SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகப்பேறு அளிக்கும் தஞ்சாவூர் சங்கரநாராயணர் கோவில்

2014-11-28@ 10:16:00

கோவில் வரலாறு :

தஞ்சாவூரில் உள்ள அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோவில், தஞ்சாவூர் மேல ராஜ வீதியில், சிவகங்கை பூங்காவுக்கு அருகே உள்ளது. பழமை வாய்ந்த  இந்த ஆலயம் குழந்தைச் செல்வம் வழங்கும் சிறப்பு மிக்க கோவிலாக வணங்கப்பட்டு வருகிறது. சோழ நாட்டில் கரிகாலனுக்குப் பிறகு பட்டத்திற்கு வந்த  மன்னன் பீம சோழன். இவனது மனைவி பெயர் கமல பத்ராஷி. இவள் கேரள தேசத்துப் பெண். பீம சோழன் தனது ஆட்சி காலத்தில், கோவில்களுக்கு பல  திருப்பணிகளைச் செய்தான். மேலும் தன் பெயரால் பீமேஸ்வர ஆலயம் என்ற புதியதொரு ஆலயத்தையும் நிர்மாணம் செய்தான்.

இவ்வாறு பல நற்பணிகளை செய்து வந்தாலும், பீம சோழ மன்னனுக்கு பெரும் வருத்தம் ஒன்று இருந்தது. அது அவனுக்கு குழந்தைச் செல்வம் இல்லை  என்பதுதான். இந்த ஏக்கம் காரணமாக தினமும் இறைவனை எண்ணி வழிபட்டு, தன் வேதனையை கூறி மனைவியுடன் சேர்ந்து மனமுருக பிரார்த்தனை செய்து  வந்தான். கணவன்– மனைவி இருவரின் பிரார்த்தனையும் வீண் போகவில்லை. அவர்களது பிரார்த்தனையைக் கண்டு இறைவன் மனம் கசிந்தான். ஒரு நாள், பீம  சோழனின் மனைவியின் கனவில் இறைவன் காட்சியளித்தார்.

அப்போது, ‘தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கும், கொங்கணேஸ்வரர் ஆலயத்திற்கும் இடையே, சங்கரநாராயணர் என்ற பெயரில், எனக்கும்  விஷ்ணுவுக்கும் சேர்த்து ஒரு கோவிலை கட்டுவிக்க வேண்டும். நான் அங்கு லிங்க ரூபமாக இருக்கிறேன். உன் கணவன் இந்தப் பணியைச் செய்தால்  உங்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்’ எனக் கூறி மறைந்தார். தான் கண்ட கனவை அரசியார், மன்னரிடம் கூறினாள். மன்னருக்கோ அளவற்ற மகிழ்ச்சி  உண்டாயிற்று. இறைவனின் வார்த்தைகளுக்கு வடிவம் கொடுக்க முன்வந்தான்.

உடனடியாக தன் மனைவி மற்றும் மந்திரிகளுடன் இறைவன் குறிப்பிட்ட பகுதிக்கு புறப்பட்டுச் சென்றான். பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கும், கொங்கணேஸ்வரர்  ஆலயத்திற்கும் இடையே ஓரிடத்தில், தன் மனைவி கனவில் கண்டதாக கூறியபடியே ஒரு சிவலிங்கம் இருப்பதை பீம சோழ மன்னன் கண்டான். மனம் மகிழ்ந்து  போன அவன், அந்த இடத்தில் ஒரு கோவிலைக் கட்ட முடிவு செய்தான். அப்போது அங்கு ஒரு அசரீரி ஒலித்தது. ‘மன்னா! நீ இங்கு அமைக்கப்போகும்  கோவிலுக்கு அருகில் ஒரு குளம் உள்ளது.

வைகாசி மாதத்தில் அந்தக் குளத்தில் நீராடி என்னை தரிசித்து வந்தால், உனக்கு மக்கள் செல்வம் உண்டாகும்’ என்று நல்வாக்கு கூறியது, அந்த அசரீரி குரல். பீம சோழன், இறைவனின் அருள்வாக்குப்படியே அந்த இடத்தில் ஒரு அழகான கோவிலைக் கட்டினான். பின்னர் அந்த ஆலயத்தில், தான் கண்டெடுத்த  சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். அதுவே தற்போது உள்ள சங்கரநாராயணர் திருக்கோவில். பீம சோழ மன்னன் அருகே உள்ள குளத்தில் நீராடி, பக்தி  சிரத்தையுடன் சங்கரநாராயணரை வணங்கி வந்தான்.

