SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்ணொளி வழங்கிடும் கண் நிறைந்த பெருமாள்

2013-12-11@ 16:00:48

மலையடிப்பட்டி

மலையடிப்பட்டி கிராமத்தின் அந்தக் குன்றையும் கோயில்களையும் பார்க்கும்போதே ஆயிரம் வருடங்களுக்கு பின்னால் நம் மனம் சென்றுவிடுகிறது.  தெய்வீகத்தையும் கலையையும் குழைத்துக் கட்டிய கோயில்களாக, இங்குள்ள சிவ-விஷ்ணு ஆலயங்கள் விளங்குகின்றன. இரண்டுமே குடவரைக்  கோயில்கள்தான். 804ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதற்கு முன்னரே, மூன்றாவது அல்லது நான்காம் நூற்றாண்டில் ஜெயினரால்  வழிபடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தியத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறையினரால் பராமரிக்கப்பட்டு  வருகிறது.

இங்குள்ள சிவன் கோயில் முற்காலத்தில் ஆலத்தூர்தளி என்று வழங்கப்பட்டது. மலையின் கிழக்குப் பகுதியில் மலையை குடைந்து முன்  மண்டபத்தை அமைத்திருக்கிறார்கள். சற்று உள்ளே சதுர வடிவில் கருவறை உருவாகியிருக்கிறது. அந்த பாறையையே குடைந்து சிவலிங்கத்  திருமேனியை வடித்திருக்கும் விதம் பிரமிப்பூட்டுகிறது. மூலவர் வாக்கீஸ்வரமுடையார், மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரில் நந்தி  தேவர். உள் சுற்றில் வடக்கில் தட்சிணாமூர்த்தி, தெற்கில் கணபதி, வீரபத்திரர் மற்றும் சப்த மாதாக்கள். மேற்கே முருகனும் சிங்க வாகனத்தில்  சங்கரநாராயணரும் காட்சி தருகின்றனர்.

எல்லாமே மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டவையே! பிற்காலத்தில் மலையை ஒட்டி சுற்றுச் சுவரும் முன் மண்டபமும் கட்டப்பட்டு, விநாயகர்,  முருகன், அம்பாள் வடிவுடைய நாயகி ஆகியோரின் சந்நதிகள் அமைக்கப்பட்டன. கோயிலின் முன்பு, வில்வம், ஏரழிஞ்சி மரங்கள், தல  விருட்சங்களாகத் திகழ்கின்றன. ஏரழிஞ்சி மரத்திலிருந்து கீழே விழும் விதைகள் மீண்டும் மரத்தில் சென்று ஒட்டிக்கொள்ளுமாம். இதனால் இந்த விதை  முளைப்பதில்லை என்று கூறப்படுகிறது. மலையின் மேற்குப் பகுதியில் உள்ள பெருமாள் குடைவரைக் கோயில், முன்காலத்தில் ஒளிபதி விஷ்ணு கிரஹம் என்று அழைக்கப்பட்டது.

கோயிலுக்கு முன் மலைச் சுனையொன்று சக்கர தீர்த்தம் என்கிற சுதர்சன புஷ்கரணியாக விரிந்துள்ளது. இந்த தீர்த்தம் இறைவனின் அபிஷேகத்திற்கு  மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நுழைவாயிலின் அருகில் விநாயகர் அருள்பாலிக்கிறார். வலது புறம் கமலவல்லித் தாயார் சந்நதி. இடதுபுற  மண்டபத்தில் திருமங்கையாழ்வார், ராமானுஜர், நாதமுனிகள், விஷ்வக்சேனர் சிலைகள் உள்ளன. நடுவில் கருடாழ்வாரும், பலிபீடமும். இங்கும்  மலையைக் குடைந்து  முன் மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் ஆகியன வடிவமைக்கப்பட்டுள்ளன. முன்மண்டபத்தில், தரையிலுள்ள  பாறையில் ஐந்து குழிகளுடைய அமைப்பு காணப்படுகிறது.

அர்த்த மண்டபத்தில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத புண்டரீகாட்சப் பெருமாள், ஹயக்ரீவர், நரசிம்ம மூர்த்தி, அமர்ந்த கோலத்தில்  ஸ்ரீதேவி-பூதேவி சமேத வைகுண்டநாதன் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். கருவறையில் இரு தூண்கள் உள்ளன. இதை ஹரி நேத்திர தூண்கள்  என்கிறார்கள். இதன் மூலம் சிருஷ்டி, ஸ்திதி, லயம் என்ற மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளாக, மூலவரான அனந்த  பத்மநாபனை கண் நிறைய தரிசிக்கின்றோம்.

பெருமாளின் திருவடிகளை தாமரை மலர்கள் தாங்குகின்றன. பெருமாளை சுற்றி இறக்கை விரித்த கருடன், இட்ச, கின்னர, கிம்புருடர்கள், தும்புரு,  நாரதர், வித்யாதரர், இந்திரன், வருணன், வாயு, குபேரன், பிரம்மா, அக்கினி, சூரியன், சந்திரன், யமன், காமதேனு, கற்பகவிருட்சம், அட்சயபாத்திரம்,  மது-கைடபர் ஆகியோர் பெருமாளை வழிபட்டபடி காட்சியளிக்கின்றனர். பெருமாள் தனது வலது கரத்தால் திவாகர மகரிஷிக்கு ஆசி வழங்குகிறார்.  பூமாதேவி பெருமாளுக்கு பாத சேவை செய்கிறார். அங்கேயே லட்சுமி நாராயண பெருமாள், உற்சவ மூர்த்தியான ரங்கநாதர், சந்தான கோபாலரும்  அருள்பாலிக்கின்றனர்.

‘ஸ்ரீகண் நிறைந்த பெருமாள்’ என்றழைக்கப்படும் இந்த மூலவர், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமிக்கு நிகரானவர் என்கிறார்கள். கண் சம்பந்தப்பட்ட  நோய்கள், கண் திருஷ்டி எல்லாம், இப்பெருமாளின் அருளால் நிவர்த்தியடைகின்றன. ஏராளமான பக்தர்கள் கண் பார்வை பெற்றுள்ளனர்.  முன்மண்டபத்திலுள்ள 5 குழிகளில் வலது கை ஐந்து விரல்களை வைத்து இடது முழங்கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு ஹரிநேத்திர தூண்கள்  இடையே மூன்று வாயில்கள் வழியாக பள்ளி கொண்ட பெருமாளை தரிசிப்பதன் மூலம் ஏழு பிறவிகளில் ஏற்பட்ட பித்ரு சாபம் உள்ளிட்ட  தோஷங்கள் அனைத்தும் அறவே நீங்கும் என்பது உறுதி.

பெருமாளின் பாதங்களை தாமரை மலர் தாங்கியுள்ளதால் அந்தப் பாத தரிசனம் மிகுந்த செல்வத்தை அளிக்கும் என்பது உறுதி. பெருமாளின் அழகிய  திருமேனி மீண்டும், மீண்டும் பார்க்க தோன்றும். இதனால் ஒரு முறை இங்கு தரிசனம் செய்த பக்தர்கள் தொடர்ந்து வருகின்றனர். தஞ்சாவூர் - திருச்சி  நெடுஞ்சாலையில், செங்கிப்பட்டி அடுத்த கிள்ளுக்கோட்டை பிரிவு சாலையில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. ஆலயத்  தொடர்புக்கு: 99407 49234.

வி.கிருஷ்ணமூர்த்தி

படங்கள்: தாய்.ராஜேந்திரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2019

  26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்