SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பகைவர் தொல்லை தீர்க்கும் பிரத்யங்கிரா தேவி

2013-12-11@ 16:00:48

சக்தி வழிபாடு

ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின்னரும் நரசிம்மரின் உக்கிரம் தணியவில்லை. இதனை கண்ட தேவர்கள் அஞ்சி நடுங்கி பரமேஸ்வரனை தஞ்சமடைந்தனர். சிவபெருமான் சரபேஸ்வரராக உருவெடுத்தார். சரபம் பாதி பறவை உருவத்தையும் பாதி யாளி உருவத்தையும் கொண்ட பிரமாண்ட பறவை. கூரிய நகங்களையும் பற்களையும் கொண்டது. சரபரும் நரசிம்மமும் சண்டையிட்டனர். நீண்ட நாட்கள் நீடித்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய சரபர் தனது இறக்கைகளில் ஒன்றாக இருந்த காளியை உக்ர பிரத்யங்கிரா தேவியாக அவதாரமெடுக்க செய்தார். நரசிம்மருக்கும் சரபருக்குமிடையே உக்கிரமாக சண்டை ஏற்பட்டபோது கண்ட பேருண்டம் என்ற பட்சியின் உருவில் நரசிம்மம் யுத்தம் செய்தார்.

கண்ட பேருண்டம் சரபப் பட்சிக்கு கடும் எதிரியாகும். மிகுந்த கோபத்தில் இருந்த சரபருக்கு அவர் நெற்றிக் கண்ணிலிருந்து உக்கிரப் பிரத்தியங்கிரா என்ற பத்திரகாளி உதித்தாள். இவள் கண்ட பேருண்டத்தின் சக்தியை விழுங்கி விட்டாள். இதை உமாபதி சிவம் தன் ‘குஞ்சிதாங்க்ரி ஸ்தவம்’ எனும் துதியில் குறிப்பிட்டுள்ளார்.  சரபேஸ்வரரின் சக்திகளாக விளங்குபவர்கள் பிரத்தியங்கிராவும் சூலினியும். இவர்கள் இருவரும் சரபரின் மனைவியர். இருவரும் சரபருக்கு இரு இறக்கைகளாக விளங்குகின்றனர். பிரத்தியங்கிரா என்பது பத்ரகாளியேதான்.

சரப மூர்த்தி நரஸிம்மத்தை அடக்க உதவ வந்த சக்தி இவளே. பயங்கரமானத் தோற்றத்தின் காரணமாக உக்ரா என்று அழைக்கப்படுகிறாள். நரசிம்மர் சாந்தமானார். தான் சிவபெருமானுடன் சண்டையிட்டதை எண்ணி வருந்தி, சிவனை 18 ஸ்லோகங்களால் துதித்தார். இந்த 18 ஸ்லோகங்களே சரபேஸ்வரரின் அஷ்டோத்திர நாமாக்கள். இந்த அம்பிகையின் மந்திரத்தைக் கண்டுபிடித்தவர்கள் அங்கிரஸ், பிரத்யங்கிரஸ் என்ற ரிஷிகள். இத்தேவியின் நாமமே அந்த இரு ரிஷிகளின் பெயர்களிலும் உள்ளன. தக்ஷ யக்ஞத்தை அழிக்க சிவபெருமான் அனுப்பிய வீரபத்திரருக்கு துணையாக இருந்து உதவியவள் பிரத்யங்கிராதான். குரோதத்திலிருந்து உதித்தவளாதலால் இவளுக்கு குரோத சம்பவாயா என ஒரு திருநாமமும் உண்டு.

