SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இது பூர்வ ஜன்மத்து பந்தம்!

2013-12-11@ 16:00:48

அது, குடும்பத்துப் பெரியவர்களுக்குக் கொஞ்சம்கூட உடன்பாடு இல்லாத விஷயமாகப் போய்விட்டது. பேச ஆரம்பித்த முதல் வாக்கியமே அவர்களைத் துள்ளிக் குதிக்க வைத்துவிட்டது. அந்தப் பாரம்பரியத்துக்கே சிறிதும் பொருந்தாத புது வழிமுறை அது என்று சொல்லி ஏகத்துக்கும் சாடிவிட்டார்கள். குலசேகரனின் முகம் இறுகிவிட்டது. மெல்ல மனைவியைப் பார்த்தான். அவள் முகமும் இருண்டுவிட்டது. ‘இல்லை’ என்று ஒன்று தீர்மானமாகத் தெரிந்துவிட்ட பிறகு, அதற்கு மாற்றுவழியை யோசிப்பதுதானே புத்திசாலித்தனம்? அதைத்தான் குலசேகரன் செய்தான். ஆனால் அது பெரியவர்களின் உணர்வுகளைப் பெரிதாக பாதித்துவிட்டது.

இத்தனைக்கும் அந்த முடிவை அவன் சட்டென்று எடுத்துவிடவில்லை. மூன்று, நான்கு வருடங்களாகவே யோசித்துதான் இந்தத் தீர்மானத்துக்கு வந்திருக்கிறான். இதற்கு அவனுடைய மனைவி, சுந்தரவல்லியின் சம்மதமும் அவனுக்குக் கிடைத்தது. இருந்தாலும், குடும்பத்துப் பெரியவர்களின் ஆசீர்வாதமும் இருந்தால் தன் எண்ணம் எந்தக் குறையுமில்லாமல் ஈடேறும் என்று பெரிதும் எதிர்பார்த்தான். அதில்தான் எதிர்பாராத இடி விழுந்தது. அவனுக்குத் திருமணமானதிலிருந்து பத்து வருடங்களாக அவர்களும் ஒவ்வொரு வருடமும் எதிர்பார்த்து காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு மேலும் காத்திருப்பது சரியல்ல என்று அவர்களுக்குத் தோன்றவேயில்லை.

ஏதாவது தெய்வாதீனம் நடக்கும், அற்புதம் விளையும், எதிர்பார்த்த பலனும் கிட்டும் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். ‘‘நம்ம ஜோசியர் சொன்ன பரிகாரங்களைப் பண்ணிகிட்டு வா குலசேகரா, நிச்சயம் நம் குலம் விளங்க ஒரு குழந்தை உனக்குப் பிறக்கும்’’ என்று அவர்கள் அவனுக்கு அறிவுரை சொன்னார்கள். குலசேகரனும் தன் மனைவியுடன் கொஞ்சமும் சளைக்காமல் எல்லா பரிகாரங்களையும் மேற்கொண்டான். ஆனால், பலனைத்தான் காணோம். மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம் என்று நினைத்தால் அதற்கும் சில பெரியவர்கள் குறுக்கே நின்றார்கள்.

‘‘இப்படி டாக்டர்கிட்ட போய், ‘எனக்கு என்ன குறை?’ என்று கேட்டாயானால், அந்த விஷயம் ஊரெல்லாம் பரவிவிடும். அப்புறம் அவனவன் வம்பு பேச ஆரம்பிப்பான். நம்ம குடும்ப கௌரவம் என்னாகிறது?’’ என்று வெதும்பலுடன் கேட்டார்கள். ‘‘இப்ப மட்டும் என்ன வாழ்கிறதாம்? எங்களுக்குப் பிள்ளை இல்லேங்கற குறை ஊரெல்லாம் தெரியாதாக்கும்? இப்ப மட்டும் நம்ம குடும்பத்தைப் பத்தி வம்பு பேசாமலா இருக்காங்க?’’ என்று குலசேகரன் சற்றே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவர்களிடம் திருப்பிக் கேட்டான்.

