SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

ஏற்கெனவே முயற்சித்து வந்த விஷயங்கள்ல எதிர்பார்த்த நன்மை கிடைக்கலியா, உடனே அந்த முயற்சிகளுக்குப் புது வடிவம் கொடுக்கறதோ அல்லது முற்றிலுமாக வேற புது முயற்சிகள்ல ஈடுபடறதோ செய்யலாமுங்க. எதிர்பாராத இடத்லேர்ந்து பணம் வருமுங்க. இது மறந்தே போன கொடுக்கல்-வாங்கல் தொகையாகவும் இருக்கலாம். நரம்பு உபத்திரவம் தெரியுதுங்க; வயிற்றிலும் கோளாறு ஏற்படலாம். வியாபாரம், தொழில் எல்லாம் எதிர்பார்த்தபடியே சுமுகமாகப் போகுமுங்க. உத்யோகத்ல எந்தப் பிரச்னையும் தெரியலீங்க. புதிய நட்பில் எச்சரிக்கையாக இருங்க. குறிப்பாக பங்கு வர்த்தகத்ல ஈடுபடறவங்க, புது அறிமுகங்களோட தவறான வழிகாட்டலால நஷ்டத்தை சந்திக்க நேரலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் இனிமையான பேச்சால குடும்பத்லேயும், வெளியிடங்கள்லேயும் ஆதாயம் பெறுவீங்க. ஞாயிற்றுக்கிழமையில நவகிரக சந்நதியில சூரிய வழிபாடு பண்ணுங்க; சுகமாக வாழ்வீங்க.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தேவையானதுக்கு மட்டுமே செலவு செய்யறதுதான் உத்தமமுங்க. செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், அதிகச் செலவைத் தவிர்க்கப் பாருங்க. பிறர் பாராட்டணுங் கறதுக்காக ஆடம்பரமா செலவு செய்யறதோ, பெறுபவரின் தகுதிக்கும் மீறி, உணர்ச்சிவசப்பட்டு உதவறதோ, உங்க சேமிப்பைதான் கரைக்குமுங்க; சிலசமயம் கடன்படவும் நேரிடலாம். பார்வைக் கோளாறு, கண் அழுத்தத்தைப் பரிசோதனை செய்துக்கோங்க. உணவே விஷமாகலாங்கறதால கண்ட இடத்ல சுவைக்கு ஆசைப்பட்டு கண்டதையும் சாப்பிடாதீங்க. அதிகம் பலனளிக்காத முதலீட்டில் ஈடுபடவேண்டாங்க. ஆனால், பூமியால் நல்ல ஆதாயம் உண்டுங்க. ஏற்கெனவே நரம்பு உபாதை இருக்கறவங்க, மருத்துவர் யோசனையைத் தட்டாதீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் விரும்பிய பொருள் கிடைச்சு சந்தோஷப்படுவீங்க. திங்கட்கிழமை, நவகிரக சந்நதியில சந்திரனை வழிபடுங்க; சித்தமெல்லாம் சீராகும்.
 
3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்ல ஏற்படக்கூடிய குழப்பங்களுக்கு, யோசிச்சுப் பார்த்தீங்கன்னா, நீங்களே காரணமாக அமைவீங்க. எதிர்பாராத வகையில, எதிர்பாராதவங்களால ஏதேனும் பிரச்னை ஏற்படுமானா, அதுக்கு, ரொம்பநாளா குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றாததும் ஒரு காரணமா இருக்கலாமுங்க. உத்யோகத்ல இருக்கறவங்களுக்குப் புது பொறுப்பு வரலாமுங்க; பழைய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, புதுப் பொறுப்பில், சக ஊழியர்களோட ஒத்துழைப்பை இழந்திடாதீங்க. வியாபாரம், தொழில்ல யார்கிட்டேயும் விதண்டாவாதம் பேசி, அதன் விளைவாக நீங்க நஷ்டத்துக்கு ஆளாகாதீங்க. முதுகு எலும்பில் பிரச்னை ஏற்படலாமுங்க. சிலருக்கு மூட்டுத் தேய்மான உபாதை வரலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் காதுகளையும், கண்களையும் மட்டும் திறந்து வெச்சுகிட்டு வாயை மூடிக்கறது நல்லதுங்க. வியாழக்கிழமை நவகிரக சந்நதியில குருபகவானை வழிபடுங்க; முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது.  

