SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘ஸஹர்’ எனும் வைகறை உணவு

2020-05-13@ 09:55:29

தூய ரமலான் மாதத்தில் நோன்புக் கடமையை நிறைவேற்றுபவர்கள்   விடியலில்  எழுந்து, சூரியன் உதிப்பதற்குள் தங்களின் உணவு, தண்ணீர் தேவைகளை முடித்துக்கொள்ள வேண்டும். இந்த வைகறை உணவு இஸ்லாமிய மொழி மரபில் ‘ஸஹர்’ என்று சொல்லப்படுகிறது.   அதிகாலை 4 மணி முதல் நாலரை மணிக்குள் ஸஹர் உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.“நோன்பு துறப்பதை (இப்தார்) முற்படுத்துங்கள்...ஸஹர் உணவைப் பிற்படுத்துங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். சூரியன் மறைந்த உடனே நோன்பை விட்டுவிட வேண்டும் என்று மார்க்கம் வலியுறுத்துகிறது.

சிலர் தங்களை ஏதோ பக்திமான் போல்  நினைத்துக்கொண்டு சூரியன் மறைந்த பிறகும்கூட நோன்பு துறக்காமல் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் கழித்தே நோன்பு துறப்பார்கள். இதை மார்க்கம் கண்டிக்கிறது. நோன்பு துறப்பதில் தாமதம் கூடாது.ஆனால்  ஸஹர் உணவைத் தாமதித்தே உண்ண வேண்டும். அதிகாலை மூன்று மணிக்கே கூட ஒருவர் ஸஹர் உணவைச் சாப்பிட்டு முடித்துவிடலாம். அனுமதி இருக்கிறது. ஆனால் அவ்வாறு செய்யக் கூடாது. ஸஹர் நேரத்தின் இறுதிப் பகுதியில்தான் உண்ண வேண்டும்.  அதாவது, அதிகாலை 4மணியிலிருந்து 4.25க்குள் ஸஹர் உணவை முடித்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஸஹர் நேரத்தில் செய்யும் வழிபாடுகளையும் மார்க்கம் பெரிதும் ஊக்குவிக்கிறது. ஸஹர் உணவை உண்பதற்கு முன்பாக பின்னிரவுத் தொழுகையிலும் வேதம் ஓதுவதிலும் இறைதியானத்திலும் ஈடுபட வேண்டும்.இரவில் எழுந்து தொழும்போது கிடைக்கும் அமைதிக்கும் ஆன்ம வலிமைக்கும் ஈடு இணையே இல்லை. அந்த வழிபாடுகளை முடித்த கையோடு ஸஹர் உணவையும் உண்ணும் போது ஒரு நோன்பாளியின் மனநிலை எப்படி இருக்கும்?

‘இறைவனுக்காகவே எழுந்து மனம் உருகி தொழுதேன். அந்த இறைவனுக்காகவே வேதத்தையும் ஓதினேன்.  இறைவனின் அருளால்தான் ஸஹர்  உணவும் நமக்குக் கிடைத்திருக்கிறது. இறைவன் அளித்த இந்த உணவை உண்டு, இறைவனுக்காகவே பகல் முழுவதும் நோன்பு இருப்பேன்” எனும் எண்ணம் அந்த அதிகாலை நேரத்தில் மனத்தில் ஆழமாகப் பதிகிறது.தன் உணவும், தன் இருப்பும், தன் வழிபாடுகளும் ஏன், தன்னுடைய மொத்த வாழ்வுமே இறைவனுக்கு உரியது என்னும் எண்ணம் ஆழமாய்ப் பதியும்போது ஆண்டவனின் கட்டளைகளுக்கு மாறு செய்யும் எண்ணம் நோன்பாளியின் மனத்தில் துளியும் எழாது.

இன்னொரு விஷயத்தையும் மார்க்கம் வலியுறுத்துகிறது. எத்தனையோ ஏழை எளிய மக்கள் நோன்பு நோற்க விரும்புவார்கள். ஆனால் ஸஹர் உணவுக்கு அவர்களிடம் எதுவும் இருக்காது. அப்படிப்பட்ட எளிய மக்களின் ஸஹர் உணவுக்கும் உதவுங்கள் என்று இஸ்லாம் ஆணையிட்டுள்ளது. இதற்காகவே பல இடங்களில் இலவச ஸஹர் உணவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் தானமாகவும் வழங்கப்படுகின்றன.நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஸஹர் உணவில் அருள்வளம்(பரக்கத்) இருக்கிறது. ஆகவே ஸஹர் உண்ணுங்கள்.”
- சிராஜுல்ஹஸன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்