சிவ த்வேஷத்தை ஒழிக்க இவள் உதித்ததால் உலகிற்கே மங்கலம் ஏற்பட்டது. இவளை உபாசித்து இவள் அருளைப் பெற்றுவிட்டால் அந்த ராம லக்ஷ்மணர்கூட தன்னை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த இந்திரஜித், நிகும்பலை என்ற இடத்தில் மிக ரகசியமாக யாகம் செய்தான். தன்னை உபாசிப்பவன் நல்லவனா கெட்டவனா என்பதை கவனிக்கக் கூடியவள் அல்ல இவள். பிரத்யங்கிராவின் அருள் இந்திரஜித்திற்கு கிடைத்து விட்டால் அவனை யாரும் வெல்ல முடியாது என்பதை ஜாம்பவான் மூலம் அறிந்த ஆஞ்சநேயர் அந்த யாகத்தை முதலில் அழித்துவிட்டுதான் மறுவேலை பார்த்தார்.  இவளை உபாசிப்பவர்கள் கடன், சத்ரு தொல்லைகளிலிருந்து மீள்வர்.

16 செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ்வர். பில்லி, சூனியம், ஏவல், செய்வினைகள் போன்ற அனைத்து தீயவினைகளையும் தீர்ப்பவள் பிரத்யங்கிரா தேவி. இவள் பத்ரகாளியின் அம்சம். பிரத்யங்கிரா தேவிக்கான திருக்கோயில் கும்பகோணத்திலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில், ராகு தோஷ பரிகாரத் தலமான திருநாகேஸ்வரம் மற்றும் திவ்ய தேச தலமான ஒப்பிலியப்பன் திருக்கோயில் அருகில் அமைந்துள்ளது. ஆலய அமைவிடத்தின் பெயர் ஐவர்பாடி. பஞ்ச பாண்டவர்கள் இத்தலம் வந்து தேவியை பூஜித்து அருள் பெற்றதால் இப்பெயர். பின்னர் இதுவே மருவி அய்யாவாடி என்றானது.

தேவி சிங்க முகத்துடனும் கரிய உடலுடனும் சிறிய கண்களுடனும் கைகளில் சூலம், கபாலம், டமருகம், பாசம் போன்ற ஆயுதங்கள் ஏந்தியும் நீல நிற ஆடை உடுத்தி, தனது வலது காலை தொங்கவிட்டு, இடது காலை மடித்து சிங்கத்தின் மீது சிம்மவாகினியாய் வீற்றிருந்து திருவருள் பாலிக்கின்றாள். அகோர ரூபம் என்றாலும் தேவி இங்கு சர்வமங்களங்களையும் அருளும் குணம் கொண்டவள். பயம் நீக்குபவள். எந்தவித பயம் ஏற்பட்டாலும் இத்தேவியின் நாமத்தை சொல்ல அந்த பயங்கள் தீர துணையிருப்பவள். கேட்டவர்க்கு கேட்டதை அருளும் இவள் பக்தருக்கு உறுதுணையாய் கூடவே இருப்பவள். பஞ்ச பாண்டவர் இந்த தேவியை பூஜித்ததன் சாட்சியாக இத்தலத்தில் உள்ள தல விருட்சம் ஐந்து விதமான இலைகளை கொண்டுள்ளது.

முற்பிறவி வினைகள், தீராத நோய்கள், குழப்பங்கள், கஷ்டங்கள் தீர்க்கும் ஐவர்பாடி எனும் அய்யாவாடி. பிரத்யங்கிராதேவி பிரத்யங்கரஸ், பால பிரத்யங்கிரா, பிராம்மி பிரத்யங்கிரா, ருத்திர பிரத்யங்கிரா, உக்கிர பிரத்யங்கிரா, அதர்வண பிரத்யங்கிரா, சிம்ம முகக் காளி, மும்முக ப்ரத்யங்கிரா, ஸ்ரீ மகா பிரத்யங்கிரா என ஒன்பது விதமாக வழிபடப்படுகிறாள். கலியுகக் கடவுளான இவளை உபாசிப்பவர்கள் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்குவர். இவளை பூஜிப்பவரை, தம்மை பூஜிப்பவர்களாகவே தேவர்கள் எண்ணி அருள்பாலிப்பர். தேவியை பூஜிப்பவர் பிரம்மன், விஷ்ணு, சிவன், கௌரி, லட்சுமி, விநாயகர் அனைவரையும் பூஜித்த பலன்களை பெறுவர். உக்கிர தெய்வமாக காணப்பட்டாலும் இவளது திருவுருவத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.

