SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமால்-ஈசன் திருத்தலங்கள்

2013-12-11@ 16:00:48

ட்வென்ட்டி 20

சின்ன சேலம், ஆறழகழூரில் காமநாதீஸ்வரருக்கும் எதிரே உள்ள கரிவரதராஜப் பெருமாளுக்கும் பங்குனி உத்திரம் அன்று ஒரே நேரத்தில் திருத்தேர்  உற்சவம் நடைபெறுகிறது.
    
திருப்பாண்டிக்கொடுமுடியில் மகுடேஸ்வரரும் வீரநாராயணப் பெருமாளும் ஒரே ஆலயத்தில் காட்சி தருகிறார்கள்.
    
நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி ஆலயத்தில் திருமாலுக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் அதே ஆலயத்தில் உள்ள சிவபெருமானுக்கும்  நடத்தப்படுகின்றன.
    
சிக்கல் நவநீதேஸ்வரர் ஆலயத்தில் கோலவாமனர் எனும் கயாமாதவரையும் தரிசிக்கலாம்.
    
திருநெல்வேலி நெல்லையப்பரை தரிசித்தவுடன் அங்கேயே திருவருள் புரியும் நெல்லை கோவிந்தராஜரையும் தரிசிக்கலாம்.
    
திருப்பத்தூர் திருத்தளீஸ்வரர் ஆலயத்தில் லட்சுமி தாண்டவம் ஆடிய ஈசனோடு யோகநாராயணரையும் கண்டு வணங்கலாம்.
    
திருவக்கரை வக்ரகாளியம்மன் ஆலயத்தில் சந்திரமௌலீஸ்வரரோடு, வரதராஜப்பெருமாளும் அதே வளாகத்தில் அருள்கிறார்.
    
சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் தாணுமாலயனோடு அமரபுஜங்கப்பெருமாளின் அற்புத வடிவையும் தரிசிக்கலாம்.
    
குமரி மாவட்டம், திருவிதாங்கோட்டில் தெற்கே திருமாலும் வடக்கே ஈசனும் அருள்பாலிக்கின்றனர். மார்கழி மாதத்தில் இரு சந்நதிகளிலும்  கொடியேற்றப்பட்டு யானை மீது இருவரும் திருவீதியுலா வருகின்றனர்.
    
சென்னை-பொன்னேரி ஆயர்பாடி கரிகிருஷ்ணப்பெருமாளும் கும்பமுனிமங்கலம் அகத்தீஸ்வரரும் சித்ரா பௌர்ணமியன்று ஊர்வலமாக வந்து  கடைவீதியில் எதிரெதிரே நின்று ஒரே நேரத்தில் தீபாராதனை காண்கிறார்கள்.
    
திருவனந்தபுரம் அனந்தபத்மநாபசுவாமி தனது தலைமாட்டில் உள்ள சிவலிங்கத்தை பூஜித்த வண்ணம் அருட்காட்சியளிக்கிறார்.
    
திருமால் சிவனை வழிபட்டு தன் சக்ராயுதத்தைப் பெற்ற தலம் திருவீழிமிழலை. அங்கு சிவனையும் திருமாலையும் ஒன்றாக தரிசிக்கலாம்.
    
கோமதியம்மனின் தவத்திற்கு மெச்சி சங்கரநாராயணராக ஈசனும் திருமாலும் காட்சி தந்த தலம் சங்கரன் கோயில்.
    
தன்னை 1008 தாமரை மலர்களால் அர்ச்சிக்க விரும்பிய திருமாலை சோதிக்க ஒரு தாமரை மலரை மறையச் செய்தார் ஈசன். அதனால் தன்  கண்மலரை திருமால் ஈசனுக்கு சமர்ப்பித்து அவர் அருள் பெற்ற தலம் காஞ்சிபுரம் அருகே உள்ள திருமால்பூர்.
    
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பள்ளி கொண்ட நிலையில் கோவிந்தராஜப்பெருமானை தரிசிக்கலாம். ஒரே சமயத்தில் இருவரையுமே தரிசிக்கும்  வகையில் சந்நதிகள் அமைந்துள்ளன.
    
திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானோடு சத்யகிரீஸ்வரரும் பவளக்கனிவாய் பெருமாளும் தனித்தனிக் கருவறையில் எழுந்தருளியிருக்கின்றனர்.
    
கடலூருக்கு அருகே திருமாணிக்குழியில் வாமன உருவில் எப்போதும் திருமால் பூஜை செய்வதாக ஐதீகம். அவருக்கு காவலாக பீமருத்திரரின் உருவம்  கருவறைக்கு முன்னே உள்ள திரைச்சீலையில் உள்ளது. வழிபாடுகள் அனைத்தும் அந்த திரைக்கே செய்யப்படுகின்றன. மகா தீபாராதனை,  பாலபிஷேகத்தின் போதுமட்டுமே கருவறை லிங்கத்தை தரிசிக்க முடியும்.
    
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் நிலாத்திங்கள்துண்டத்தான் பெருமாள் தண்ணருள் புரிகிறார். திருப்பாற்கடலைக் கடைந்தபோது  திருமாலுக்கு  வெப்பம் மேலிடஈசனின் சிரசிலிருந்த சந்திரனின் தண்ணொளி திருமாலைக் குளிர்வித்ததால் பெருமாளுக்கு இப்பெயர்.
    
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், திருமேற்றளீசர் ஆலயத்தில் ஓதவுருகீசர் திருவுருமுன் திருமாலின் திருவடிகள் உள்ளன.
    
காஞ்சிபுரத்திற்கருகே உள்ள திருப்பாற்கடலில் ஆவுடையார் மீது திருமால் பிரசன்ன வெங்கடேஸ்வரராக ஹரிஹர ரூபமாய் அருள்கிறார்.

- ந. பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

 • 15-01-2020

  15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChennaiBhogi2020

  பனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்