SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குலம் தழைக்க அருள்வார் குருநரசிம்மர்

2020-05-30@ 17:31:38

மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில், ராம மற்றும் கிருஷ்ண அவதாரங்களை அடுத்து, நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரத்திற்கு எண்ணற்ற  ஆலயங்கள் அமைந்துள்ளன, உக்ர, பிரஹ்லாத வரத, யோக நரசிம்மர் என்று பல திருஉருவங்களில் நரசிம்மர் இந்த ஆலயங்களில் எழுந்தருளி  பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறார்.

ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நரசிம்மருக்கு எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம், சாலிக்கிராமம் என்ற  சிறிய கிராமத்தில் ஸ்ரீநரசிம்மர் குரு நரசிம்மராக தேவியின்றி எழுந்தருளியிருக்கிறார். இந்த ஊரைச் சுற்றிலும் உள்ள பதினான்கு கிராமங்களில் உள்ள  மக்கள் அனைவருக்கும் இந்த  நரசிம்மரே குலதெய்வமாக மட்டுமின்றி, ஆசார்யாராகவும் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
உடுப்பி மாவட்டத்தின் மிக முக்கியமான யாத்திரைத் தலமாகத் திகழும் இந்த சாலிக்கிராமத்தில் ஸ்ரீகுரு நரசிம்மர் ஆலயம் அமைந்ததன் பின்னணியில்  பல புராணக் கதைகள் கூறப்படுகின்றன.  கந்தபுராணம் ஸஹ்யாத்ரி காண்டம் மற்றும் பத்ம புராணம் புஷ்கர காண்டத்தில் சாலிக்கிராமத் தலம்  பற்றிய  குறிப்புகள் உள்ளதாக தல புராணம் தெரிவிக்கிறது.

சீதா  மற்றும் கும்காசி நதிகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில்  புராண காலத்தில் முனிபுங்கவர்கள் தவம் செய்து கொண்டிருந்தபோது, புனித  யாத்திரையாக நாரத முனிவர் அங்கு வந்து தங்கினார். ஒருநாள் திடீரென்று பூமி அதிர்ந்து, கடுங்காற்று வீச, பறவைகள், விலங்குகள் எல்லாம் அலறி  பயங்கரமான கூச்சல் போட்டன. முனிவர்கள் இதுகண்டு அச்சமடைந்து, செய்வதறியாது திகைத்து, நாரத முனிவரிடம் தஞ்சமடைந்தனர்.

அப்போது, இப்புனிதத் தலத்தில் பிரம்மாவும் சிவபெருமானும் ஆராதித்த ஸ்ரீநரசிம்மர், சங்கு சக்கரம் ஏந்தி, யோகானந்த நரசிம்மராக, அங்குள்ள சங்கு  சக்கர தீர்த்தங்களுக்கு நடுவே உள்ள அரச மரப் பொந்தில் சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறார் என்றும் அந்த விக்கிரகத்தை எடுத்து பிரதிஷ்டை செய்து  அனைவரும் வழிபடவேண்டும் என்றும் ஓர் அசரீரி  அவர்களுக்கு உணர்த்தியது.

நாரதர் பிற முனிவர்களுடன் சேர்ந்து இரண்டு புனித தீர்த்தங்களுக்கிடையே வளர்ந்திருந்த பிரமாண்டமான அரசமரத்தின் கீழ் உள்ள பொந்தில் இருந்த  நரசிம்மர் விக்கிரகத்தை எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். நரசிம்மர் சாலிக்கிராம சிலாரூபமாக, சுயம்புவாக வெளிப்பட்ட இந்தப் பகுதிக்கு  சாலிக்கிராமம் என்ற பெயரே அமைந்தது.