‘‘ ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலாஜிஹ்வே கராள
தம்ஷ்ட்ரே
ப்ரத்யங்கிரே க்ஷம் ஹ்ரீம் ஹூம்பட்’’

என்ற இவளது மூல மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து, இவளது தியான மந்திரம், அஷ்டகம், பஞ்சகம் சொல்லி தினமும் வழிபட குடும்பத்தில் அமைதி நிலவும். பகைவர் தொல்லைகள் அறவே தீரும். தீயவர்கள் சேர்க்கை இல்லாது போகும். தீவினைகள் நெருங்காது. அனைத்து தோஷங்களும் விலகி ஓடும். நல்ல எண்ணங்கள் பிறக்கும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் கைகூடும். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் நடைபெறும் யாகத்தில் கலந்து கொள்வதும் இவளுக்கு மிகவும் பிரீதியான மிளகாயுடன் தரிசனம் செய்வதும் மிகச் சிறந்த பலன்களை தரும். உக்கிர தேவியான இவளுக்கு மிளகாய், மிளகு போன்ற காரமான பொருட்கள் மிகவும் ஏற்றவை.

பிரணவத்தில் இருந்து விரிவடைந்திருக்கும் இந்தத் தேவியின் மூலமந்திரத்தை காயத்ரீ மஹா மந்திரம் சொல்லுவதுபோல் ஐந்து இடைவெளி விட்டுச் சொல்ல வேண்டும். அதாவது, ஓம்  என்ற பிரணவத்தை தீர்க்க ஸ்வரத்திலும் அடுத்த க்ஷம் என்பதை ஸ்வரித அதாவது, குறுகிய ஸ்வரத்திலும் ஓம் க்ஷம் என்று ஒரு இடைவெளியிலும் பக்ஷஜ்வாலா ஜிஹ்வே என்று இரண்டாவது இடைவெளியிலும் கராளதம்ஷ்ட்ரே என்று மூன்றாவது இடைவெளியிலும் ப்ரத்யங்கரே என்று நான்காவது இடைவெளியிலும் க்ஷம்  ஹ்ரீம் ஹும்பட் ஸ்வாஹா என்று ஐந்தாவது இடைவெளியிலும் வைத்து ஒவ்வொரு இடைவெளிக்கும் இடைப்பட்ட காலம் மூன்று மாத்திரை நேரம். அதாவது, மூன்று செகண்டுகள்.

பிரத்யங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்தக் காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச் சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும். பிரம்மானந்தத்தை அடைந்தவனுக்கு ஒரு விதமான பயமுமில்லை என்பது ச்ருதி வாக்கியம். ஸம்ஸாரமே பயங்கரமானது. இதிலிருந்து அம்பிகை விடுவிக்கிறாள். அகசம்பந்தமான பாவங்களை நீக்கக்கூடியவள் இவள். சம்சார பந்தத்திலிருந்து மீட்டு மோட்சம் தரக்கூடிய தேவதையும் இவளே.

