SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுக வாழ்வளிக்கும் சொர்ணமலை கதிரேசன்

2013-12-11@ 16:00:48

அது ஒரு குன்றுதான். ஆனால் மேலேறிச் சென்றால் ஆளையே தள்ளிவிடும், அங்கே வீசும் காற்று. அது புயலல்ல; பொதிகை மலை உச்சியிலே புறப்பட்டு வரும் தென்றல்தான்! அங்கே கோயில் கொண்டிருக்கும் குமரனைக் காண வரும் பக்தர்கள் மேல் கொண்ட பற்று, பாசத்தில் அப்படியே ஓடோடி வந்து நம்மைத் தழுவிக் கொள்ளும்போது, அந்த அன்பின் வேகம்தான் நம்மைத் தள்ளாடச் செய்கிறது. ஒருவேளை, இந்த தென்றல் தினமும் தரிசிக்க வரும் சொர்ணமலை முருகனை முழுமையாக தரிசிக்க விடாதபடி நாம்தான் தடுக்கிறோமோ!

அந்தக் காற்றில் மிதந்து வரும் சுகந்த நறுமணம் நம் மனதை முழுவதுமாக வருடிவிடும் ஏகாந்தத்தை அங்கே அனுபவிக்கலாம். அப்படியே, அங்கிருந்தே ஜிவ்வென்று பறக்கத் தூண்டும் உற்சாகம் உடலின் ஒவ்வொரு அணுவிலும் புகுந்து கொள்கிறது. இங்கே வருமுன் நமக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு இருந்ததோ, இப்போது உடலே லேசாகிவிட அந்தக் குறை காணாமலேயே போய்விடுகிறதோ என்று சிந்திக்க வைக்கும் அற்புதம். அடிவாரத்தில் விநாயகர், அரசமரத்தடியில் அமர்ந்தபடி, பக்தர்களை வரவேற்று, தன் தம்பி குமரனை வழிபட மலைமீது வழியனுப்பி வைக்கிறார். கோயில் முகப்பு வளைவும் படிகளில் ஏறிச் செல்ல நம்மை வரவேற்கிறது. அண்ணாந்து பார்த்தால் படிகள் அதிகமோ என்றுதான் எண்ண வைக்கும். ஆனால் நடுநடுவே சமதள நீள் படிகளைச் சேர்த்து மொத்தம் 50 படிகள்தான் இருக்கும். எளிதாக ஏறிவிடலாம்.

மேலிருந்து பார்த்தால் வளமான கோவில்பட்டி நகர் அழகுற மிளிர்கிறது. அகத்தியர் தங்கிய பொதிகை மலையிலிருந்து வீசும் தென்றல், அம்மலையின் பல மூலிகை குணங்களையும் சுமந்து வருகிறது. அந்த மணத்தை நிச்சயமாக உணர முடிகிறது. வெறும் காற்றல்ல என்பது புரிகிறது. ஒரு ஐந்து நிமிடம் மூச்சை நன்கு இழுத்து விட்டு, சுவாசித்தோமானால், இரண்டு நாட்களுக்கான பரிசுத்த ஆக்ஸிஜனை நுரையீரல்களில் சேமித்துக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது! கோயில் படியேறி உள்ளே சென்றால், கிழக்கு நோக்கிய கருவறையிலிருந்து நமக்கு தரிசனம் தருகிறது ஒரு வேல்! ஆமாம், ஆறடி உயரத்திற்கு நிமிர்ந்து நிற்கும் வேல்தான். அதுதான் மூலவர்! அடிப்பகுதி அகன்று, முனை கூராகி விண் நோக்கிச் சுட்டும் பாவனை, பரந்த மனதிருந்தால், விரைவினில் உயர்வின அடையலாம் என்பதை உணர்த்துகிறது. அந்த தரிசனமே மனசுக்குத் தெம்பளிக்கிறது. பிரச்னைகள், குழப்பங்கள் எல்லாம் அப்போதே தெளிவாகிவிட்ட நிம்மதி. சூரபத்மன் போன்ற அரக்கர்களை அழித்தொழித்த வேல் அல்லவா, அது நம் கடுவினைகள் எல்லாவற்றையும் நிர்மூலமாக்கும் என்ற நம்பிக்கையும் பொய்க்குமா என்ன? கிருத்திகை நட்சத்திர நாளன்று இந்த வேலுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அன்ன பிரசாதத்தை, மகப் பேறுக்காக ஏங்கும் பெண்கள் உட்கொண்டு, அடுத்த வருடமே தம் பச்சிளங் குழந்தையுடன் வந்து கதிர்வேலனுக்கு நன்றி சொல்கிறார்கள்! அதேபோல செவ்வாய்க்கிழமைகளில் வேலுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, செவ்வரளி மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றி வழிபடும் தொழில் முனைவோர், வெகு விரைவில் தொழில் அபிவிருத்தியும் வளமும் காண்கிறார்கள். இந்தக் கோயில் உருவானது 90 வருடங்களுக்கு முன்னால். தமிழ் வணிகர்கள் இலங்கை சென்று வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். அப்போது அங்கே கதிர்காமத்திலுள்ள முருகனைத் தம் இதய தெய்வமாகத் துதித்து, வழிபட்டு வந்தனர். அவர் அருளால் தம் வியாபாரம் தழைப்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்த அவர்கள், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழகத்திலும் அந்தக் குமரனுக்குக் கோயில் நிர்மாணிக்க விரும்பினார்கள். ஆகவே, கதிர்காம முருகன் கோயிலிலிருந்து ஒரு பிடி மண் எடுத்து வந்து இங்கே, கோவில்பட்டியில் அதை அஸ்திவாரக் கட்டமைப்பில் இட்டு, கோயில் எழுப்பினார்கள்.

