SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆத்துக்கரை அம்மன்

2013-12-11@ 16:00:48

சிறுகதை

கட்டிலில் மல்லாந்து படுத்துக்கிடந்தார் கலியமூர்த்தி. ஒரு வாரம் ஓயாமல் அடித்த டைபாய்டு காய்ச்சல் அவர் உடம்பை உருக்குலைந்துப் போட்டிருந்தது. தலை விண்ணென்று தெறித்தது. காலைக் குளிருக்கு மதிக்கடைக்கு போய் ஒரு டீ குடித்தால் தேவலாம் போல இருந்தது. எல்லாவற்றையும்விட அடுத்தவாரம் ஆத்தங்கரை நாச்சிக்கு எப்படி நீர் மோர் வார்த்து ஊற்றப்போகிறோம் என்று நினைத்த போது, கவலைகள் ஓட்டமாய் ஓடிவந்து ஒட்டிக்கொண்டன. கலியமூர்த்தியின் சொந்த கிராமத்தில் இருக்கும் ஆத்தங்கரை நாச்சியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். வருடந்தோறும் ஆடித்திருவிழா ஏக விசேஷமாக இருக்கும். ஏழு ஊர் கூடுகிற விழா அது.

விழாவிற்கு முந்தின நாள் இரவே பக்கத்து ஊர்களில் இருந்து மக்கள் வர ஆரம்பித்து விடுவார்கள். நாற்பது வருடமாக அந்தக் கோயிலின் ஆடித்திருவிழாவிற்கு சென்று நீர்மோர் வார்த்து பக்தர்களுக்கு கொடுத்து வருகிறார் கலியமூர்த்தி. இருபது வயதிருக்கும் போது ஆரம்பித்தது. போனவருடம் வரை எந்தத் தடங்களும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது. இந்த வருடம் அது முடியாமல் போய்விடுமோ என்று பயந்து கிடந்தார். கையில் காசும் இல்லை. உடம்புக்கும் முடியவில்லை என்பதை நினைத்தபோது கண்கள் கலங்கி கசிந்தது. ஆடித்திருவிழா காட்சிகள் அவருக்குள் திரையிட்டன. நீர்மோர் என்றால் சாதாரணமாக இருக்காது. அதற்காக மூன்று நாள் முழுமையாக மெனக்கெடுவார்.

திருவிழாவிற்கு முதல் நாளே பக்கத்திலிருக்கிற அத்திப்புலியூர் கிராமத்திற்கு அதிகாலையிலேயே சென்று விடுவார். அங்கிருக்கின்ற பண்ணையில் கறக்கின்ற பாலை தண்ணீர் கலக்காமல் வாங்கி விடுவார். ஐம்பது லிட்டர் பாலை பெரிய கேனில் அடைத்து தளும்ப தளும்ப கொண்டு வருவார். பிறகு மதியம் அந்தப் பாலைக் காய்ச்சி கொஞ்சம் தயிர் கலந்து பிறை ஊத்தி மூடி வைத்து விடுவார்.  மறுநாள் இரண்டு பெரிய சில்வர் கேன்களில் தயிர் ரெடியாகிவிடும். அன்று மாலையே பஸ் பிடித்து கோயிலுக்கு கிளம்பி விடுவார். ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற ஆத்தங்கரை நாச்சியம்மன் கோயிலில் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் விழா ஏற்பாடுகள் தொடங்கிவிடும்.

பொங்கல் வைப்பவர்கள், முடியெடுத்து நேர்த்திக்கடன் செய்பவர்கள், கிடா வெட்டுபவர்கள், சேவல் அறுப்பவர்கள், அலகு குத்தி ஆடுபவர்கள், தேர் இழுப்பவர்கள், தீச்சட்டி தூக்குபவர்கள், காவடி ஆடுபவர்கள், மண்சோறு திண்பவர்கள், மாவிளக்குப் போடுபவர்கள், காது குத்துபவர்கள், கடலை இறைப்பவர்கள் என்று கோயில் களைகட்டும். சின்னக் கோயில் தான் தீர்த்தா நதியின் தென்கரையில் கிழக்கு நோக்கி அமர்ந்து இருக்கும் மாரியம்மன் தான் ஆத்தங்கரை நாச்சியார். ஒரு பெரிய மொட்டைத் திடலில் தான் விழா நடக்கும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி விட்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு அவரவர் ஊருக்குப் புறப்பட்டு விடுவார்கள்.