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எந்த இயல்பான உரையாடலையும் விவாத மாகத்தான் முடிக்கணுங்கறது இல்லீங்க. பிறர் சொல்றதிலேயும் விஷயம் இருக்கறதை ஒப்புக்கொள்ளணுமுங்க. வாழ்க்கைத் துணையின் உடல்நலத்ல அக்கறை எடுத்துக்கோங்க. ‘நேரம் இல்லே, செலவு செய்ய முடியாது, பார்க்கறதுக்கு ஆரோக்கியமாகத்தானே இருக்கா...’ன்னெல்லாம் சால்ஜாப்பு சொல்லாம உண்மையான அன்போட கவனிங்க. உத்யோகத்ல மேலதிகாரிக்கும் உங்களுக்கும், உங்களுக்குக் கீழே வேலை செய்யறவங்களுக்கும் இடையே மனத்தாங்கல் குறைந்து பொதுவான நன்மைகள் பெருகுமுங்க. அரசாங்க ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமா கைகூடுமுங்க. தொழில், வியாபாரத்ல போட்டிகளை அலட்சியமா நினைக் காதீங்க. பற்கள்ல ஏற்கெனவே உபாதை இருக்கறவங்க முறையா மருத்துவம் பார்த்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு புது சிந்தனையால சிறப்புகள் கூடிவருமுங்க. ஞாயிற்றுக்கிழமையில நவகிரக சந்நதியில் இருக்கற ராகுவை வழிபடுங்க. நன்மைகள் தொடரும்.  


5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

கூட்டுத் தொழில்ல ஈடுபட்டிருக்கறவங்களுக்கு மிகப் பெரிய லாபம் காத்திருக்குங்க. பங்காளிகளோட சுமுகமா விவாதம் பண்ணி, புது யோசனைகளைப் புகுத்தி, வியாபாரத்தையோ, தொழிலையோ மேலோங்கச் செய்வீங்க. தனியா தொழில் நடத்தறவங்க, புது சிந்தனைகளால போட்டிகளை சுலபமாக சமாளிப்பீங்க. உத்யோகத்ல உங்க திறமையை நிரூபிப்பீங்க. மேலதிகாரிகளுக்கும் யோசனை சொல்லி, சக ஊழியர்களுக்கும் மாற்று உத்திகள் சொல்லி, பொதுவான நன்மைக்கும், லாபத்துக்கும் வழிவகுப்பீங்க. வீட்ல சுபவிசேஷங்கள் சிறப்பாக நடந்தேறுமுங்க. சிலர், இதுக்காக சொந்தமான மனை அல்லது வேறு ஏதாவது சொத்தை விற்கவேண்டியும் வரலாம். இதுவும் நன்மையே. காது, மூக்கு, தொண்டை பகுதிகள்ல பாதிப்பு வரலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பிறர் வந்து யோசனை கேட்குமளவுக்கு பிரபலமாவீங்க. புதன்கிழமை நவகிரக சந்நதியில புதனை வணங்குங்க; புத்தொளி தெரியும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்ல பிள்ளைகளோட அனாவசிய வாக்குவாதத்ல ஈடுபடாதீங்க. அவங்க நடவடிக்கை சரியில்லேன்னா இதமா, நிதானமா விளக்கிச் சொல்லுங்க. ஏதேனும் மனை அல்லது வீடு வாங்கறதானா முதல்ல அது சம்பந்தமான ஆவணங்கள்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க; ஏன்னா சிலரை நம்பி மோசம் போகக்கூடிய நிலைமைகள் தெரியுதுங்க. முக்கியமா வெறும் கையால முழம்போட்டு, வசீகரமா பேசறவங்களை நம்பாதீங்க. எந்த முதலீட்டையும் குடும்பத்தாரின் ஆலோசனைப்படி செய்ங்க. இடது பக்க உடல்நலத்தை கவனிங்க. இதயக் கோளாறு ஏற்படலாம். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை அளவை முறையாகப் பரிசோதிச்சு உரிய மருத்துவம் பார்த்துக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அக்கம் பக்கத்தாரின் அனுதாபத்தைப் பெற உங்க குடும்ப ரகசியங்களைச் சொல்லிகிட்டிருக்காதீங்க. வெள்ளிக்கிழமை, நவகிரக சந்நதியில சுக்கிரனை வழிபடுங்க; சீக்கிரமாகவே செல்வம் சேரும்.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

