SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடையாளூர் செல்வமாகாளி

2020-05-20@ 10:55:05

சோழ தேசத்தை காக்கும் பொருட்டு ராஜராஜசோழன் நிறுவிய எட்டு காளிகளில் இவளும் ஒருவள். ராஜராஜன் தஞ்சை தவிர பெரும்பாலும் வசித்ததே இந்த ஊரில்தான்.உடை வாள் தயாரிக்கும் ஊராதலால் உடையாளூர் என்று பெயர் வந்ததாக கூறுவார்கள். ஊரின் எல்லையிலேயே இவள் வீற்றிருக்கிறாள். எண் கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி ஒரு சூலத்தால் அசுரனை குத்தும் கோலத்தில் அருட்பாலிக்கிறாள்.

பல நூறு குடும்பங்களின் குல தெய்வமே இவள்தான். அதனால் எப்போதும் யாரேனும் வந்து பொங்கலிட்டு வணங்கியபடி இருப்பார்கள். இந்த செல்வமாகாளியை வணங்கியோரும், உபாசித்தோரும் பெரும் செல்வச் செழிப்போடு வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறுவார்கள். அவர்கள் எங்கிருந்தாலும் இவளை தரிசிக்காமல் போவதில்லை.

அவளின் திருப்பெயரிலேயே செல்வ எனும் சொல் உள்ளதால் ஏழ்மையை அகற்றி இன்னருள் புரிகிறாள். வறுமையின் கொடுமை அண்டாது காக்கும் காளியாக இவளைச் சொல்கிறார்கள். கும்பகோணத்திலிருந்து உடையாளூர் 10 கி.மீ. தொலைவிலுள்ளது.

திருக்களாச்சேரி பத்ரகாளி

பார்வையற்ற முதியவர் ஒருவர் பசி பொறுக்காது பிச்சை கேட்டார். எல்லோரும் அடுத்த வீடு சென்று கேளுங்கள் என்றனர். அவரும் அடுத்தடுத்த வீடுகளாக நகர்ந்தாரே தவிர அன்னம் போட யாருக்கும் மனம் வரவில்லை. அதுபோல காளியின் கோயிலை வீடு என நினைத்து கைகளை நீட்டினார். ஜகன் மாதாவான காளி நீட்டிய கைகளில் அன்னமிட்டாள். அங்கேயே படுத்துறங்கவும் செய்தார்.

மறுநாள் ஏன் இங்கேயே படுத்து விட்டீர்கள் என்று ஊரார் கேட்க, ‘‘உள்ளேயிருந்து ஒரு அம்மா உணவளித்தாள். உண்ட மயக்கத்தில் இங்கேயே தூங்கி விட்டேன்’’ என்று கூறினார். ‘‘ஐயா... இது காளி கோயில். எப்படி இங்கு உணவு கிடைக்கும்‘‘ என்று பல்வேறு விதமாக ஏளனமாகப் பேசினார்கள்.

உடனே, அவர் வைத்திருந்த தட்டில் உணவு தோன்றியது. எல்லோருக்கும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்பட்டது. இந்த அற்புதத்தை உணர்த்தும் பொருட்டு இன்றும் உச்சிகால பூஜையின்போது அன்னப் படையல் செய்து பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இத்தலத்தில் காளியானவள் திருப்பேழையிலிருந்து அருட்பாலித்து வருகிறாள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பூசையின்போது பத்ரகாளி அம்மனை பேழையிலிருந்து எழுந்தருளச் செய்வர்.

திருக்கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, உடலெங்கும் ஆபரணங்கள் அணிந்து மலர்களால் அலங்காரம் செய்விக்கின்றனர். அந்த இரண்டு நாட்கள் மட்டுமே உருவத்தோடு தரிசனம் செய்யமுடியும். இத்தலம் காரைக்காலுக்கு வடக்கேயுள்ள பொறையாரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

கொல்லங்குடி வெட்டுடையக் காளி

வேலுநாச்சியாரை பிடித்தே தீர வேண்டும் என்று கும்பனியர் அரியாக்குறிச்சி எனும் காட்டிற்கு அருகேயிருக்கும் ஐயனார் கோயிலுக்கு வந்தார்கள். அருகே உடையாள் எனும் கன்னிப் பெண்ணிடம் வேலுநாச்சியார் எந்தப் பக்கம் போனாள் என்று கேட்டார்கள்.

உடையாள் அவர்களை நோக்கி, ‘‘ராணி எந்தத் திசையில் சென்றார்கள் என்றும் தெரியும். ஆனால் சொல்ல மாட்டேன்’’ என்று உறுதியோடு கூறினாள். அவளை காலால் உதைத்து தலையை வெட்டி எறிந்தனர். உடையாள் வெட்டுப்பட்டுக் கிடந்த்தால் வெட்டுடையாள் என்றழைக்கப்பட்டாள்.

அங்கேயே அவளுக்கு சமாதி அமைத்தனர். சமாதியின் மேற்பரப்பில் சில எழுத்துக்கள் காணப்பட்டன. அந்த எழுத்துக்கள் காளிக்கு உரியனவாக இருந்தன. அதனால் காளிக்கும் அங்கேயே கோயிலுக்குள் தனிச் சந்நதி நிறுவினர்.

வேலுநாச்சியார் தன் பொருட்டு உயிரிழந்து காளியின் உருவெடுத்த வெட்டுடையாளுக்கு திருமாங்கல்யம் செய்து கொடுத்து சுமங்கலியாக்கினார். இன்றும் மிகுந்த உக்கிரத்தோடு அமர்ந்து குறைகளை தீர்த்து வைக்கிறாள். அதிலும் அப்பாவி யான எவரை ஏமாற்றினாலும் இவள் சும்மாயிருப்பதில்லை என்கிறார்கள். சிவகங்கையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கொல்லங்குடி கிராமம் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்