‘‘பீதம்மாம் நிதராம் அனன்ய சரணம் ரக்ஷ அனு
கம்பாநிதே
ப்ரஸீத பரதேவதே மம ஹ்ருதி ப்ரபூதம் பயம்
விதாரய’’

என தேவி மஹிம்ன ஸ்தோத்திரம் விளக்குகிறது. அதை எவனொருவன் ஸ்ரீவித்யா உபாசகனைக் குறித்து அபிசார கர்மா செய்கிறானோ  அக்கர்மாவை பிரத்யங்கிராதேவி தானாகவே திருப்பி விட்டு அவனைக் கொன்று விடுகிறாள். அதர்வணவேதம் போற்றிப் பணிந்திடும் பத்ரகாளிதேவி இவள். அதர்வண பத்ரகாளியான இத்தேவியே எல்லா பலன்களையும் பக்தர்களுக்கு அருளுவதோடு மகாமாயையாக இருந்து திருமாலுக்கே மது-கைடபரை அழிக்க வழி வகுத்தவள். மது-கைடபர் சிந்தையில் இவள் புகுந்து அகம்பாவத்தை ஏற்படுத்தி, திருமாலிடமே, ‘எங்களுடன் இவ்வளவு தீவிரமாக போர்புரியும் திருமாலே! உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள், தருகிறோம்’ என்று சொல்லவைத்தவள். திருமாலுக்கு வேலை சுலபமாயிற்று. ‘உங்கள் இருவரையும் கொல்ல வரம் கொடுங்கள்’ என்று கேட்டு அவர்களை சம்ஹாரம் செய்தார்.

முக்தியை அடைந்த மகான்கள் இந்த காளியை உபாசித்தவர்களே. மாயையை வெல்லவும் மோட்சத்தை அடைவதற்கான தகுதியைப் பெறவும் இவள் தயவு மிக மிக அவசியம். ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூட காளிமாதாவை உபாசித்தே கைவல்யபதம் அடைந்தார். இருபது அட்சரங்கள் கொண்ட மூல மந்திரமும், மாலாமந்திரமும் பிரபஞ்சசார தந்திரம் எனும் நூலில் இடம்பெற்றுள்ளன. ஆயிரம் தலை, 2000 கைகள் என்றால் அவள் விச்வரூபி என்றே கொள்ள வேண்டும். விஸ்வமென்ற ஸமஸ்த ஜகத்திலும் பரவி இருப்பவள் என்று பொருள். இதை, ‘யதாஹி கதலீ நாமத்வக் பத்ரான்யா ந த்ருச்யதே ஏவம் விஸ்வஸ்ய நான்யத்வம் த்வத்ஸ்தா ஈஸ்வர த்ருச்யதே’ என்கிறது விஷ்ணு புராணம்.

ப்ராக பாவம் (முன்பு இல்லை); த்வம்ஸாபாவம் (இனி இருக்கப் போவதில்லை) என்று பல பாவங்கள் இருக்கின்றன. இவை எல்லாம் அம்பிகைக்கு இல்லை. இதை பின்வரும் வாக்கியங்கள் விளக்குகின்றன:

ஸ பூர்வேஷாமயி குரு: காலேநா நவசச் சேதாத்
யோக ஸூத்திரம்
புமான் ஆகரசவத் வ்யாபீ ஸ்வாதிர்க்தம்
ம்ருஷா யத:
தேசத: காலதச் சாபி ஹ்யநந்தோ வஸ்துத:
ஸ்ம்ருத : ஸௌர ஸம்ஹிதை

கோபம் என்பது அற்ப குணம்தான். ஆனால், வீரபத்திரரின் கோபம் தர்மாவேசமானது. சிஷ்ட பரிபாலன துஷ்ட நிக்ரஹ வெறி அது. இதற்குப் பக்கத் துணையாக இருந்தவள் பிரத்யங்கிரா. அம்பிகைக்கு ‘க்ரோத சமனீ’ அதாவது கோபத்தை நாசம் செய்பவள் என்று பெயர். ‘கோபமுடையவர் செய்யும் தானம், யக்ஞம், தபஸ், உபாசனை எல்லாம் பச்சை மண்ணாலாகிய குடத்தில் எடுத்த ஜலம்போல போய் விடுகிறது’ என்கிறது ஆபஸ்தம்ப ஸூத்திரம். தாருகனை அழித்தவளும் பத்ரகாளியான பிரத்யங்கிராவே. தாருகனை அழிக்க சிவபெருமான் சிருஷ்டித்த இவளுக்கு காலகண்டி என்று பெயர் என்கிறது லிங்க புராணம்.

