SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மன்னார்குடி ராஜகோபாலனுக்கு பிரம்மோற்சவம்

2020-03-27@ 12:04:49

“லீலா யஷ்டி மனோஜ்ஞ தக்ஷிண கரோ பாலார்க்க துல்ய ப்ரப பாலாவேசித திவ்ய ரத்ன திலகோ மாலாவலீ மண்டித சேலா வேஷ்டித மௌலி மோஹித ஜன சோலாவனீ மன்மத வேலாதீத தயா ரஸார்த்ர ஹ்ருதயோ மே லாலிதோ மௌலினா”

என்ற ஸ்லோகத்தில் காட்டப்பட்டுள்ளபடி, வலக்கையில் செண்டு எனப்படும் கோலை ஏந்திக் கொண்டு, இளஞ்சூரியனைப் போன்ற ஒளி கொண்டவனாய், திவ்யமான ரத்தின திலகத்தை நெற்றியில் தரித்தவனாய், செண்பகம் போன்ற சிறந்த பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனாய், அழகிய தலைப்பாகை அணிந்தவனாய், மக்களை மயக்கும் சோழ நாட்டு மன்மதனாய், எல்லையில்லாத கருணையில் தோய்ந்த உள்ளம் படைத்தவனாய் மன்னார்குடியில் வித்யா ராஜகோபாலன் திகழ்கிறான்.

சோழர்கள் காலத்தில் மன்னார்குடியில் ஸ்ரீராஜகோபாலனுக்கும் செங்கமலவல்லித் தாயாருக்கும் சிறிய கோயில் கட்டப்பட்டது. அதன்பின் நாயக்க மன்னர்கள் தஞ்சைப் பகுதியை ஆண்ட காலத்தில், அந்தக் கோயிலை மேலும் செப்பனிட்டு மிகப்பெரிய கோயிலாகக் கட்டினார்கள். அவர்கள் மன்னார்குடி ராஜகோபாலன் கோயிலுக்குக் கட்டிய பிரம்மாண்டமான மதில்களின் அடிப்படையிலேயே, “திருவாரூர் தேர் அழகு, மன்னார்குடி மதில் அழகு” என்ற சொற்றொடர் உண்டானது.

மேலும், மன்னார்குடியின் மையப் பகுதியில் கோயில் இருக்கும்படி அமைத்து, நகரத்தில் உள்ள அனைத்து வீதிகளும் கோயிலைச் சுற்றியே இருக்கும்படி நகரைத் திட்டமிட்டு அமைத்தார்கள். இவ்வாறு கோயிலைப் பிரமாண்டமாகக் கட்டிய பின், பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கோயிலுக்கு சம்ப்ரோக்ஷணம் செய்தார்கள். எனவே ஒவ்வொரு வருடமும் பங்குனி மாத ரோகிணி நட்சத்திரத்தை ஒட்டி மன்னார்குடி ராஜகோபால சுவாமிக்குப் பிரம்மாண்டமான பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

ஆகம சாஸ்திரங்கள் மூன்று நாட்கள் முதல் முப்பது நாட்கள் வரை பிரம்மோற்சவம் செய்யலாம் என்று சொல்கின்றன. பொதுவாகப் பல கோயில்களில் வழக்கத்தையும் நடைமுறையையும் அனுசரித்து ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் செய்வார்கள். ஆனால் மன்னார்குடியில் மட்டும் நாயக்க மன்னர்களின் காலம் தொட்டே மிகப் பிரமாண்டமாகப் பதினெட்டு நாட்களுக்குப் பிரம்மோற்சவத்தை நடத்தி வருகிறார்கள். இவ்வருடம் மார்ச் மாதம் 14-ம் தேதி அன்று தொடங்கிய பிரம்மோற்சவம் மார்ச் 31ம் தேதி நிறைவடைகிறது. இந்தப் பிரம்மோற்சவத்தின் போது, கிருஷ்ண லீலைகளை விளக்கும் வாகனங்களில் ஒவ்வொரு நாளும் ராஜகோபால சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்பாலிப்பார். அந்த வாகனங்கள் மற்றும் அலங்காரங்களின் பின்னணி என்ன என்பதை இக்கட்டுரையில் காண்போம்:

உற்சவத்தின் முதல் நாள் காலை கொடியேற்றம் நடைபெறும். அன்று இரவு கொடிச்சப்பரத்தில் ராஜகோபாலன் வலம் வருவார். இரண்டாம் நாள் தொடங்கிப் பதினாறாம் நாள் வரை ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கில் ராஜகோபாலன் புறப்பாடு கண்டருள்வார். மாலையில் பற்பல வாகனப் புறப்பாடுகள் நடைபெறும்.

