SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மஹாவிஷ்ணுவையே மகனாகப் பெற்ற மாமுனிவர்!

2014-04-05@ 10:02:42

அத்ரி மலையிலுள்ள சிவாலயத்தின் பின்புறத்தில்தான் அந்த அதிசய பாறை உள்ளது. இந்தப் பாறையினை சுற்றி அமர்ந்து தியானம் செய்தால், நம்மை அறியாமலேயே நமக்குள் அமைதி ஏற்படும். அதற்கு இந்த பாறையில் அருவமாக சித்தர்கள் வாசம் புரிவதுதான் காரணம் என்கிறார்கள். பாறை மீது ராகு-கேது மற்றும் வாசுகி என் னும் நாக தேவதைகள் உள்ளன. பாறையின் மீது நாகக் கன்னி, நாகராஜா என்று  எழுதி வைத்திருக்கிறார்கள். என்ன எழுதியிருந்தாலும்  ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலி முனிவர் உறைந்திருக்கும் இடமே இந்தப் பாறைதான்.

ஆகவேதான் இந்தப் பாறையின் அருகே அமர்ந்து  தியானம் செய்வதை பலரும் விரும்புகின்றனர். அத்ரி முனிவரின் முதல் காலடிபட்ட இடமே இந்தப் பாறைதான். அதனாலேயே அத்ரி மலையின் இதயமாக இந்தப் பாறை கருதப்படுகிறது. இதன்மேல் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிரோட்டம் கொண்டிருக்கின்றன. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு மிகப்பெரிய சூறாவளி இப்பகுதியில் அடித்தது. பல மரங்கள் உடைந்து விழுந்தன. அப்போது ஒரு பெரிய மரம் இந்தப் பாறையின் மீது விழுந்தது. பாறையின் மீது யார் அமர்ந்திருந்தாலும் அதோகதிதான்.

ஆனால் என்ன ஆச்சரியம்! பாறை மீது சிலைகளாக நின்றிருந்த ராகு-கேது மற்றும் நாகராஜாவுக்கு எந்த பாதிப்பும் உண்டாகவில்லை. ஆதிசேஷன் என்னும் பதஞ்சலியின் அம்சமாகவே இங்கு ராகுவும் கேதுவும் வணங்கப்படுகிறார்கள். அதனால்தான் இந்த இடத்திற்கு அத்தனை முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பதஞ்சலி முனிவருக்கு இந்த இடத்தில் அமாவாசை பூஜை மிகச் சிறப்பாக நடக்கிறது. மார்கழி மாதத்தில் வரும்  ரிஷி பஞ்சமி அன்று இவர்களுக்கு பூஜை செய்தால் அனைத்து காரியமும் நிறைவேறிவிடும்.

இந்த பூஜையை மேற்கொள்வதற்காகவே ஒரு குழுவினர் காத்திருக்கிறார்கள். பாப்பான்குளம் டாக்டர் ராமசாமி தலைமையிலான குழுவினர்தான் அவர்கள். மார்கழி மாதம் ரிஷி பஞ்சமியன்று இவர்கள்  இவ்வாறு தொடர்ந்து பூஜை செய்து வருகிறார்கள். பாறையின்மீதுதான் பூஜை. இந்தப் பூஜையால் சப்த ரிஷிகளின் அருள் கிட்டும். இந்தப்  பூஜைப்படி ஒவ்வொரு ரிஷிக்கும் ஒரு மந்திரம் உண்டு. அந்த மந்திரத்தைக் கூறி பூஜை செய்வார்கள். அந்தச் சமயத்தில் இங்கு நாம் பூஜை  செய்தாலோ அல்லது பூஜை நடக்கும்போதோ அங்கு கூடியிருந்தாலோ நம் கர்ம வினை தீரும். ஜீவன் முக்திகான வாயில் திறக்கும்.
 
இந்த சிலைகளுக்கு மாப்பொடியாலும், தேனாலும், மஞ்சள் பொடியாலும், பால், தயிர், திரவியம், இளநீர் முதலிய அபிஷேகம் செய்தால் பிறவா நிலையை அடையலாம் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பாறையின் அருகே சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்துள்ளதாக கருதுகிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருப்பதி மலையில் நடந்த ஒரு சம்பவத்துக்கும் அத்ரி மலைக்கும் தொடர்பு இருந்துள்ளது. அப்போது திருப்பதியில் புரட்டாசி பிரமோற்சவம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. அதை முறையாக நடத்த முடியவில்லை.

தடங்கல் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. திருப்பதியில் கொங்கண சித்தர்தான் திருப்பதி ஏழுமலையானுக்கு பூஜை காரியங்களை செய்து வந்தவர். அடிக்கடி  தடங்கல்கள் ஏற்படுவதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்கள். மஹாவிஷ்ணு, சிவபெருமானிடம் இது பற்றி கேட்டார். சிவபெருமான் சிரித்துக் கொண்டே மைத்துனரை பார்த்து, “கவலைப்படாதீர்கள். இந்தப் பிரச்னை உடனடியாகத் தீரும். தென்பொதிகை அருகில் அத்ரி தபோவனத்தில் அத்ரி மகரிஷி தவமிருக்கிறார். அவரை அழைத்து வந்து யாகம் நடத்துங்கள்.