‘ஸ ஸர்ஜ காளீம் காமாரி : கால கண்டீம் காபர்தினீம்’ - அப்போது அவள் ருத்ரனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றினாள் என்கிறது மார்க்கண்டேய புராணம்.
அதர்வண வேதத்தில் மந்திர காண்டத்தில் சௌகை சாகையில் 32 ரிக்குகளும் பிப்பலாத சாகையில் 48 ரிக்குகளும் பிரத்யங்கிராவைப் பற்றியவை. இத்தேவியைப் பற்றி நாரத தந்திரம் எனும் நூலிலும் கூறப்பட்டுள்ளது. சரபர், பைரவர் எல்லோருமே சிவாம்சம். பிரத்யங்கிரா பைரவரின் பட்ட மகிஷி. ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரத்தை செய்வதால் பரமசிவனுக்கு பைரவர் என்பது திருநாமம்.

அம்பிகையை பைரவரே பூஜித்ததால் அம்பிகை மஹாபைரவபூஜிதா என்று வணங்கப்படுகிறாள். இது பத்மபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பைரவர்களின் அத்தனை வடிவங்களுக்கும் சக்தியாக விளங்கி திருவருள் புரிபவள் பிரத்யங்கிரா. லலிதாம்பிகை திருவருள் புரியும் ஸ்ரீபுரத்தின் 22, 23ம் பிராகாரங்களுக்கு நடுவில் மார்த்தாண்ட பைரவர் வசிப்பதாக சொல்லப்படுகிறது. தேவி உபாசகர்களிடம் விரோதம் பாராட்டுபவர்கள், தேவியின் பெயரால் உபாசகர்களை
ஏமாற்றுபவர்கள் போன்றோரின் கண்பார்வையை இவர் மங்கச் செய்து விடுவார் என்று கூறப்பட்டுள்ளது.  அந்தகன் எனும் அசுரனை ஒழிக்க பைரவருக்கு உதவிய சக்தி பிரத்யங்கிராவே.

தாரகன், தன் ரத்தம் கீழே சிந்தினால், அந்த ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும் ஆயிரம் அசுரர்கள் தோன்றும் வரத்தைப் பெற்றிருந்தான். ஒரு பெண் மூலம்தான் தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தையும் பெற்றிருந்தான். அவனைக் கொல்ல விஷ்ணு வைஷ்ணவியையும் பிரம்மா பிராம்மியையும் மகேஸ்வரன் மாஹேஸ்வரியையும் குமரன் கௌமாரியையும் இந்திரன் இந்திராணியையும் யமதர்மராஜன் வாராஹியையும் ஷட்மாதர்களாக்கினர். அவர்கள் அறுவராலும் தாருகனைக் கொல்ல முடியாமல் போனது. அப்போது ருத்ரனின் கண்களிலிருந்து பிரத்யங்கிரா பத்ரகாளி ஆவிர்பவித்தாள்.