அவனுடைய ஏக்கத்தைப் புரிந்து கொள்ளாத பெரியவர்கள் அவன் எந்த முடிவுக்கும் போய்விடாதபடி பார்த்துக்கொண்டு காலத்தை ஓட்டினார்களே தவிர, எந்த உருப்படியான நல்ல யோசனையும் வழங்க முன் வரவில்லை. இந்த எதிர்ப்பில் குலசேகரனின் பெற்றோர் மட்டுமல்லாமல், சுந்தரவல்லியின் பெற்றோரும் கூட்டணி அமைத்து கொண்டதுதான் இந்த தம்பதிக்கு பெருத்த ஏமாற்றமாகப் போய்விட்டது. தங்கள் எண்ணம் ஈடேற எந்தத் தரப்பிலாவது பச்சைக் கொடி காட்டப்படும் என்று பெரிதும் எதிர்பார்த்த அவர்களுக்கு மனம் விட்டுத்தான் போயிற்று.

வழக்கம்போல மருமகள்தான் குறையுள்ளவள், அவளுக்குதான் தன் குடும்பத்துக்கு ஒரு வாரிசை உருவாக்க உடல் திராணியில்லை என்ற ரீதியில் பெரியவர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்தக் குற்றச்சாட்டு குலசேகரனுக்கு ஒரு வாய்ப்பாகவே அமைந்துவிட்டது. ‘‘சுந்தரவல்லிக்கு பிள்ளை பெற்றுக் கொடுக்கும் சக்தி இல்லை என்கிறீர்கள். அது உண்மையா, பொய்யா என்று நம்மில் யாருக்குமே தெரியாது. அதை மருத்துவ ரீதியாக நிரூபித்து விடலாமே?’’ என்று கேட்டான் அவன். இந்த வாதத்தைக் கேட்டு சுந்தரவல்லியே திடுக்கிட்டாள். ‘‘அப்படி மருத்துவ ரீதியாக நான் மலடி என்று நிரூபணமானால் என்னை முற்றிலுமாக உங்க வீட்டிலே புறக்கணிச்சுடுவாங்களே!

அதுக்கப்புறம் உங்களுக்கு மறுமணம், அந்த வாய்ப்பாவது வாரிசு கொடுக்குமா என்றெல்லாமும் பேசவும், நடவடிக்கை எடுக்கவும் ஆரம்பிப்பார்களே!’’ என்று அவனிடம் கேட்டு மறுகினாள். ‘‘அப்படி நீ குறையுள்ளவள் என்று மருத்துவர் சொல்லிவிட்டாலும், நான் உன்னை எந்த நிலையிலும் கைவிட மாட்டேன் சுந்தரவல்லி. எதற்காக இந்த மருத்துவப் பரிசோதனை செய்யச் சொல்கிறேன் என்றால், இந்த சாக்கில் நான் என்னையும் பரிசோதித்துக்கொள்ளலாம். குறை என்னிடமிருந்தால் நீ அபவாதத்திலிருந்து தப்பலாமல்லவா?’’ என்று கேட்டான் குலசேகரன்.