ஒரு புதிய பாத்திரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டித் தயிரை முகந்து ஊற்றி கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலப்பார் கலியமூர்த்தி. கொண்டு வந்திருக்கும் எலுமிச்சை பழங்களை தேவையான அளவுக்கு பிழிந்து ஊற்றுவார். ஒரு ஸ்பூன் எடுத்துக் குடித்து டேஸ்ட் பார்ப்பார். டேஸ்ட் பார்க்கும்போதே புளிப்புக்காக கண்களை இடுக்கிக்கொண்டு நல்ல புளிப்பு... சூப்பரா இருக்கு... இந்தாங்க... முதல் டம்ளர்... குடிங்க... என்று பக்கத்தில் இருப்பவர்களிடம் கொடுப்பார்.
பச்சை மிளகாய் காரத்திற்கும், கறிவேப்பிலை - கொத்துமல்லி வாசத்திற்கும், நீர் மோர் வாசம் கோயில் முழுக்க மணக்கும். ஒருவருக்கே எத்தனை டம்ளர் வேண்டுமானாலும் கொடுப்பார். சிலபேர் தண்ணீர் பாட்டில்களில் கூட வாங்கி வீட்டிற்கு எடுத்துச் செல்வார்கள்.

கொளுத்துகிற வெயிலுக்கு இதமாய் நீர்மோர் குடித்துவிட்டு ''ரொம்ப... நல்லாருக்குய்யா'' வருசா வருசம் இந்த ஆத்தங்கரை ஆத்தா புண்ணியத்துல நீர் மோர் வார்த்துக் கொடுத்து நீண்ட நாள் வாழணும்யா... என்று சிலர் வாழ்த்திவிட்டு போகும்போது நீர் மோர் குடிக்காமலேயே வயிறு குளிர்ந்து விடும் கலியமூர்த்திக்கு. தன்னுடைய இரண்டு மகன்களும் கூட இருந்த போது நீர்மோர் கொடுக்க 'கூட மாட' வருவார்கள். அது பெரிய ஒத்தாசையாக இருக்கும். இப்போது இரண்டு பேருக்கும் திருமணம் ஆகி வேலை ஜோலி என்று வெளியூர் போய்விட்ட பிறகு மனைவியோடு சில வருடங்கள் திருவிழாவிற்கு சென்று நீர் மோர் கொடுத்து வந்தார்.

''சின்ன மகனுக்கு குழந்தை பிறந்திருப்பதால், குழந்தையை கவனித்துக் கொள்ள மனைவியும் நெய்வேலி போய்விட்டாள். மனைவி கூட இல்லாததுதான் கை முறிந்தது போல இருந்தது கலியமூர்த்திக்கு. ''மனைவி இருந்திருந்தால் காய்ச்சலுக்கு இந்நேரம் கசாயம் வச்சி கொடுத்திருப்பா... வெளிய போய் காசுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணிருக்கலாம்... இந்தக் காய்ச்சல் காணாம போற மாதிரி ஏதாவது ஒரு மாயம் பண்ணு... மாரியாத்தா... நீர் மோர் ஊத்தறது நின்று போயிடக்கூடாது... ஆத்தா'' என்று நினைத்தபோதே வாசலில் யாரோ நாலைந்து பேர் வந்து நின்றார்கள்.

இங்க யாருய்யா... கலியமூர்த்தி... நான்தான் கலியமூர்த்தி... நீங்கள்லாம் யாரு....? - காய்ச்சலில் நடுங்கிக் கொண்டே கேட்டார். ஐயா காலைலேந்து இந்த ஊர்ல இலவச மருத்துவ முகாம் நடக்குது. கண் பார்வைக் கோளாறு... கைவலி... கால்வலின்னு... ஊரே நம்ம ஆலமரத்து திடல்ல... கூடியிருக்கு... உங்களுக்கு ரொம்ப முடியலன்னு உங்க பக்கத்து வீட்ல இருக்கிற சரவணன் சொன்னார். அதான் உங்களை விட்லயே பார்த்து சிகிச்சை கொடுத்துடலாம்னு வந்திருக்கோம்.
நூறு டிகிரி ஜுரம் இருக்குய்யா... உங்களுக்கு. சூடுதண்ணில இந்த மாத்திரையை போட்டுக்கோங்க... மூணு வேளைக்குத் தர்றோம். ஒரு வாரத்துக்கு பச்சைத்தண்ணி குடிக்காதீங்க...

