SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துர்வாசர் வணங்கிய வெள்விடையீஸ்வரர்

2013-12-11@ 16:00:48

திருக்கடாவூர்

இறையோடு இயற்கையையும் ஒரு சேர அனுபவிக்கக்கூடிய வனப்புமிக்கதொரு நாடு சோழநாடு. கண்டும் கேட்டும் ஆனந்தக் களிப்படையச் செய்யும்  தலங்கள் சோழ நாட்டுத் திருத்தலங்களே! அவ்வாறான அதியற்புதமானத் தலங்களுள் ஒன்றாக விளங்குவது திருக்குருகாவூர்! தற்போது இந்தத் தலம்  திருக்கடாவூர் என்று அழைக்கப்படுகிறது. அகத்திய மாமுனிவர் மற்றும் துர்வாச மகரிஷி போன்றோர் இத்தலத்துப் பெருமானை பூஜித்துப் பேறு பெற் றுள்ளனர். துர்வாசருக்கு இத்தலத்தில் அற்புதமானதொரு சிலை உள்ளது.

திருஞானசம்பந்தர் சமணர்களைக் கழுவிலேற்றிய பாவம் தீர காசிக்குச் செல்ல நினைத்தபோது இந்த குருகாவூர் இறைவர் கங்கையையே இங்கு வரவ ழைத்து அருள்புரிந்துள்ளார். ஆளுடையப் பிள்ளையான சம்பந்தர் அந்த கங்கை நீரில் நீராடி, குருகாவூர் வெள்விடைநாதரை வணங்கி, பதிகம் பாடி,  பரமனருள் பெற்றதாக தலபுராணம் விவரிக்கின்றது. இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசை தினத்தில்  இத்தல மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்த பின்னர் ஆலயத்திற்கு வெளியே உள்ள பால் கிணற்றில் அம்பிகை மற்றும் சம்பந்த ரோடு சுவாமி தீர்த்தம் கொடுக்கும் வேளையில் தூயநீர் வெண் நிறமாக மாறுகின்றது.

கிணற்றில் இருந்து கங்கை நீர் வருவதாக ஐதீகம்! இந்த அற்பு தத்தைக் கண்டுகளிக்க அன்று சுற்றுவட்டார ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு கூடியிருப்பர்! சம்பந்தர் இத்தலம் மீது ஒரு பதிகம்பாடி அரு ளியுள்ளார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சீர்காழி தலத்தைக் கண்டு, வணங்கி, பாடிய பின் தென்திருமுல்லைவாயில் தலம் நோக்கி வருகின்றார். அடியார்களுடன்  மிகுந்த பசியோடும் தாகத்தோடும் வரும் வழியில் சிவபெருமான் ஓர் அந்தணர் வடிவில் எதிர்கொண்டு, அடியார்களது நிழலுக்குப் பந்தல் அமைத்தும்  பசியாற கட்டமுதும் தாகத்திற்கு நீரும் தந்து ஆட்கொள்கின்றார்.

உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டல்லவா? பசியாறிய பக்தர்கள் அசதியால்  கண் அயர்கின்றனர். சுந்தரரும் உடன் உறங்கிவிடுகின்றார். சிவனாரோ தனது தீராத் திருவிளையாட்டின் காரணமாக பந்தலுடன் மறைந்து விடுகின் றார். கதிரவனின் கிரணங்கள் பட்டு கண் விழிக்கின்றனர் அடியார்கள். தம்பிரான் சோழரான சுந்தரரோ யாதும் பரமனின் அருளெனப் புரிந்து, இந்த குருகாவூர் தலம் எய்தி, பதிகம் பாடிப் போற்றுகின்றார். அதில் ‘‘பாடு வார் பசி தீர்ப்பாய்’’ எனக் குறிப்பிட்டுப் பாடியிருப்பது இங்கு நடந்த திருவிளையாடளை எடுத்துரைப்பதாக உள்ளது. இத்தலம் மீது 11 பாடல்களைப்  பாடிப் போற்றிய பின்னர் தென்
திருமுல்லைவாயில் அடைகின்றார்.

வருடந்தோறும் கட்டமுது தரும் விழா சித்ரா பௌர்ணமியன்று இத்தலத்தில் வெகு விசேஷத்தோடு நடத்தப்படுகின் றது. சுந்தரருக்கு இறைவன் கட்டமுது அளித்த இடம் ‘வரிசைப்பற்று’ என்றும் ‘இடமணல்’ என்றும் தென்திருமுல்லைவாயிலுக்குப் போகும் வழியில்  உள்ளது. கருவறையுள் சிறிய லிங்கமாக அருள் பரப்புகின்றார் சுவாமி ஸ்வேதரிஷபேஸ்வரர். தமிழில் வெள்விடையீஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார். வெள்ள டைநாதர் என்றும் கூறுவர். அம்பாள் சந்நதி அர்த்தமண்டபம், மூலஸ்தானம் அமைப்பில் சிறிதாக உள்ளது. அம்பிகை இங்கு காவியங்கண்ணியம்மை  என்றும் நீலோற்பலாம்பாள் என்றும் வர்ணிக்கப்படுகின்றாள். நின்ற வண்ணம் பேரழகுடன் அருள்பாலிக்கின்றாள் அன்னை. சீர்காழியிலிருந்து திருமுல்லைவாயில் செல்லும் வழியில் வடகால் என்ற ஊருக்கு தெற்கில் 1 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

- எம்.கணேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்