அப்படியே நெகிழ்ந்துவிட்டாள் சுந்தரவல்லி. ‘‘கடவுளே, குறை என்னிடமே இருக்க வேண்டுமே!’’ என்று வெளிப்படையாகவே கடவுளிடம் வேண்டிக்கொண்டாள்.
ஊரிலேயே மருத்துவரைப் பார்த்தால் அதற்கும் பெரியவர்கள் அனுமதிக்கமாட்டார்கள் அல்லது தங்களை எதிர்த்து அப்படிச் செய்ததால் மிகுந்த மனவருத்தம் அடைவார்கள் என்றெண்ணிய குலசேகரன், சுந்தரவல்லியுடன் வெளியூரில் பெரிய மருத்துவமனைக்குச் சென்று பார்த்தான். அந்த மருத்துவமனை பரிசோதனை முடிவுகள், குலசேகரனே குறையுள்ளவன் என்று அறிவித்தன. அதைப் பார்த்து குலசேகரன் வருத்தப்பட்டான்; சுந்தரவல்லியோ பெருத்த மன அழுத்தத்துக்கு ஆட்பட்டாள். இந்த உண்மையைத் தெரிந்துகொள்ளும் பெரியவர்கள் இனி தன் முகத்தில் விழிக்கவே வெட்கப்படுவார்களே, இவரையும் அதிகமாக நிந்திக்க ஆரம்பித்துவிடுவார்களே என்று கலங்கத் தொடங்கினாள். அப்படியே ஆயிற்று. வீட்டுப் பெரியவர்கள் தங்களுடைய தான் தோன்றித் தனமான பேச்சுக்காக மனசுக்குள் வருத்தப்பட்டார்கள். தன் பிள்ளையிடமே குறையை வைத்துக் கொண்டு வெளியேயிருந்து வந்த மருமகளை மட்டமாக எடை போட்டு விட்டோமே என்று உண்மையாகவே வருந்தினார்கள்.

இந்த கட்டத்தில்தான் குலசேகரன் தங்களுக்கு இந்த ஜன்மத்தில் குழந்தை பாக்கியம் இல்லை என்றும், அதற்கு மாற்றாக யாரேனும் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் தன் யோசனையைத் தெரிவித்தான். இதற்குத்தான் பெரியவர்களிடமிருந்து ஏகப்பட்ட எதிர்ப்பு. ‘குழந்தையே இல்லாமல் இருந்துவிடலாம்; ஆனால், நமக்குக் கொஞ்சமும் ரத்த சம்பந்தம் இல்லாத ஒரு குழந்தையை தத்தெடுப்பது  பொருந்தாத செயல். இதனால் நம் குடும்ப கௌரவம் பாதிக்கப்படுவதோடு, அந்தக் குழந்தையும் நம்முடைய உண்மையான வாரிசாகிவிட முடியாது என்றே அவர்கள் கருதினார்கள்.

எல்லாவற்றையும்விட, வயதான கிழவி ஒருவர், ‘ஹும், எத்தனையோ பூஜை, புனஸ்காரம்னு எல்லாம்தான் பண்ணியாச்சு, அப்படியும் இதுங்களுக்கு விடியலியே’ என்று பிலாக்கணம் பாட, கூட இருந்த இன்னொரு பெருசு, ‘அதுசரி, ஏதோ கடனேன்னு பரிகாரம் பண்ணினா சாமி ஏத்துக்குமா என்ன? முழு மனசோட பண்ணணும். இதுங்களுக்கு அதிலே எங்கே நாட்டம் போகுது,’ என்று தன் பங்குக்கு அபிப்ராயத்தை உதிர்த்தது. ஆனால், குலசேகரன் தன் தீர்மானத்தில் உறுதியாக இருந்தான். ‘‘இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?’’ குலசேகரன், மனைவியிடம் தனிமையில் இருந்தபோது வருத்தத்துடன் கேட்டான்.

‘‘அப்படி என்ன அபவாதம் வந்துவிடும் என்று எனக்கும்தான் தெரியவில்லை’’ என்று அவனுக்கு ஆதரவாக பதிலளித்தாள் சுந்தரவல்லி. ஆனாலும், கூடவே, ‘‘அவங்க விருப்பத்துக்கு மாறா நாம ஒரு பிள்ளையைத் தத்து எடுத்துக்கிட்டா அவங்க ஏதேனும் சபிச்சு, அந்தக் குழந்தை வாழ்க்கை வீணாகிப் போயிடக்குடாதுன்னும் பயமா இருக்குங்க’’ என்று தன் தயக்கத்தையும் தெரிவித்தாள். ஆனாலும் குலசேகரன் தான் எடுத்த முடிவை செயலாக்கத் துணிந்தான். தன் மீது உண்மையான அக்கறை உள்ள தன் நண்பர்கள் சிலரிடம் யோசனை கேட்டான். அவர்கள் கொடுத்த தகவல்படி, அரசாங்க அங்கீகாரம் பெற்ற, ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்துக்குச் சென்றான்.