 அக்காலத்தில் கடம்ப மன்னர்கள் ஆட்சியின்போது, கோதாவரி நதிக்கரையில் அமைந்திருந்த அஹிசந்திரா என்ற இடத்திலிருந்து லோகாதித்யன்  என்ற மன்னனின் ஆணைப்படி பட்டாச்சார்யர் என்ற வேத விற்பன்னரின் தலைமையில் அந்தணர்கள் அங்கிருந்து வெளிவந்து இந்த சாலிக்கிராமம்  ஊரில் குடியேறினர். இந்தப் புனித தலத்தில் அவர்கள் அதிராத்திரம், பௌண்ட்ரம் போன்ற யாகங்களைச் செய்து வந்தனர். யாகங்கள் துவங்குவதற்கு  முன்பாக கணபதி பூஜை செய்த பட்டாச்சார்யாரின் கனவில் பத்து கரங்களுடன் விநாயகர் தோன்றி அங்கு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட  ஸ்ரீநரசிம்மரை தங்கள் குருவாகக் கொண்டு வழிபட்டு வர ஆணையிட்டார். அவர்களும் அகமகிழ்ந்து ஸ்ரீநரசிம்மரை தங்கள் குருவாக ஏற்றுக் கொண்டனர்.

அப்பகுதியில் யானைகளும், சிங்கங்களும் தங்கள் பகைமையை மறந்து ஒற்றுமையாக இருப்பது கண்டு அதிசயித்த பட்டாச்சார்யார் இந்த ஆலயத்தில்  விநாயகரைப் பிரதிஷ்டை செய்து, இத்தலத்தை நிர்வைர்ய ஸ்தலம் (பகைமையே இல்லாத) என்று அழைத்தார். இந்த ஆலயத்தில் ஸ்ரீநரசிம்மர்,  ஸ்ரீமஹாகணபதி இருவரும் யந்திரத்தின்மீது பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதும், யானையின் அம்சமான விநாயகரும், சிங்கத்தின் அம்சமான நரசிம்மரும்  பிரதான மூர்த்திகளாக அருகருகே இருந்து பக்தர்களுக்கு அருட்பாலிப்பதும் ஒரு சிறப்பாகும்.

பொதுவாக ஆதிசங்கர, ராமானுஜ மற்றும் மத்வ சம்பிராயத்தைச் சேர்ந்தவர்கள் அந்தந்த சம்பிராயத்தைச் சேர்ந்த ஒரு மடாதிபதியை தங்கள்  ஆசார்யராக ஏற்றுக்கொண்டு அவரை வழிபடுவது மரபு. ஆனால் இந்த சாலிக்கிராமம் ஊரைச் சுற்றிலும் உள்ள 14 கிராமங்களில் குடியிருக்கும் கோட்டா  எனப்படும் கோத்திரத்தைச் சேர்ந்த அந்தணர்கள் ஸ்ரீநரசிம்மரையே தங்கள் குருவாக ஏற்றுக்கொண்டு அவரை ஆசார்ய புருஷராக, பரம்பரை  பரம்பரையாக வழிபட்டு வருகிறார்கள். ஸ்ரீஆதி சங்கரருக்கு முன்பாகவே ஸ்ரீநரசிம்மரின் குரு ஸ்தானம் தங்களுக்கு கிடைத்துவிட்டதாக அவர்கள்  கூறுகின்றனர்.

அக்காலத்தில் ஸ்ரீகுரு நரசிம்மர் கிழக்கு நோக்கி கோவில் கொண்டிருந்தார் என்றும், அவர் உக்கிரத்தின் காரணமாக எதிரில் இருந்த வயல்களில்  பயிர்கள் கருகிவிட்டன என்றும், பின்னர் தேவப்ரச்னம் பார்த்து, நரசிம்மரை சாந்தப்படுத்தி மேற்கு நோக்கிப் பிரதிஷ்டை செய்தனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவர் சாந்தமடைய, அவருக்கு நேர் எதிரே ஆலயத்திற்கு வெளியே ஒரு அனுமன் சந்நதியும் நிறுவப்பட்டதாம்.