அவளுடன் காளீ, காத்யாயனீ, சாந்தா, சாமுண்டா, முண்டமர்த்தனி, த்வரிதா, வைஷ்ணவி, பத்ரா எனும் எட்டு சக்திகளும் தோன்றி அனைவரும் ஒன்றாகி தாருகனைக் கொன்றனர். சப்தசதியில் இந்த மகாகாளிக்கு ‘ஐம்’ பீஜம் கொடுக்கப்பட்டுள்ளது. காளியின் பீஜம் பொதுவாக ‘க்லீம்’ என்பதேயாகும். ஐம் எல்லா ஞானத்தையும் குறிக்கும். ஞானத்தைத் தருபவள் அதன் மூலம் ஆனந்தமும் தருகிறாள். எனவே ஐம் பீஜம் இவளுக்கு தரப்பட்டுள்ளது. மகாலட்சுமி சத் ரூபிணி. மகா சரஸ்வதி சித் ரூபிணி. சித் எனில் அறிவு. மகா சரஸ்வதி அறிவுதரும் சக்தியாக மட்டுமன்றி சிருஷ்டியை நடத்தி வைக்கும் பிரம்ம சக்தியாகவும் விளங்குகிறாள். சிருஷ்டிக்கு மனிதர்களைத் தூண்டுபவன் மன்மதன். க்லீம் மன்மத பீஜமாகும். ஆசை ஏற்பட்டால் மட்டுமே சிருஷ்டி ஏற்படும். எனவே இது காமராஜ பீஜமுமாகும். சிருஷ்டி சக்தியாகிய மகாசரஸ்வதிக்கு க்லீம் பீஜம் பொருத்தமானதே.

‘க்ருஷ்ண வர்ணி ப்ருஹத்ரூபி பிருஹத்கண்டி
மஹத்பயி
தேவி தேவி மஹாதேவி மம சத்ரூன் வினாசய’

என்று சொல்லப்பட்டிருக்கிறது. சரபர், பைரவர் எல்லோருமே சிவ அம்சம். பிரத்யங்கிரா பைரவரின் மஹிஷி. லோகத்திற்கு மரணம் (சிருஷ்டி) ரமணம் (ஸ்திதி) வமனம் (சம்ஹாரம்) செய்வதால் பரமசிவனுக்கு பைரவர் என்று பெயர். ஸ்ரீபுரத்தில் 22, 23வது பிராகாரங்களுக்கு நடுவில் மார்த்தாண்ட பைரவர்
வசிப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. சிவலீலைகளில் ஒன்று அந்தகன் என்ற அசுரனை பைரவ மூர்த்தியாக சிவபெருமான் வதம் செய்தது. சிவபெருமான் பைரவரை அழைத்து அந்தகனுக்கு அந்திம காலத்தைக் கொடுக்கும் ரகசியத்தைச் சொல்லி அனுப்பினார். பைரவர் அந்தகனை சம்ஹரித்துத் திரும்பி வந்தார். இதற்கு உதவியாக இருந்தவள் பிரத்யங்கிரா. பைரவ பத்தினியாதலால் பைரவி என்ற பெயரும் உண்டு.

இவள் ஞானத்தை தருபவளாதலால் வித்யை ரூபமாகவும் அவித்யை ரூபமாகவும் இருக்கிறாள். வித்யை, ஸ்வாத்மா ரூபமான ஞானம். அவித்யை (ஞானம் ஏற்படுவதற்கு முன்புள்ள நிலை). கடைசி விருத்தியின் ரூபமான ஞானம். இவ்விரண்டு ஸ்வரூபங்களாகவும் அம்பிகை இருக்கிறாள். இவ்விரண்டையும் உடையவன் அவித்யையினால் ம்ருத்யுவை ஜயித்து வித்யையினால் அமிர்தத்துவத்தை அடையச் செய்கிறான்.

‘வித்யாம் சாவித்யாம் ச யஸ்தத் வேதோபயம்  
ஸஹ
அவித்யாய ம்ருத்யும் தீர்த்வா வித்யயாம்ருதமச
நுதே  ச்ருதி’

-இந்த இரண்டு ரூபங்களில் வித்யா ரூபத்தால் ஜீவன் விடுவிக்கப்படுகிறதென்றும் அவித்யா ரூபத்தால் கட்டப்படுகிறதென்றும் சொல்லப்படுகிறது.