மாத்திரை விழுங்கிய கொஞ்சம் நேரத்தில் உடம்பு முழுக்க வியர்த்துக் கொட்டியது. விருட்டென்று எழுந்து வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டார். தலைவலி உடம்பு பாரம் எல்லாம் இறங்கி கொஞ்சம் புதிய காற்றை சுவாசிப்பதுபோல் இருந்தது. காய்ச்சல் போய்டுச்சி ஆத்தா.... காசு மட்டும் தான் வேணும் ஆத்தா, பசங்களும் இன்னும் காசு அனுப்பல... ''நூறு நாள் வேலை'' பார்த்த காசும் இன்னும் அக்கவுண்ட்ல ஏறல... கடைசி வீட்டுக்காரரிடம் போய் கைமாத்து கேட்டுப்பாக்கலாம்... கண்களைத் திறக்க முடியாமல் சுவரில் சாய்ந்தபடியே கவலையோடு யோசித்துக் கொண்டிருந்தார் கலியமூர்த்தி.

யாரோ வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு வருவதுபோல் தெரிந்தது. கலியமூர்த்தி தாத்தா என்னை ஞாபகம் இருக்கா...? நான்தான்யா... ஒத்த வீட்டு முருகேசன். ''முருகேசா... எப்படிப்பா... இருக்க...? நீ இப்படி ஒரு காரியம் செஞ்சிட்டு ஊரவிட்டு ஓடிப்போய்டுவன்னு நினைக்கலப்பா...'' முருகேசன் இந்த ஊரில் சீட்டுக் கம்பெனி நடத்திக் கொண்டிருந்தான். நிறைய பேர் அவனிடம் மாதச்சீட்டு சேர்ந்திருந்தார்கள். கலியமூர்த்தியும் அவர் சக்திக்கு ஏற்ற மாதிரி நூறு ரூபாய் சீட்டு சேர்ந்திருந்தார். எல்லா பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிப்போவான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. பத்தாயிரம், இருபதாயிரம் என்று பலபேர் இவனிடம் பணம் கட்டி ஏமாந்து போயிருந்தார்கள்.

கலியமூர்த்தியும் மூவாயிரம் ரூபாய் கட்டியிருந்தார். பல வருசங்களுக்கு முன் ஓடிப்போனவன் இப்போது ஏதோ பதவிக்காக வந்து நிற்கிறான். ''தாத்தா கோச்சுக்காதீங்க தாத்தா... அப்ப இருந்த சூழ்நிலை... பிரச்னை... ஊரைவிட்டு போறதை தவிர வேற வழியில்லாம போய்டுச்சி... தாத்தா... ஆனா... நிச்சயமா உங்களையெல்லாம் ஏமாத்தனும்னு நினைக்கல தாத்தா... ''இன்னைக்கு எல்லாரோட காசையும் கொண்டு வந்திருக்கேன் தாத்தா. முதல்ல உங்களைப் பார்த்துதான் திருப்பிக் கொடுக்கணும்னு வந்திருக்கேன் தாத்தா. உடம்பு சரியில்லாம இருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். இந்தக் காசை வெச்சுக்கங்க தாத்தா. உடம்பை பாத்துக்கங்க...''

ஆடித்திருவிழாவிற்கு அம்மன் கோயிலுக்கு போறீங்களா... தாத்தா...? நல்லபடியா போய் மோர் ஊத்திட்டு வாங்க... நான் இன்னைக்கு ராத்திரியே மெட்ராஸ் கிளம்பணும் தாத்தா. நிறைய பேரை பார்த்து பணத்தை திருப்பிக் கொடுக்கணும். இன்னொரு நாள் வர்றப்ப... சாவகாசமா உட்கார்ந்து பேசறேன் தாத்தா...
கலியமூர்த்தி கையில் பணத்தை திணித்து விட்டு வேகமாக போய்விட்டார் முருகேசன். எல்லாம் நல்லபடியாக நடந்தாலும், இந்த முறை சோதனைமேல் சோதனையாக ஏதோ ஒரு தடை வந்துகொண்டுதான் இருந்தது. இரண்டு கேன்கள் நிறைய தயிரைத் தூக்கிக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் வந்தபோது... பஸ் ஸ்டாண்டில் ஒரு பஸ்கூட இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. பஸ் கிடைக்காமல் பயணிகள் அங்கும் இங்கும் அல்லாடிக் கொண்டிருந்தார்கள்.

