SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூலாதாரம்

2013-12-11@ 16:00:48

‘‘அப்போ, நீ முடிவெடுத்துட்டே,  அப்படித்தானே?” அம்மா  அதட்டல் கொஞ்சம், அன்பு கொஞ்சமுமாகக் கேட்டாள். ரகுவிற்கு வியர்த்தது. ”இல்லேம்மா, உங்கிட்டேயும் அப்பா கிட்டேயும் கேட்காம இதுவரை நான் என்ன முடிவெடுத்திருக்கேன்? காலேஜ் நாள்லே இருந்து வேலைக்கு இன்டர்வ்யூ போறவரை உங்க ரெண்டு பேரோட ஆசிகளோடத்தானே வெளியே அடி எடுத்து வைச்சிருக்கேன்....’’ ‘‘சரி காதலிச்சே, ஓகே.  அந்தப் பெண்ணோட பேர் என்ன சொன்னே ? சீதா.....அதுவும் ஓகே. பேர்ப் பொருத்தம் சரி. அது மட்டும் போதுமா? ஜாதகப் பொருத்தம் பாக்க வேண்டாமா?”

‘‘அவங்க வீட்ல இதுலே எல்லாம் நம்பிக்கை இல்லையாம்...” ‘‘ஆனா நமக்கு இருக்கே! அவ நம்ம வீட்லதானே வந்து  வாழணும்? முதல்லே அந்தப் பொண்ணோட ஜாதகத்தை வாங்கிண்டு வா..” ரகு சற்றே தயங்கினான். ‘‘‘ஜாதகம் எங்கிட்டே இருக்கு... நீ கேப்பேன்னு தெரியும்..” ‘‘நல்லவேளை கல்யாணம் பண்ணிண்டு வந்து சொல்லாம முன்னாடியே சொன்னியே” ‘‘எனக்கு ஜாதகத்தைப் பத்தி  எல்லாம்  ஏபிஸிடி  கூடத்தெரியாது. உனக்காகத்தான் வாங்கிண்டு வந்தேன், இந்தா.’’ தன் பௌச்சிலிருந்து  மஞ்சள் தடவிய அந்த ஜாதகத்தை எடுத்துத் தந்தான்.

மீனாட்சி வாங்கிக் கொண்டாள். கடிகார மணி அடித்தது. நல்ல சகுனம்தான். ‘‘நீ சம்மதம் சொல்லிட்டா ஒரு நாள் நாம எல்லாரும் போய்ப் பெண்ணைப் பாத்துட்டு வந்துடலாம். நான் பாத்தாச்சு ஏன்னா எங்க ஆபீஸிலே தானே வேலை பாக்கறா!” அவன் வாக்கியத்தை முடிக்கவில்லை. ‘‘ரகு, இந்தக் கல்யாணம் நடக்காது.’’ என்றாள் மீனாட்சி.

‘‘அம்மா.....!”
‘‘ஆமாம்பா”
‘‘ஏம்மா ஜாகத்தையே பாக்காமலேயே.....”

‘‘அவசியமில்லை.  நட்சத்திரமே சரியில்லை அப்பறம் என்ன ஜாதகம்?”

‘‘என்னம்மா சொல்றே?”

‘‘மூல நட்சத்திரம், பெண்ணுக்கு. ‘பெண் மூலம் நிர்மூலம்’, மாமனார் மாமியாருக்கு ஆகாது....’’

‘‘அம்மா....” ரகு அலறினான்.

‘‘போ, போய் ஜாதகத்தைத் திருப்பிக் கொடுத்துட்டு இந்த மூலநட்சத்திர ஜாதகத்தை  எங்க வீட்ல எடுக்க மாட்டாங்கன்னு சொல்லிடு. உன்னால முடியலேன்னா, போன் நம்பர் கொடு, நான் பேசறேன். தவமிருந்து நாங்க பெத்த பிள்ளைப்பா நீ. நீ எங்களுக்கு சஷ்டி அப்த பூர்த்தி தான் பண்ணணும்; திவசம் பண்ணக் கூடாது....” சற்றுக் கடுமையாகவே சொன்னாள் மீனாட்சி. ரகு சோர்ந்து போனான். சீதாவின் கண்ணீர் விழிகள் இவன் கண்களில் தெரிந்தன.
‘‘நம்ம ரெண்டு பேருக்கும் பேர்ப் பொருத்தம்  ரொம்ப சரியா இருக்கு இல்லை?” என்று சீதா கேட்டபோது ரகு சந்தோஷமாக சிரித்திருக்கிறான்.