‘வித்யா வித்யேதி தேவ்யா த்வே ரூபே ஜானிஹீ
பார்த்திவ
ஏகயா முச்யதே ஜந்து : அந்யயா பத்யதே புந:’

-என்கிறது தேவி பாகவதம் சென்னை சோழிங்கநல்லூரிலும் பாண்டிச்சேரி அருகேயுள்ள மொரட்டாண்டியிலும் மேல்மருவத்தூரிலும் திருப்பூர்-பொள்ளாச்சி வழித்தடத்தில் 20 கி.மீ தொலைவில் உள்ள பல்லடம் வெங்கடாபுரத்தில் உள்ள சாம்பசிவரிஷி எனும் தத்தகிரி சுவாமிகள் ஆசிரமத்திலும் பிரத்யங்கிராதேவி திருவருள்பாலித்து வருகிறாள்.

ஓவியம் - ஸி.ஏ.ராமச்சந்திரன்

(அடுத்தது, ஆறு ஆதாரங்களிலும் அம்பிகையர் தரிசனம்)

தியானம்

ஸிம்ஹீம் ஸிம்மமுகீம் பகவத: ஸ்ரீ பைரவஸ்யோல்லஸ:
சூல ஸ்தூல கபால பாச டமரு வ்யக்ரோக்ர ஹஸ்தாம்
புஜாம்
தம்ஷ்ட்ராகோடி விசங்கடாஸ்ய குஹராமாக்த நேத்ரத்
ரயீம்
பாலேந்து த்யுதி மௌக்திகாம் பகவதீம் ப்ரத்யங்கராம்
பாவயே.

தேவியின் இந்த மூலமந்திரத்தை தினமும் பய பக்தியுடன் ஜெயிப்பவர்கள் நோய் நொடியற்று, சத்ரு அழிந்து, பேய் பில்லி சூன்யம் பறந்தோட, பயம் நீங்கி, பாதுகாப்பான வாழ்வில் எல்லா ஆனந்தத்தையும் அடைந்து பிரத்யங்கிரா தேவியின் அருள்பெற்று, நீண்ட ஆயுளுடன் இம்மண்ணுலகில் நிலைபெற்று வாழ்வார்கள். கருணை உள்ளம் கொண்ட இத்தேவியின் மூல மந்திர அக்ஷரத்தின் பிரணவ கலைகளைக் கூர்ந்து நோக்கின், இதில் சம்ஹாரத்தைக் குறிக்கும் கலைக்கு இடமே இல்லை என்று புரியும். 1. ஜ்ஜம் என்ற சித்தி கலையும், 2. ஜம் என்ற சித்தி கலையும், 3. கம் என்ற சிருஷ்டி கலையும், 4.

த்தம் என்ற வரத கலையும் தான் உள்ளன. இந்தக் கலைகள் அக்னி சூரியக் கலைகளில் அடங்கி ஒளி வீசுகின்றபடியால் ஜ்வாலா என்ற பெயரை அடைகின்ற தேவி சித்தி, சிருஷ்டியை வரமாக அளிக்கும் வரதா எனப் பெயர் பெற்று, ஒளி வீசி, பக்த கோடிகளுக்கு உபாசகர்களுக்கு ஸகல சம்பத்துகளையும் அளிக்கின்ற பிரதம காளி என்ற திருப்பெயரையும் பெற்று பிரத்யங்கிரா தேவியாக போற்றித் துதிக்கப்படுகிறாள். தனித்து ஏகாந்தமாக புன்னாக மரங்கள் சூழ்ந்த தலத்தில் சர்வமங்களம் பொருந்திய காரிண்யையாக ஒளிவீசுகின்ற மகா சக்தியான இந்தத் தேவியை போற்றித் துதித்து புகழும் பொருளும் சர்வ சம்பத்தும் பெறுவோமாக.

அதர்வ ருக் மந்திரம்

ஓம் க்ருஷ்ணவர்ணீ ப்ருஹத்ரூபி, பிருஹத் கண்டீ மஹத்பயீ
தேவி தேவி மஹா தேவி மம சந்ரூன் விநாசய மம:
சத்ரூன் விநாசயோன் நம:

ந. பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-05-2019

  27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2019

  26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்