பொதுவான கன்னட ஆலயம் போன்ற முன் நுழைவாயில், முக மண்டபம், நமஸ்கார மண்டபம், கருவறை என்று அமைந்துள்ள இந்த ஆலயத்தின்,  பிரதான நுழைவாயிலின் மேலே  நடுவில் யோகபட்டத்துடன் கூடிய நரசிம்மர், வலப்புறம் விநாயகர், இடப்புறம் மஹாலட்சுமி, இரு மருங்கிலும்  கருடன், அனுமன் என சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக மண்டபத்தை அடுத்து உள்ள சந்நதியின் நுழைவாயிலின் மீதும் ஸ்ரீகுரு  நரசிம்மரின் சுதைச் சிற்பமும் இருபுறங்களிலும் துவாரபாலர்களும் உள்ளனர்.

கருவறையில் ஸ்ரீகுரு நரசிம்மர், இரண்டு கரங்களோடு, அமர்ந்த கோலத்தில் வலக்காலை குத்திட்டு மடித்தும், இடக்காலை மடக்கியும், வலக்கரத்தில்  பிரயோக சக்கரமும், இடக்கரத்தில் சங்கும் ஏந்தி அருட்பாலிக்கிறார். இந்த அரிய விக்கிரகம் எட்டாவது நூற்றாண்டினைச் சேர்ந்தது என்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தில் விநாயகர், துர்க்கா பரமேஸ்வரி சந்நதிகள் உள்ளன.

அக்காலத்தில் நீதிமன்ற வழக்குகளில் சாட்சி சொல்லவேண்டியவர்கள் இந்த குரு நரசிம்மர் சந்நதிக்கு முன்பாக சாட்சி  சொல்வதும், அதை நீதிபதியே  நேரில் வந்திருந்து பதிவு செய்வதும் வழக்கமாக இருந்ததாம். இவ்வாறு சாட்சி சொல்பவர்கள் புஷ்கரணிகளில் புனித நீராடி, ஈர உடையுடன் சந்நதிக்கு  முன்பாக ஆறு அகல் விளக்குகளை ஏற்றி, சாட்சி சொல்வது ஒரு மரபாக இருந்தது.

இந்த ஆலயத்தில் 1970 முதல் 2003 வரை பல கட்டங்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வோர் மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று  சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. நரசிம்ம ெஜயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஜனவரி மாதம் ஜாத்ரா உற்சவம் பிரம்ம ரத  உற்சவத்துடன் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து கூடுகின்றனர்.

இங்குள்ள சக்கர தீர்த்தத்தில் புனித நீராடினால் எதிரிகளைப் பற்றிய பயம், உடல் மற்றும் மன நோய்கள் தீரும் என்றும், சங்க தீர்த்த ஸ்நானம்  பாவங்களைக் கழுவும் என்றும், இரண்டிலும் நீராடினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. ஸ்ரீகுரு நரசிம்மரை  வழிபடுபவர்கள் அவரை தங்கள் ஆசார்யாக ஏற்றுக் கொண்டு தங்கள் வீடு களில் நடைபெறும் விசேஷங்களில் குரு நரசிம்மருக்கு காணிக்கை  எடுத்து  வைக்கும் வழக்கம் உள்ளது.

கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட் டத் தலைநகரான உடுப்பியிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும், மங்களூரிலிருந்து 80 கி.மீ. தொலைவிலும்  சாலிக்கிராமம் அமைந்துள்ளது. உடுப்பி  செல்வோர் இந்த  ஸ்ரீகுரு நரசிம்மர் ஆலயத்திற்கும் சென்று தரிசித்து வரலாம். ஆலயம் காலை 6 முதல் 1  மணிவரையிலும், மாலை 4 முதல் இரவு எட்டு மணிவரையிலும் திறந்திருக்கும்.

விஜயலட்சுமி சுப்பிரமணியம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்