அங்கே அதிகாரிகளைக் கண்டு பேசினான். சட்ட ரீதியாக ஒரு குழந்தையை தத்தெடுக்கும் நடைமுறைகளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டான். வீட்டுக்கு வந்த அவன் சுந்தரவல்லியிடம் நடந்ததையெல்லாம் கூறினான். அந்தக் காப்பக அதிகாரி, ‘குழந்தையைத் தத்தெடுப்பதென்றால், கூடவே உங்கள் மனைவியும் வருவதுதான் முறை. அவர்களும் உங்களுடன் சேர்ந்து ஒரு குழந்தையைத் தேர்ந்தெடுக்கட்டும். அதுதான் சரியானது’ என்று சொன்னதை அவளிடம் தெரிவித்தான். அவளும் அதை ஒப்புக்கொண்டாள்.

ஓரிரு நாட்களில் தாங்கள் க்ஷேத்ராடனம் போவதாக வீட்டுப் பெரியவர்களிடம் கூறிவிட்டு துணிமணிகளை எடுத்து வைத்துக்கொண்டு புறப்பட்டார்கள். இதற்கிடையில் குலசேகரனின் நண்பன், அவன் குழந்தையைத் தத்தெடுப்பதற்கான சட்ட ரீதியான நடைமுறைகளை எல்லாம் மேற்கொண்டான்.
சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு இருவரும் ஊருக்குத் திரும்பி வந்தார்கள். கூடவே ஒரு குழந்தை. அவ்வளவுதான். வீட்டுப் பெரியவர்கள் பெரிதாக சாமி வந்து ஆடினார்கள். ‘‘எங்களைக் கேட்காமல் நீயாகப் போய் எப்படி இப்படி ஒரு காரியம் செய்யலாம்?’’ என்று கேட்டு சூடானார்கள். ‘‘நாங்க ஒண்ணும் சுயமா இப்படிச் செய்யலே,’’ குலசேகரன் அவர்களை சமாதானப்படுத்த முனைந்தான்.

‘‘பின்னே, வேற யார் இந்த யோசனையைக் கொடுத்தது?’’ பெரியவர்கள் கேட்டார்கள். ‘‘இவளோட அப்பன், ஆத்தா சொல்லிக் கொடுத்தாங்களா?’’ ‘‘அதெல்லாம் ஒண்ணும் இல்லே,’’ குலசேகரன் மறுத்தான். ‘‘நம்ம ஜோஸியரைக் கேட்டுதான் செய்தேன்’’ என்றான். ‘‘அவர் பரிகாரம்தான் சொல்வாரு, குழந்தையைத் தத்தெடுத்துக்கவும் சொல்வாரா என்ன?’’ ‘‘ஆமாம், அவர் அப்படித்தான் சொன்னார்.’’ அவ்வளவுதான். பெரியவர்களுடைய கோபம் அப்படியே ஜோசியர் மீது பாய்ந்தது. உடனே அவரை வீட்டிற்கு வரவழைத்தார்கள். ‘அதெப்படி நீங்கள் தத்து எடுப்பது ஜோசியப்படி சரின்னு சொல்லலாம்?’ என்று பிலு பிலுவென்று பிடித்துக்கொண்டார்கள்.