இடமாற்றம் ஆதாயம் தரக்கூடியதாக அமையுமுங்க. வசிக்கும் வீட்டை விட்டு, வசதி கூடிய இன்னொரு வாடகை வீட்டுக்கோ அல்லது சொந்த வீட்டுக்கோ குடி போவீங்க. அதேபோல உத்யோகத்லேயும் இடமாற்றம் நன்மை தருமுங்க. ஏற்கெனவே விருப்பப்பட்டு இடமாற்றம் கேட்டிருக்கறவங்களுக்கு அந்த விருப்பம் இப்ப ஈடேறுமுங்க. அல்லது அலுவலக நடைமுறைப்படி மாற்றம் கிடைத்தாலும், இரண்டாவது சிந்தனைக்கு இடம் கொடுக்காம உடனே ஏற்றுக்கோங்க - எதிர்கால நன்மைகள் உண்டு. சிலருக்கு வெளிநாட்டு பணி வாய்ப்பும் கிடைக்கலாம். வியாபாரம், தொழில்ல விரிவாக்கம் செய்வீங்க. தொடர்ந்து ஏற்படக்கூடிய நன்மையான விஷயங்களால சந்தோஷம் பெருகுமுங்க. சிலருக்கு உணவுக்குடல்ல பிரச்னை வரும்; சிலருக்கு சரும உபாதை வரலாம்.

இந்தத் தேதிப் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்குமுங்க. சனிக்கிழமை நவகிரக சந்நதியில் இருக்கற கேதுவை வழிபடுங்க. கேடெல்லாம் நீங்கும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


குடும்ப விஷயங்கள்ல இந்த வாரம் அதிக அக்கறை எடுத்துக்கணுமுங்க. வெளிவட்டாரப் பழக்கத்ல ஏற்படக்கூடிய மனச்சுமைகளை வீட்ல கோபத்தோடு இறக்கி வைக்காதீங்க. சரியாகச் சொல்வதானால், அந்தச் சுமைகளைத் தெளிவாக நீங்க குடும்பத்ல விளக்கிச் சொன்னீங்கன்னா, நல்ல தீர்வு கிடைக்கறதுக்கும் வழியிருக்குங்க. வயசுல சின்னவங் கன்னாலும் அவங்க சொல்ற யோசனையும் ஏற்கக்கூடியதாகவே இருக்குமுங்க. தனியாகவோ, குடும்பத்தாரோடோ அவசியமில்லாத பயணங்களைத் தவிர்த்திடறது நல்லதுங்க - குறிப்பாக இரவுப் பயணம். தொழில், வியாபாரம், உத்யோகத்ல சின்னச் சின்ன தடைகள் தோன்றினாலும் அதையெல்லாம் எளிதாகக் கடந்துடுவீங்க. சிலருக்கு ரத்தத் தொற்று உபாதை ஏற்படலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு பெற்றோர் ஆசியால் நன்மைகள் விளையுமுங்க. சனிக்கிழமை நவகிரக சந்நதியில சனிபகவானை வழிபடுங்க: நல்ல சந்தர்ப்பங்கள் அமையும்.  


9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

பொறுமைதான் உங்களோட இந்த வார தாரக மந்திரமுங்க. எதிர்ப்புகள் எல்லாம் அந்தந்த சமயத்து உணர்ச்சிவசப்படுவதன் விளைவு கள்தாங்க. சரிக்கு சமமா நீங்களும் உணர்ச்சி வசப்பட்டா, அது தொடர் பகைக்கு வழிவகுக்கலாம். குடும்பம், வெளிவட்டாரப் பழக்கத்ல விட்டுக் கொடுத்துப் போறதால தற்காலிக மனவருத்தம் ஏற்பட்டாலும், அது நிரந்தரமல்லங்கறதைப் புரிஞ்சுக்கோங்க; அதனால உங்க மேல மதிப்புதான் அதிகமாகும். அஜீர்ணக் கோளாறு ஏற்படுமுங்க. நண்பர்களோடு வெளியே போகும்போதோ, விருந்துகள்ல கலந்துக் கும் போதோ ‘போதும்’னு சொல்லக் கத்துகிட் டீங்கன்னா, வயிறு உங்களை வாழ்த்துமுங்க. பூர்வீக சொத்தில் உங்களுக்கான பங்கு, பெரியவங்களோட தீர்ப்பால வந்து சேருமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் எதற்கும் அவசரப் படாதீங்க; வழுக்கலான பகுதி கள்ல நிதானமா அடியெடுத்து வையுங்க. செவ்வாய்க்கிழமை நவகிரக சந்நதியில செவ்வாயை வழிபடுங்க; செல்வாக்கு கூடும்.

யதார்த்த  ஜோதிடர் ஷெல்வீ
யதார்த்த  ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-01-2020

  20-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-01-2020

  19-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்