உங்களுக்கும் வெவரம் தெரியாதா...? இன்னைக்கு காலைலேந்து அரசாங்க பஸ் டிரைவர் எல்லாம் ஸ்ட்ரைக் பண்றாங்களாம். ரோட்ல ஒரு வண்டியும் ஓடாதாம். ஏதோ அப்பப்ப... ஒரு தனியார் பஸ் தலை காட்டுது... அதுலயும் தாங்க முடியாத கூட்டம். இதுல எப்படி நீங்க இந்த தயிர் கேனை தூக்கிட்டு... அம்பது கிலோ மீட்டர் போய்ச்சேர்றது...? பஸ்சுக்காக காத்திருந்த இன்னொரு பெரியவர் கலியமூர்த்தியிடம் சலிப்புடன் சொல்லிக்கொண்டிருந்தார். ''நைட்டுக்குள்ளே போய் சேர்ந்தாதான் காலைல மோர் ஊத்த முடியும்யா... இப்படி பஸ் காரங்க காலை வாரிவிட்டாங்களே... நான் என்னய்யா... பண்றது, கண்ணீர் முட்டிக்கொண்டே வந்துவிட்டது கலியமூர்த்திக்கு.

நான் ஒண்டியாள்ன்னா... உருண்டு கூட போய்டுவேன்யா... தயிர்க்கேனையும், எடுத்துக்கிட்டு போகணும்யா... ஏழு ஊரு சனங்க தாகம் தணிக்கனும்யா... ஆத்தாளுக்கு இந்தத் தயிர் போய் சேரவில்லைனா என் உயிரே போய்டும்யா... இவ்வளவு தூரம் வந்துட்டேன். இப்படி சோதனை நடக்குதேய்யா... புலம்பித் தள்ளினார் கலியமூர்த்தி. ''ஐயா... அங்க பாருங்க... நீங்க போக வேண்டிய தனியார் பஸ்காரன் வர்றான். போங்க போங்க ஏற்கனவே கூட்டம் ரொம்பி வழியுது... பரவால்ல முட்டி மோதி ஏறுங்க... இதை விட்டீங்கன்னா அந்த ஊருக்கு போக வேற பஸ் இல்லை... ''ஏய் பெரிசு இவ்ளோ பெரிய கேன் வச்சுகிட்டு ஏற முடியாது... தள்ளு... தள்ளு...'' கண்டக்டர் அதட்டினார்.

''தம்பி... சாமி காரியம் தம்பி... ஊரு போய் சேரணும்யா... கொஞ்சம் பெரிய மனசு வை தம்பி.''
''அப்புறம் உன் சாமர்த்தியம் பெருசு...
முடிஞ்சா ஏறிக்கோ...'' பேசிக் கொண்டிருப்பதற்குள் பஸ் புறப்பட்டு விட்டது.
- ஏமாந்து போய் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார் கலியமூர்த்தி.
- ''ஐயா... நீங்க... ஈ கரைக்கா... போறீங்க...?''
- பக்கத்தில் வந்து ஒரு கார் நிற்க... காரில் இருந்தபடியே கேட்டார் டிரைவர்.
- ஆமா... ஆமா... தம்பி...

''நாங்க இங்க... சவாரி வந்தோம்யா... சவாரி இறக்கி விட்டாச்சு... சும்மாதான் திரும்பிப்போறோம்... வாங்கய்யா... நம்ம கார்ல போலாம்...'' ''கார்ல போற அளவுக்கு காசு இல்ல தம்பி...'' நீங்க ஒண்ணும் கார் வாடகை தர வேணாம்ங்கய்யா. பஸ்சுக்கு கொடுக்கற காசு குடுங்க போதும். ''ஏதோ... டீ.... டிபன்... செலவுக்கு தேறினா போதும்.'' இந்த லக்கேஜை வேற ஏத்திக்கணும் தம்பி... ஏத்திக்கலாம்யா... பின்னாடி டிக்கியில் தூக்கிப் போடுங்க... காரில் ஏறி உட்கார்ந்து கொண்டு கழுத்து வியர்வையை துண்டால் துடைத்தபடி முன்னால் பார்த்தார். கார் கண்ணாடியில் அழகாக எழுதப்பட்டிருந்தது. ''ஆத்தங்கரை நாச்சியம்மன் துணை.''

ஆதலையூர் சூரியகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்