காலப்போக்கில் அவன் மனைவி கருவுற்றாள். சில மாதங்களில் அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. மன்னரும், அரசியாரும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர்.  சைவ, வைணவ ஒற்றுமையின் பொருட்டு எழுந்தருளியுள்ள மூர்த்தி தான் சங்கர நாராயணர். இவர் ஆலயத்தின் மேற்கு திருச்சுற்றில், தனிச்சன்னிதியில்  அருள்பாலிக்கிறார்.

சங்கர நாராயணர் உருவ அமைப்பு :

சங்கரநாராயணரின் உருவம், ஒரே கல்லில் வலப்பக்கம் ஜடை, கங்கை, சந்திரன், நெற்றிக்கண், திருநீறு, மகர குண்டலம், பாம்புடன் கூடிய ருத்ராட்ச மாலை என  சிவதோற்றத்துடன் காணப்படுகிறார். அதே வலப்பக்கத்தில் மழு, அபய, ஹஸ்தம், புலி தோல் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது. இதே போல் இடதுபுறத்தில்  கிரீடம், திருநாமம், திரு ஆபரணங்கள், சங்கஹஸ்தம், பஞ்சகச்சம் இவற்றுடன் கூடிய திருமாலாகவும் காட்சி அளிக்கிறார். வலதுபுறம் சிவனின் மனைவியான  பார்வதியும், இடதுபுறம் மகாவிஷ்ணுவின் மனைவியான லட்சுமியும் வீற்றிருக்கின்றனர்.

இரண்டு அம்பாளுடன் கூடிய சங்கர நாராயணர் எழுந்தருளியுள்ள கோலம் அபூர்வமானது எனக் கூறுகின்றனர் பக்தர்கள். இந்த ஆலயம் கீழ்திசை நோக்கி  அமைந்துள்ளது. அழகிய ராஜகோபுரத்தை கடந்தவுடன், அகன்று விரிந்த பிரகாரம் உள்ளது. அடுத்துள்ள மகாமண்டப முகப்பில் இரு புறமும் துவாரபாலகர்களின்  திருமேனி உள்ளன. மகாமண்டபத்தின் நடுவே நந்தியும், பலிபீடமும் இருக்கிறது. அதன் வலது புறத்தில் அன்னை பாலாம்பிகை தனிச் சன்னிதியில்  அருள்பாலித்து வருகிறாள். அன்னை நின்ற கோலத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கும் அழகே அழகு. அடுத்துள்ள அர்த்தமண்டபத்தைத் தொடர்ந்து கருவறை  உள்ளது. இங்கு இறைவன் லிங்கத் திருமேனியுடன் கீழ் திசை நோக்கி வீற்றிருக்கிறார்.

கோவில் :

தேவக் கோஷ்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடக்கே துர்க்கை அம்மனும் அருள்பாலிக்கின்றனர். திருச்சுற்றில் தென்புறம் கோணலிங்கர் சன்னிதி  உள்ளது. இந்த தனிச் சன்னிதியில் இரண்டு லிங்கங்கள் இருக்கின்றன. தீராத கவலைகள் தீரவும், மனக் குழப்பங்கள் தீரவும் கோணலிங்கங்களுக்கு அபிஷேக,  ஆராதனைகள் செய்தால் நிச்சயம் தெளிவு பெறலாம் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. திருச்சுற்றின் மேல் திசையில் செல்வ  விநாயகர், நாகர், வள்ளி– தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, ராமர்– சீதை, இலக்குவன், அனுமன், விசுவநாதர், விசாலாட்சி ஆகியோருக்கு தனிச்  சன்னிதிகள் உள்ளன.

விசாலாட்சி சன்னிதியில் ஓர் அம்மையார் அமர்ந்து சிவபெருமானை மலரால் அர்ச்சனை செய்வது போன்ற சிற்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம்  அவ்வையார் எனக் கூறுகின்றனர். வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரின் சன்னிதி இருக்கிறது. பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள்  வீற்றிருக்கின்றனர். அவர்களின் அருகே கால பைரவர், சூரியன், சனீஸ்வரன் திருமேனிகள் உள்ளன. தினசரி நான்கு கால பூஜை நடைபெறுகிறது. ஆலயத்தின்  தலவிருட்சம் வில்வ மரமாகும். அம்பாளின் கருவறை கோஷ்டத்தின் கீழ் திசையில் ஜுரஹரேஸ்வரரின் திருமேனி உள்ளது. நீண்ட நாள் ஜுரத்தால்  பாதிக்கப்பட்டவர்கள், ஜுரஹரேஸ்வரரை வணங்கி, ஆராதனை செய்தால் விரைந்து குணம் பெறலாம் என்று கூறப்படுகிறது.

இந்த ஆலயம் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். குழந்தை பேறு வேண்டி தன்னை  ஆராதிக்கும் பக்தர் களுக்கு சங்கர நாராயணன் அந்த பாக்கியத்தை அளித்து அருள் புரிவது நிஜமே!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்