யாருக்குமே தெரியாத எதிர்காலத்தைத் தெரிஞ்சுக்க - அதுவும் அப்படியே நடக்குமா நடக்காதாங்கறதே பெரிய ரகசியம் - எதுக்கு இத்தனை அவசரம்!’’ அவள் கண்களிலும் நீர்த்துளிர்த்தது. ஆனந்தியை எப்படிப் பிரிவது? நினைத்துப் பார்க்கவே நெஞ்சில் வலி முண்டுகிறதே!

தற்செயலாக மோகன் வீட்டிற்கு வந்திருந்த குமார், விவரம் தெரிந்துகொண்டான். நிலைமையைப் புரிந்துகொண்டான். அவர்களைப் போலவே அவனுக்கும் மனசு வலித்தது என்றாலும் அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல், ‘‘ஒரே உடல் உபாதைக்கு முதலில் ஒரு மருத்துவரைப் பார்ப்பதும், அவருடைய சிகிச்சையில் திருப்தியில்லாமல் இன்னொரு மருத்துவரைப் பார்ப்பதும் நடப்பதுதானே! அதேபோல இன்னொரு ஜோதிடரைப் பார்த்திடுவோம். எனக்குத் தெரிந்த ஒருவர் இருக்கிறார். பிரபலமானவர். ஆனால், மிகவும் நேர்மையானவர்.  தன்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களின் ஜாதகத்தை மட்டுமல்ல, அவர்களுடைய மணிபர்ஸையும் கணிக்கக் கூடியவர்!

அதனாலேயே அவரவரால் செலவழிக்கக் கூடிய எளிமையான பரிகாரங்களை மட்டுமே சொல்வார். வசதி மிகுந்தவர்களை, ஏழைகளுக்கு ஏராளமாக தானம் செய்யச் சொல்வார். இப்படி ஜோதிடம் மட்டுமல்லாமல், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் அனுசரித்து பலன்களையும், பரிகாரங்களையும் சொல்வதால், அவருக்குப் பலரிடமிருந்தும் ஏகோபித்த பாராட்டு, வரவேற்பு. இவரிடம் ஜாதகம் பார்த்துவிட்டு ஒருவர் போகிறார் என்றால், அவர் நிச்சயம் பத்துப் பேரிடமாவது இந்த ஜோதிடரைப் பற்றிச் சொல்வார். அந்த அளவுக்கு அவர் பலரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அவர் பெயர், பெரியண்ணன்...’’ என்று தகவல் சொன்னான்.

மோகனுக்குக் கொஞ்சம் மூச்சு வந்தது. அவனுக்கென்னவோ தான் பார்த்த ஜோதிடர், யதார்த்தத்துக்கு முரணானவர் என்றே தோன்றியது. ஏற்கெனவே தனக்கு நல்வழிகாட்டிய குமாரின் இந்த யோசனையும் சரியாகத்தான் இருக்கும் என்று முழுமையாக நம்பினான். இவனிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக ஜோதிடரைப் பார்த்தது தவறுதான் என்று மனம் குறுகினான். குமார் வர்ணித்தபடிதான் இந்த ஜோதிடர் விளங்கினார். தனக்கு முன்னால் அமர்ந்திருந்த மோகன் தம்பதியையும், குழந்தை ஆனந்தியையும் தீர்க்கமாகப் பார்த்தார். ‘‘குழந்தை பிறந்த தேதி அல்லது அது காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட தேதியைச் சொல்லுங்கள்,’’ என்றார்.

‘‘குழந்தை பிறந்த தேதி, கிழமை, நேரம் எல்லாமும் இருக்கிறது,’’ மோகன் பரபரப்புடன் சொன்னான். ‘‘ஏனென்றால் இந்தக் குழந்தையை அங்கே விட்டுச் சென்ற தாய் அதை அவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றிருக்கிறாள்,’’ என்ற அவன், ஆனந்தியின் பிறந்தகால விவரங்களைச் சொன்னான்.
ஜோதிடர் கூட்டிக் கழித்து கணக்குப் பார்த்தார். சோழிகளை உருட்டினார். ஒரு தாளில் கட்டங்கள் வரைந்து கிரகங்களைக் குறித்தார். சுட்டு விரலால் ஒவ்வொரு கட்டமாகப் பயணம் செய்தார். மோகனும் அவன் மனைவியும் தவியாய்த் தவித்தார்கள். ‘என்ன சொல்வாரோ, எதைச் சொல்வாரோ..!’
நிமிர்ந்தார் ஜோதிடர். ‘‘உங்கள் பயம் அனாவசியமானது,’’ என்ற அவருடைய ஆறுதல் சொற்களைக் கேட்டவுடனேயே அவர்களுடைய நெஞ்சத்தில் குவிந்திருந்த வேதனைச் சாம்பல் அப்படியே கரைந்தோடியது.

‘‘ஒரு தெய்வீக ரகசியம் சொல்லட்டுமா?’’ ஜோசியர் அவர்களை தீர்க்கமாகப் பார்த்தவாறே மேலும் கேட்டார். அவர்கள் அகமும், முகமும் மலர, கண்களில் புத்தொளி ஒளிர அவரைப் பார்த்தார்கள். ‘‘இந்தக் குழந்தை பூர்வ ஜன்மத்தில் உங்களுடைய சொந்த, நீங்கள் பெற்றெடுத்த குழந்தையேதான். இறைவன் கருணையைப் பாருங்கள். உங்கள் குழந்தை இந்த ஜன்மத்திலும் உங்களிடமே வந்து சேர்ந்துவிட்டது...!’’ அப்படியே மகிழ்ச்சியால் ஸ்தம்பித்துப் போனார்கள் பெற்றோர்கள். ‘அடடா, என்ன பாக்கியம் இது!’ ‘‘ஆகவே இந்தக் குழந்தையால் உங்களுக்கோ அல்லது உங்களால் இந்தக் குழந்தைக்கோ எந்த பாதிப்பும் வரவே வராது. நீங்கள் மூவரும் அமோகமாக இருக்கப்போகிறீர்கள்,’’ என்று சொன்ன ஜோதிடரின் காலைத்தொட்டுக் கும்பிடாத குறையாக மோகன் தம்பதி விடை பெற்றனர்.

ஜோதிடரிடம் அவர்களை அழைத்து வந்த குமாருக்குக் கண்களில் நீர் தளும்பி விட்டது. அவர்கள் போன பிறகு உணர்ச்சிவசப்பட்டு ஜோதிடரின் கைகளைப் பிடித்துக்கொண்டார். ‘‘உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. அதோடு ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வஜன்ம விவரங்களையும் படிக்க முடியும் என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன்,’’ என்று கூறினான். ‘‘உண்மையில் ஜாதகம் பூர்வஜன்மத்தைச் சொல்லாது. ஆனால், மோகன் தம்பதி ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு - அது தத்துப் பிள்ளையாகவும் இருக்கலாம். இப்படி ஒரு மகிழ்ச்சியான சூழலில் அவர்களுக்கு தம் குழந்தை தத்துப் பிள்ளைதான் என்ற சிறு குறுகுறுப்பு இருந்துகொண்டே இருக்கும். அதைப் போக்கத்தான் நான் அப்படிக் கொஞ்சம் ஜோடித்துச் சொன்னேன். இனி அந்தக் குழந்தை மிகவும் சந்தோஷமாக வாழும்; அவர்களும்தான்!’’ என்றார்.   

பிரபுசங்கர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்