SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருத்தணிகை விநாயகர்!

2013-12-11@ 16:00:48

சென்னை-பழவந்தாங்கலில் குமரன் தெருவில் இருக்கிறது தணிகை வேம்படி சக்தி விநாயகர் திருக்கோயில். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 ந்தேதி முருகன் தலங்களில் வெகு விமரிசையாக படி உற்சவம் நடக்கிறது. தன் நண்பர்களோடு திருத்தணி படி உற் சவத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டவர் சென்னை பழவந்தாங்கலைச் சேர்ந்த சி.கே. ராமலிங்கம். ஒரு முறை அவ்வாறு போன ராமலிங்கம்  குழுவினர் திருத்தணி கோயில் குளக்கரையில் சில விநாயகர் சிலையைக் கண்டார்கள். அவர், ‘நானும் உங்களோடு வருகிறேன்’ என்று சொல்வது  போல இருக்க, ராமலிங்கம் அதை ஆசையாய் அள்ளி எடுத்தார்.

அப்படியே தூக்கி தலையில் வைத்துக் கொண்டு திருத்தணியிலிருந்து பழவந்தாங்க லுக்கு நடந்தே கொண்டு வந்தார். வேம்புலி அம்மன் கோயிலுக்கு பின்னால் சற்று தொலைவில் ஒரு கிணறு. அதையொட்டி இருந்த மிகப் பெரிய  வேப்பமரத்தருகே வசித்த ஓர் அன்பரின் அனுமதியோடு அந்த வேப்பமரத்தடியில் அந்த விநாயகர் அமர்த்தப்பட்டார். தணிகையிலிருந்து வந்தவர் என்பதாலும் வேப்பமரத்தடியில் உள்ளதாலும் இவருக்குத் ‘தணிகை வேம்படி சக்தி விநாயகர்’ என்று பெயர் சூட்டினார் கள். அப்போது இங்கு வருகை தந்த காஞ்சி மகா பெரியவர், இந்த விநாயகருக்கு ஆரத்தி காட்டி, இத்தலம் நல்ல முறையில் பிரபலமாகும் என்று ஆசீர்வதித்தார். இன்று ஆலயம் மிக அழகாக, திருமண மண்டபத்தோடு விளங்குகிறது.

கோயில் சிறியதுதான். உள்ளே சென்றவுடன் கருவறையில் சக்தி விநாயகரை தரிசிக்கிறோம். இவருக்குக் கொஞ்சம் அறுகம்புல் வைத்து வழிபட நல்ல  கல்வி, வேலை கிடைப்பது உறுதி என்கிறார்கள். கல்யாணமாக வேண்டிய ஆண்களும் பெண்களும் தொடர்ந்து 48 நாள் இவருக்கு தீபமேற்றி வழிபட,  விரைவில் திருமணம் நடந்தேறுகிறதாம். பிராகாரத்தில்  சீதா-லட்சுமண சமேதராய் ராமனும் அவருக்கு எதிரே அனுமனும் வீற்றிருக்கிறார்கள். திருச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, நாகர், நவகிரகங்கள் அருள்கிறார்கள். அண்ணனுக்கு அருகிலேயே வள்ளி-தெய்வானையோடு சுப்பிரமணியரும் இருக்கிறார்.

கார்த்திகை தினத்தில் இவருக்கு தேனபிஷேகம் செய்து வழிபட்டால் நோய் நீங்கும் என்கிறார்கள். இத்தலத்தில் சதுர்த்தி, சங்கட ஹர சதுர்த்தி தினங்களில் பக்தர்கள் பெருந்திரளாகக் குழுமியிருப்பார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் இங்கு வந்து அன்னதானம் செய்து  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். வேம்பும் வில்வமும் தல விருட்சமாக உள்ள இத்தலத்தில் அருளை வாரி வாரி வழங்குகிறார் தணிகை  வேம்படி சக்தி விநாயகர். சென்னை கடற்கரை-தாம்பரம் ரயில் மார்க்கத்தில் பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து பத்து நிமிட நடைதூரத்தில் இருக்கிறது இத்தலம்.

எஸ்.ஆர்.செந்தில்குமார்

படம்: ஆர்.சந்திரசேகர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • adayaru_makkal_kumbha1

  அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்

 • oranguttan_monkey111

  50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு

 • malai_vangam11196

  196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

 • amerikaa_aathal11

  900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்

 • 20-06-2019

  20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்