வேல் நிற்கும் மூலஸ்தானத்தோடு மாணிக்க விநாயகர், தண்டாயுதபாணி, பைரவர் ஆகியோரும் தனித்தனி சந்நதி கொண்டு பக்தர்கள் வாழ்வைச் செம்மைப்படுத்துகிறார்கள். தன் குழந்தைப் பருவத்திலிருந்தே இந்தக் கோயிலில் வழிபாட்டு நியமங்களை மேற்கொண்டு வந்தவர் எஸ்.மணி. இப்போது இவரது மகன் ஹரிஹர சங்கரநாராயணன் அந்தப் பொறுப்பை சிரமேற்கொண்டுள்ளார். அவரை 9442370758 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சொர்ணமலை என்று அழைக்கப்படும் இம்மலைக்கு அப்பெயர் மிகவும் பொருத்தமானதே. இங்கு வந்து கதிர்வேலனை வணங்கிச் சென்றால், உடல்நலக் கோளாறெல்லாம் நீங்கி, வாழ்வில் வளமும், நிரந்தர மகிழ்ச்சியும் விளையும். இதனால்தான், கோவில்பட்டியில் பெரும்பாலான குடும்பங்களில் கதிர்வேல் முருகன், கதிரேசன், கார்த்திகேயன் என்றெல்லாம் குழந்தைகளுக்குப் பெயரிட்டு, தம் குலம் விளங்க அருள்புரியும் முருகனுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். இந்த மலையையே கதிரேசன் மலை என்றுதான் அழைக்கிறார்கள். தினமும் காலை 6 முதல் 11:30 வரையும் மாலை 4 முதல் 8:30 மணிவரையும் கோயில் திறந்திருக்கிறது.

பவுர்ணமி நாளில் பக்தர்கள் இங்கே கிரிவல பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள். குறைந்தபட்சம் 2000 அன்பர்களாவது இப்படி நடந்து, முருகன் அருளுக்குப் பாத்திரமாகிறார்கள். இப்படி கிரிவலம் வரும் பாதையில் ஒரு குகையைக் காணலாம். இதனை ஒளிர் குகை என்கிறார்கள். வாசல் தெரிகிறது. ஆனால் அது எங்கே இட்டுச் செல்கிறது என்பது இன்றும் புரியாத புதிராகவே உள்ளது. பல முனிவர்கள் தவமிருந்த குகை இது என்கிறார்கள். இன்றும், உள்ளே சித்தர்கள் தவமியற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் நம்புகிறார்கள். ஒரு ஏகாந்த நேரத்தில் அவர்கள் இருப்பதை மெல்லிய அதிர்வலைகள் தெரிவிக்கின்றன என்று அனுபவித்தவர்கள் சொல்கிறார்கள்.  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊருக்குள், அம்பிகை செண்பகவல்லி கோயில் கொண்டு தன்னை நாடி வரும் பக்தர்கள் நலனைப் பராமரிக்கிறாள் என்றால், ஊருக்கு வெளியே அவள் மகன், குன்றின் மீதிருந்தபடி பூவுலக மக்களைத் தன் பார்வைக்குள், கண்ணை இமை காப்பதுபோல காத்து வருகிறான்.

is there a cure for chlamydia phuckedporn.com home std test

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-05-2019

  27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2019

  26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்