SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேரோட்ட மகிமை : ஆணவத்தை அழித்த ஈசன்

2015-04-29@ 15:06:36

திருநாவுக்கரசர் சிவபெருமானை ஆழித்தேர் வித்தகன் என்று குறிப்பிடுகிறார். தாருகாட்சன், கமலாட்சன், வித்தியுன்மாலி ஆகிய திருபுர அசுரர்கள், சிவன் அருள்  பெற்று மூன்று வகை பறக்கும் உலோகக் கோட்டைகளுடன் வலிமையோடு திகழ்ந்தபோது ஆணவமுற்று அனைவரையும் அழிக்க முற்பட்டனர். தன்னால் வரம்  பெற்ற மூவரின் ஆணவத்தை களைய விரும்பிய சிவபெருமான், திருமாலை அசுரர்களுக்கு உபதேசம் செய்ய சொல்லி சிவனை மறக்கும் சிந்தையராய்  செயல்படச்செய்தார்.அப்போது, சிவபெருமான் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறி வில் அம்பு ஏந்தி திருபுரத்தாருடன் போர் புரிய செய்தார். எல்லா தெய்வங்களும்  உடன் செல்ல பிரம்மன் இயக்க சிவபெருமானின் தேர் விரைந்து சென்றது. அப்போது உடன் சென்ற தெய்வங்களுக்கும் ஆணவம் உதித்தது.முழு முதல்  கடவுளுக்கே தங்கள் துணை தேவையானது என்று எண்ணத்தோன்றினர். இதனை மனத்தால் உணர்ந்த சிவபெருமான் கையில் ஆயுதங்கள் ஏதும் இன்றி  புன்னகை புரிந்தார்.

அடுத்த கணமே திரிபுர அசுரர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளும் எரிந்து சாம்பல் ஆயின. அந்த நெருப்பில் திரிபுர அசுரர் மூவரின் ஆணவம் மட்டும்  அல்லாது சிவபெருமானுடன் சென்ற அனைவரின் ஆணவமும் எரிந்து அடங்கியது.சிவன் திருவடிகளை பணிந்த திரிபுர அசுரர் மூவருக்கும் பெருமான்  அருள்புரிந்தார். இருவர் சிவாலயங்களின் வாயிற்காவலர்களாயினர். ஒருவர் ஈசன் ஆடும் ஆடலுக்கு குடமுழுவம் என்ற காலக்கருவியை இசைக்கும் பேறு  பெற்றார். ஈசன் தேரில் பவனி வர அகிலம் அனைத்தும் உய்வு பெற்றது.தேரில் பவனி வந்த ஈசனை திரிபுரந்தாகர் என தொன்னூல்கள் கூறுகின்றன. ஆழித்தேரில்  முதலில் சென்றவன் சர்வேஸ்வரன் என்பதால் சிவாலயங்களில் சித்திரை மாதம் நிகழும் பெரிய திருவிழாக்களின் போது தேர் திருவிழா என்ற கோலாகல  வைபவம் நடக்கிறது. பேரூர்களில் நிகழும் பெரிய கோயில்களில் பஞ்சமூர்த்திகளுக்கு என ஐந்து தேர்கள் வீதிகளில் வலம் வரும் பெரிய தேரில் கந்த மூர்த்தியும்,  மற்ற தேர்களில் அம்பாள்,கணபதி,முருகன்,சண்டீசர் திருமேனிகளும் உலா வரும். தில்லை நடராஜன் கோயில் போன்ற இடங்களில் ஆடவல்லானின் திருமேனி  தேர்களில் உலா வரும்.

தேர்கள் என்பவை நகரும் கோயில்கள். மனிதன் கோயில்களுக்கு சென்று தெய்வத்தை காண்பது ஒரு வகை வழிபாட்டு நெறி. அதே தெய்வம் நகரும்  கோயில்களாகிய தேர்களில் ஏறி நம்மை நோக்கி வீதிகளுக்கு வந்து திருக்காட்சி கொடுப்பது தேர்த் திருவிழாக்களின் தாத்பரியம்.ஜாதி மத பேதங்கள்  இல்லாமலும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகள் இல்லாமலும் ஊரினைக்கூட்டி அனைவரையும் ஒன்று சேர்ப்பது தான் தேர்திருவிழாவின் நோக்கம்.  ஆலயங்கள் நடுவே திகழ நான்கு வீதிகள், வடம் போக்கி தெருக்கள் என்ற அமைப்புடன் பண்டைய திருவூர்கள் அமைந்துள்ளன. ஈசனின் திருமேனியை தேரில்  ஏற்றுவதற்காக தேர்முட்டி என்ற கட்டிட அமைப்பு இருக்கும் அவை திருத்தேர் ஏற்று கூடங்கள் என்று அழைக்கப்பட்டன. மரத்தாலோ அல்லது இரும்பினாலோ  அமைக்கப்பட்ட சக்கரங்களுடன் தேரின் அடிப்பகுதி புராணக்கதைகளை விளக்கும் மரசிற்பங்கள் அணி செய்ய பெற்றிருக்கும்.