அனைத்துக் காரியங்களும் சுமுகமாக முடியும்’’ என்று கூறினார். அதன்படியே அத்ரி மகரிஷி திருப்பதிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு மிகப் பெரிதாக நடந்த யாகத்திற்கு தலைமை ஏற்றார். அதன் பிறகு தான் பிரமோற்சவத்திற்கான தடையும் நீங்கியது. புரட்டாசி பிரமோற்சவம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த திருப்பத்துக்கு காரணமான அத்ரி மகரிஷியிடம், “உமக்கு என்ன வேண்டும்“ என்று கேட்டார் எம்பெருமானான நாராயணன். “எனக்கு எதுவும் வேண்டாம். உமது அன்பும் அரவணைப்பும் இருந்தால் போதும்’’ என்றார், அத்ரி.

“இல்லை...  உமக்கு நான் ஏதாவது செய்யவேண்டும்’’ என்றார், விஷ்ணு. “அப்படியென்றால் நீர் எனக்கு மகனாக பிறக்க வேண்டும்’’ என்றார். “அப்படியே ஆகட்டும்’’ என்றார் பெருமான். அதன்படிதான் பதஞ்சலி பிறந்தார். அவர் அனுசுயா தேவியின் கையில் வந்து விழுந்தபோது, பாம்பென்று நினைத்து கையை உதற அவர் பாதத்தில் விழுந்து பதஞ்சலி ஆனார் என்று ஏற்கனவே கூறினோம். அந்த இடம்தான் இந்தப் பாறை என்கிறார்கள். பதஞ்சலி, நாகரூபர். ஞானத்தில் வல்லவர். இவர்தான் இங்கு நாகக் கன்னிகளாகவும், நாக ராஜாவாகவும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

காலசர்ப்ப தோஷம், நாக தோஷம் இவை இரண்டும் நீங்க வேண்டுமெனில் இங்கு வந்துதான் பூஜை செய்யவேண்டும். மெதுவாக அந்தப் பாறையை வணங்கி விட்டுக் கிளம்பினோம். கோயிலின் பின்புறம் மேற்கு நோக்கியுள்ள மஹாவிஷ்ணுவை தரிசித்தோம். இவரின் திருமார்பில் சந்தனம் வைத்து பூஜித்து அதை நெற்றியில் திலகமாக இட்டுக் கொண்டால் திருமணம் தடைப்பட்டவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்கிறார்கள். அத்ரி மலையிலுள்ள விஷ்ணுவால்தான் கஜேந்திர மோட்சம் என்ற சிறப்புமிக்க புராண நிகழ்வு நடந்துள்ளது.

இந்தியாவில் 22 இடங்களில் கஜேந்திர மோட்ச தலம் உள்ளது. ஆனால், அதில் முதன்மை பெற்ற தலமாக விளங்குவது அத்தாள நல்லூர் ஆகும். அத்ரிக்கும் அத்தாளநல்லூருக்கும் தொடர்பு உண்டு. கி.பி. 7ம் நூற்றாண்டில் நம்மாழ்வார் பாசுரத்தில்...

மொய்மாம் பூம்பெரிற் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
பொய்கை கைகாவுக்கருள் செய்த
கார்முகில் போல் வண்ணன் -கர்ணன்
எம்மானைச் சொல்லிப்பாடி எழுந்தும்
பறந்தும் துள்ளாதார் தம்மால் கருமம் ஏன்?
சொல்வீர் தண் கடல் வட்டத்துள்ளீரே...

 
- என்று பாடியுள்ளார். இதில் நம்மாழ்வார் குறிப்பிட்டுள்ள மொய்மாம் பூம் பொய்கை தான் அத்ரியேயாகும். இங்குதான் விஷ்ணு வீற்றிருக்கின்றார். அதைப் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமானவை!

யந்த்ர பூஜையும் பலன்களும்

நம் இந்து மதத்தில் அருவுருவ வழிபாடு என்பது யந்த்ர வழிபாடே ஆகும். மந்த்ர அட்சரங்களை யந்த்ரத்தில் எழுதி, அந்த மந்த்ரங்களை உச்சரிப்பதுடன், எந்த தெய்வத்திற்கான யந்த்ரத்தை பூஜிக்கிறோமோ அந்த தெய்வத்திற்கு உரிய ஸ்லோகங்களை பாராயணம் செய்து நினைத்த பலனை அடையலாம். யந்த்ரத்தை அதற்கு உரிய மந்த்ர த்துடன் செம்பு, வெள்ளி, தங்கம் அல்லது ஐம்பொன்னாலான கெட்டித் தகட்டில் எழுத வேண்டும். பின்னர் அந்த யந்த்ரத்திற்கு உரிய மந்த்ரங்களை ஜெபித்து, அந்த யந்த்ரத்திற்கு பிராண பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

தொடர்ந்து அந்த யந்த்ரத்திற்கு உரிய தெய்வத்தை ஆவாஹனம் செய்ய வேண்டும். அதன் பின்னரே குறிப்பிட்ட முறைகளின்படி அந்த யந்த்ரத்தை பூஜிக்க வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும். ஸ்ரீசக்கர யந்த்ரம் வியாபார வசிய யந்த்ரம், காரிய சித்தி யந்த்ரம், கண்திருஷ்டி யந்த்ரம், ரதபந்த யந்த் ரம், சுதர்சன யந்த்ரம், குபேர எண் யந்த்ரம், காமதேனு யந்த்ரம், சரஸ்வதி யந்த்ரம் போன்ற யந்த்ரங்கள் கிடைக்கும். கூரியர் மூலமும்  பெற்றுக்கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு கே.ஏ. ஸ்ரீலிங்கம், 9791118108 / 9566194840 என்ற எண்களில் மற்றும் www.auantrust.org என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

- முத்தாலங்குறிச்சி காமராசு                       
  படங்கள்: பரமகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்