‘‘அம்மா, ஐயா, நான் மூன்றாம் தலைமுறையா ஜோசியம் சொல்லிகிட்டு வர்ரேன். ஜோசிய ஆராய்ச்சி பண்ணி அதிலே டாக்டரேட் பட்டமும் வாங்கியிருக்கேன். எத்தனையோ குடும்பங்கள் எங்க தாத்தா காலத்திலேர்ந்தே வழிவழியா எங்ககிட்ட ஜோசியம் பார்த்துகிட்டு வர்றாங்க. உங்க குடும்பத்லேயும் இது இரண்டாவது தலைமுறை, இல்லையா? உங்க பையன், மருமகள் ஜாதகத்திலே அவங்களுக்கு வாரிசு இருக்குன்னுதான் நான் ஆராய்ச்சி செய்தவரை எனக்குத் தெரியுது. ஆனா, அது இவங்களோட ரத்த உறவுன்னு இல்லாட்டாலும், எப்படியாவது ஒரு வாரிசு உண்டு...’’

அனைவரும் ஜோசியரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் லேசான குழப்பம். ‘‘அந்தக் கணக்குப்படி இவங்களுக்கு தத்தெடுத்தாவது குழந்தை உண்டு. இதிலே இன்னொரு விஷயமும் நான் உங்களுக்குச் சொல்லணும். இப்ப இவங்க தத்து எடுத்துக்கிட்டு வந்திருக்கற குழந்தையோட பிறந்த தேதி, நாள், வருஷம் எல்லாத்தையும் வெச்சுப் பார்க்கும்போது, நானே அதிசயப்பட்டேன். ஆமாம், என்னோட ஆழமான ஆராய்ச்சி, கணிப்புப்படி, இந்தக் குழந்தை இவங்களோட பூர்வ ஜன்மக் குழந்தையாகவே இருந்திருக்கு! என்ன ஆச்சர்யம் பாருங்க! ஜன்ம ஜன்மமாகத் தொடரும் பந்தம்ங்கறது இதுதான் போலிருக்கு...’’ ஜோசியர் பிரமிப்புடனும், நெகிழ்ச்சியுடனும் பேசினார்.

‘‘அட, அப்படிகூட இருக்கா?’’ என்று கேட்டு பெரியவர்கள் வியந்தார்கள். இப்போது குழந்தை மீதான அவர்களுடைய பார்வையே வித்தியாசமாக இருந்தது; பாசம் ஒளிர்ந்தது. பின்னர் ஒருநாள், குலசேகரன் ஜோசியரை சந்தித்தான். ‘‘ரொம்ப நன்றி, ஜோசியரே. எனக்கும், என் மனைவிக்கும் இருந்த ஏக்கத்தைத் தீர்த்து வெச்சீங்க. நான் உங்க வீட்டுக்கு வந்து என் வருத்தத்தைத் தெரிவிச்சபோது, ‘கவலைப்படாதே, நான் பார்த்துக்கறேன்’னு ஆறுதல் சொன்னீங்க. அதே மாதிரி பண்ணிட்டீங்க...’’ என்ற அவன், கொஞ்சம் தயக்கத்துக்குப் பிறகு கேட்டான்:

‘‘நீங்க சொன்னபடி இது பூர்வ ஜென்ம பந்தம்தானா ஜோசியரே?’’ ‘‘அப்படித்தான் இருக்கட்டுமே! உங்களுக்கு ஒரு குழந்தை வேணும்; அந்தக் குழந்தைக்கும் ஒரு ஆதரவு வேணும். ரெண்டு பேருக்கும் நல்லது நடக்கக்கூடிய ஒரு விஷயத்தை ஜோசியத்தை ஒரு சாக்கா வெச்சு சொன்னேன். இந்தக் குழந்தை ஏன் உங்க பூர்வ ஜன்மக் குழந்தையா இருக்கக் கூடாது?’’ என்று புன்னகைத்தபடி கேட்டார் ஜோசியர். குலசேகரன் புரிந்துகொண்டான். ‘‘நன்றி ஜோசியரே,’’ என்றான் மறுபடியும்.

பிரபுசங்கர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்