மரபீட பகுதிக்கு மேலே பனைமர சப்பைகள் மூங்கில் மற்றும் சவுக்கு மரங்கள் கொண்டு கால்களையும் தேர் கூரை அமைப்பினையும், தேர் கொத்தனார்கள்  உருவாக்குவார்கள் கூரை கட்டுமானம் நிறைவுற்ற பின் பல வண்ணங்களில் அமைந்த தேர் சீலைகள் கொண்டு கூரையை மூடுவர். துணிகளால் செய்யப்பட்ட  தொம்பைகளும் வாச மாலைகளும் கட்டப்படும்.மூங்கில் மற்றும் காகிதங்களால் உருவாக்கப்பட்ட பாம்பு யாளம், பாயும் குதிரைகள் ஆகியவற்றை முகப்பு  பகுதிகளில் இணைப்பர். மரத்தால் ஆன பிரம்மன், தேரை செலுத்துபவராக அங்கு காட்டப்பெற்றிருப்பார். நீண்ட கயிற்று வடங்களை தேருடன் பிணைத்து தேரை  மக்கள் இழுப்பர். தேரில் வீற்றிருக்கும் தெய்வ உருவங்கள் அருகில் பல்வேறு வகையான இசைக்கலைஞர்கள் அமர்ந்து கொண்டு பல்வேறு இசைக்கருவிகளை  இசைப்பதோடு தேவார பாடல்களையும் பாடுவர்.

வேத கோசம் அங்கு முழங்கும் திருகோயில்களில் நிகழ்வது போன்று சோடச மகா பூஜை ஈசனுக்கு நிகழும். தேர்களை வடிவமைப்பதற்காக மான சாரம்,  விஜயதந்திரம், ரதலட்சணம் என்ற பெயர்களில் பல நூல்களை முன்னவர்கள் வகுத்திருக்கின்றனர். வடிவமைப்பைக் கொண்டு தேர்கள் ஏழுவிதமாகப்  பகுக்கப்பட்டுள்ளன. நவஸ்வான்பத்ரக,பிரபஜன பத்ரக, நிவாத பத்ரக, பாவதபத்ரக, பிரசாதபத்ரக, இந்திரபத்ரக, அகிலபத்ரக என ஏழு வகை தேர்கள் பற்றி நூல்கள்  விவரிக்கின்றன.ஆகாச மூர்த்திகளாகிய சிவ பெருமான் ஆடல்வல்லவனாக ஆகாச தேர்களில் உலா செல்கிறான் என்பதை காட்ட கும்பகோணம் நாகேஸ்வரன்  கோயிலில்(குடந்தை கீழ் கோட்டம்) நடராஜர் மண்டபம் தேர்வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 அடி உயரத்தில் திருத்தேர்சக்கரங்கள் ஒற்றை கல்லால்  வடிவமைக்கப்பட்டு அச்சில் ெசருகப்பெற்று காட்சி அளிக்கின்றன.

இரண்டு குதிரைகள் வானில் பறந்தவாறு  தேரை இழுத்து செல்கின்றன. தேர் சக்கரங்கள் ஒவ்வொன்றிலும் பன்னிரு சூரியர்கள் ஆரக்கால்களாக காட்சி  அளிக்கின்றன. அரிய இந்த காட்சியை குடந்தை கீழ் கோட்டம் செல்பவர்கள் காணலாம்.பல திருக்கோயில்கள் தேர் வடிவிலேயே கல்லால் அமைக்கப்பட்டு காட்சி  அளிக்கின்றன. கும்பகோணம் சாரங்கபாணி கோயில், தாராசுரம் கோயில், மேல கடம்பூர் கோயில் போன்றவை தேர்வடிவிலேயே காட்சி அளிக்கின்றன. அந்த  தேர்களை குதிரைகளும் யானைகளும் இழுப்பதாக சிற்ப காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தேர்களை வடிவமைப்பதும் அவற்றில் தெய்வங்களை நிறுத்தி  திருவீதிகளில் உலா வர செய்வதுமாகிய தேர்திருவிழாக்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிகழும் ஒரு புனிதமான செயலாகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-05-2019

  27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2019

  26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்