சோர்வுடன் தன் அறைக்குத் திரும்பினான். உடம்பு சுட்டது மனமும்தான். பேசாமல் நாலு நாட்களுக்கு லீவு போட்டுவிட்டு வீட்டிலேயே இருக்க வேண்டியதுதான். ஆனால், மன அலைகள் ஓயாதே... ‘கால் நனையாமல் கடலைக் கடக்க முடியாது; கண் நனையாமல் வாழ்வையும்  கடக்க முடியாது’ - எங்கோ படித்த வாசகங்கள். நான் எதோடு சேர்த்தி? அன்று, வீடு திமிலோகப் பட்டது. ரகுவின் தாய் மீனாட்சியின் சிறுவயதுத் தோழி கௌரி, துபாயிலிருந்து பல வருடங்களுக்குப் பிறகு வருகிறாளாம். அவள் பிள்ளைக்கு இங்கு மாற்றலாகிவிட்டதாம். சினேகிதியின் வீட்டில் ஒரு வாரம் தங்கப் போகிறாளாம்.

பையனும் அப்பாவும்  எல்லாம் ஒயிண்ட் அப் செய்துகொண்டு வர ஒரு வாரமாகுமாம். அவர்கள் வந்த பிறகு  அவர்கள் அனைவரும் சர்வீஸ் அபார்ட்மெண்ட்டுக்குப் போய்விடுவார்களாம். வீடே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. கர்ட்டன்கள் மாற்றப்பட்டன சோபா செட்டுக்கள் புதிய உடைகளுடன்  பளபளத்தன. வீட்டில் ஒரு இடத்தில்கூட  ஒட்டடை இல்லை. பாத்ரூம்கூட பளிச் விளம்பரங்களில் காண்பிக்கப்படுவதுபோல ஒளிர்ந்தது! துபாய் வருகை இல்லையா! ‘‘உனக்கு ஞாபகம் இருக்கா ரகு? நாம மதுரையிலே இருந்தப்ப நம்ம வீட்டுக்கு எதிர் வீடுதான் கௌரியோட வீடு. நீ அடிக்கடி அவ வீட்டுக்குப் போயிடுவே. அப்போ நீ... சின்னப் பையன்”  அம்மா நினைவுபடுத்தினாள்.

ஆ.... நினைவுக்கு வருகிறது. கௌரி மாமி நன்றாகச் சமைப்பாள். ருசி ருசியாக பட்சணம் செய்வாள். மாமி வீட்டில் நெய் வாசனை அடித்தால் ரகு அங்குதான் இருப்பான். மைசூர்பாகு, முறுக்கு, அதிரசம்... கௌரி சிரிப்பாள். “இவன் எங்க  வீட்டுக் கண்ணன். உங்களுக்குத்தான் ரகு, ஆனால் எனக்குக்  கண்ணன்” என்பாள். அந்த மாமியா வரப் போகிறாள்? கௌரி வந்தாள். ‘‘அட, ரகுவா இது... தப்பு, தப்பு,  கண்ணன்...! எப்படி வளந்துட்டே? உனக்கு ஷேவிங்  க்ரீம்,   மீனா உனக்கு  பர்ஃப்யூம்...’’ வீடு முழுவதும்  அவள் அளித்தப் பரிசுப் பொருட்கள். ‘‘ஆபீஸ் இல்லையா?” ரகுவிடம் கேட்டாள் கௌரி.

மீனாட்சி முந்திக் கொண்டாள். ‘‘நீ வரப் போறேன்னு நான் தான் லீவு போடச் சொன்னேன். இந்த ஊருக்கு இப்பத்தானே வரே? ஊர் சுத்திப் பார்க்க வேண்டாமா? இந்தக் கோவையிலே எத்தனை இடம் இருக்கு தெரியுமா? ஈச்சனாரி பிள்ளையார், மருதமலை,  அப்பறம் கோனியம்மன் கோவில்...” வரிசையாகக் கோவையின் பெருமைகளை அடுக்கினாள். அடுத்த சில நாட்கள் வீடு கல கலவென்றிருந்தது. ரகு லீவு போட்டதும் ஒரு விதத்தில் நல்லதுதான். தன் செல்லை ஆப் செய்து தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தான். கோயில்,  குளம், ஹோட்டல் விருந்து என்று நாட்கள் பறந்து விட்டன.

அன்று, கௌரியும் மீனாட்சியும் தனிமையில்  பேசிக் கொண்டிருந்தனர். ‘‘மீனா என் பையனுக்கும் வயசாச்சு. அவன் இந்தியா வந்ததும் அவனுக்கு ஒரு கல்யாண ஏற்பாடு பண்ணிடணும்...” மீனாட்சி நிதானமாகச் சொன்னாள்: ‘‘அவசரப்படாதே கௌரி. கல்யாணம்கிறது ஆயிரம் காலத்துப் பயிர். ஜாதகப் பொருத்தம் பாத்து...’’ ‘‘ரெண்டு நாள்லே அப்பாவும் பையனும் வரப் போறாங்க... அதுக்குள்ளே நாம ஒரு பொண்ணைப் போய்ப் பாக்கணும்..” ‘‘என்ன சொல்றே கௌரி?”
‘‘இதோ பார், என் கையில் ஒரு ஜாதகம் வந்திருக்கு. நல்ல இடம். பெண் வேலையிலே இருக்கா. என் பையனுக்கு  ஒர்க்கிங் உமன் தான் வேணுமாம். ஜாதகத்தைக் கொண்டுவந்திருக்கேன்.

அட்ரஸ் கூட அதுலே இருக்கு... இந்த ஊர்தான்....” பேசியபடியே ஜாதகத்தை  கௌரி தர,  மீனாட்சி வாங்கிக் கொண்டாள். ஜாதகத்தைப் பார்த்தாள் மீனாட்சி. அதே ஜாதகம்...    பெண் பெயர், சீதா! மூல நட்சத்திரம்! பளிச்சென்று, ‘‘இந்த ஜாதகம் வேண்டாம், கௌரி’’ என்றாள். ‘‘ஏன்?’’ ‘‘பெண் வேலையில் இருந்தாப் போதுமா? நீங்க உசிரோட இருக்க வேண்டாமா?” ‘‘என்ன சொல்றே நீ?” பதறிப்போனாள் கௌரி. ‘‘மூல நட்சத்திர ஜாதகம்; மாமனார் மாமியாருக்கு ஆகாது...” அதைக் கேட்டு கௌரி பெரிதாகச் சிரித்தாள். ‘‘இந்தப் பழ மொழியையெல்லாம் நீ நம்பறியா?” ‘‘நம்பாம? அனுபவத்தில்தானே சொல்லியிருக்காங்க?’’
‘‘ஜோசியம் ஒரு விஞ்ஞானம்தான், நான் நம்பறேன்.

ஆனா, இது போல பழமொழியெல்லாம் பின்னால வந்தவங்க ரைமிங்கிற்காகச் சொன்னது. அதுக்கெல்லாம் அர்த்தமே இல்லை. எங்கே பூராடத்தை வெச்சு ஒரு பழமொழி சொல்வாங்களே, அதைச் சொல்லு?” ‘‘உம்...‘பூராடம் நூலாடாது’....” ‘‘அதாவது, இந்தப் பழமொழிப்படி, பூராட நட்சத்திரப் பெண் சீக்கிரம் விதவை ஆயிடுவா, அதுதானே அர்த்தம்?...’’ மீனாட்சி  பேசாமல் இருந்தாள். ‘‘என் நட்சத்திரம் என்ன தெரியுமா? பூராடம்! இன்னும் நாலஞ்சு வருஷங்கள்ல சஷ்டி அப்த பூர்த்தி பண்ணிக்கப் போறோம்; சதாபிஷேகமும் பண்ணிப்போம். இந்தப்  பழமொழிகளை நம்பாதே.  மூல அர்த்தம் மஞ்சள் நூல் எனும் தாலி ஆடாமல் ஸ்ட்ராங்கா இருக்குங்கறதுதான்.

ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்கிறது தப்பு. பின் மூலம் அதாவது, மூலநட்சத்திரத்தின் பின் பாதியில் பிறந்தால் எதிரிகள் நிர்மூலமாகி விடுவார்கள், இதுதான் சரியான அர்த்தம். அவிட்டத்திலே பிறந்தா தவிட்டுப் பானையெல்லாம் தங்கம்னு சொல்வாங்க. என் மாமா ஒருத்தருக்கு அவிட்ட நட்சத்திரம். தரித்திரப் பட்டுச் செத்தார். ஏதோ ரைமிங்கிற்காகச் சொன்னதையெல்லம் சீரியஸா எடுத்துக்காதே...” பேசிக்கொண்டிருக்கும்போதே டெலிபோன் மணி அடித்தது. மீனாட்சி பிரமித்துப்போய்  அமர்ந்திருந்தாள். அன்று, விடுப்புக்குப் பிறகு ரகு ஆபீஸ் கிளம்பும் நாள். ஏற்கெனவே கௌரி விடைபெற்றுப் போய்விட்டதால் வீடே வெறிச்சென்று இருந்தது.

மீனாட்சி ரகுவின் அருகில் வந்தாள். ‘‘ரகு..  அந்தப் பெண்...  சீதா... ஆபீஸ் போனதும் அவ கிட்டே சொல்லு, இன்னிக்கு சாயங்காலம் நானும் அப்பாவும் அவளைப் பெண் பார்க்க வறோம்னு சொல்லு. சீக்கிரம் நிச்சியதார்த்தம்  வைச்சுக்கலாம்னும்  சொல்லு.. அப்பறம்  வேற யார்கிட்டேயும் எந்த வாக்கும்  கொடுத்துட வேண்டாம்னு அவ அப்பா அம்மா கிட்டே சொல்லச் சொல்லு...” ரகு திகைத்தான். மகிழ்ச்சியுடன்  கிளம்பினான். ‘‘கண்டேன் சீதையை...’’ மனம் பாடியது. கடவுளே மாமியாக வந்து தன் காதலைக் காப்பாற்றிய அருளைக் கண்டு அவன் மனம் விம்மினான். கடவுளுக்கும், மாமிக்கும் மானசீகமாக நன்றி சொன்னான்.

விமலா ரமணி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்