இரண்டாம் திருநாளன்று இரவு குழலூதும் கண்ணனாகப் புன்னை மர வாகனத்தில் ராஜகோபாலன் காட்சி தருவார். ஆயர்பாடியில் வாழ்ந்த கோபிகைகள் ஆடையின்றி யமுனையில் நீராடிய போது, அவர்களின் ஆடைகளை அபகரித்துக் கொண்டு கண்ணன் புன்னை மரத்தில் அமர்ந்தான் அல்லவா? அந்த லீலையை நினைவூட்டும் விதமாகப் புன்னை மர வாகனத்தில் இரண்டாம் நாளன்று புறப்பாடு நடைபெறுகிறது.

மூன்றாம் திருநாள் இரவு ராஜ அலங்காரத்துடன் வெள்ளி ஹம்ச வாகனத்தில் ராஜகோபாலன் காட்சி தருவார். முன்னொரு சமயம் தேவர்களும் முனிவர்களும் வேதங்களை இழந்து தவித்த போது, திருமாலே அன்னப் பறவையாக அவதரித்து அவர்களுக்கு வேதங்களை மீண்டும் உபதேசித்தார். அன்னப் பறவையாகத் திருமால் செய்த அவதாரத்துக்கு ஹம்சாவதாரம் என்று பெயர்.

 “அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அருமறையை வெளிப்படுத்த அம்மான்”

என்று இதைத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார். அந்த ஹம்சாவதாரத்தை நினைவூட்டும் வகையில், ஹம்ச வாகனத்தில் ராஜகோபாலன் எழுந்தருள்கிறார். நான்காம் திருநாள் இரவு கோவர்த்தன கிரியையே வாகனமாகக் கொண்டு அதில் ராஜகோபாலன் புறப்பாடு கண்டருள்வார். இந்திரன் பொழிந்த கல்மழையில் இருந்து ஆயர்களையும் ஆநிரைகளையும் காக்க கோவர்த்தன கிரிதாரியாகக் கண்ணன் நின்ற வரலாற்றை இது நினைவூட்டுகிறது.

“ஆகுலம் கோகுலம் பூர்வம் சைலேனாபாலயத் ஸய:
வ்யாகுலம் மே குலம் சாபி பாலக: பாலயது அயம்”

என்ற கோபால த்ரிம்சத் சுலோகத்தில் இந்தப் புறப்பாட்டை ஆசுகவி வில்லூர் நிதி சுவாமிகள் வருணித்துள்ளார். “ஆகுலத்தில் (கலக்கத்தில்) இருந்த கோகுலத்தைக் கோவர்த்தன மலையால் காத்த பாலகன், வியாகுலத்தில் (கலக்கத்தில்) உள்ள நம் குலத்தைக் காக்க நம்மைத் தேடி கோவர்த்தன கிரி வாகனத்தில் வருகிறான்!” என்று இந்த ஸ்லோகத்தில் அனுபவிக்கிறார்.

ஐந்தாம் திருநாள் இரவு மரவுரி தரித்த ராமன் திருக்கோலத்தில் பஞ்சமுக ஆஞ்ஜனேயர் வாகனத்தில் ராஜகோபாலன் காட்சி தருவார். கண்ணன் ஒருமுறை தன்னைக் காண வருமாறு அனுமனை அழைத்த போது, அனுமன் வர மறுத்து விட்டார். “ராமனைத் தவிர வேறு யாரையும் என் கண்களால் காண மாட்டேன்!” என்று திட்டவட்டமாகச் சொன்னார் அனுமன். அனுமனிடம் லீலை செய்ய விழைந்த கண்ணன், கருடனை அனுப்பி, “ராமன் உன்னை அழைக்கிறான்! வா!” என்று அனுமனிடம் சொல்லச் சொன்னார்.

அதைக் கேட்டு அனுமன் விரைந்தோடி வந்த போது, கண்ணனே ராமனின் திருக்கோலத்தில் அனுமனுக்குக் காட்சி அளித்தான். அதுமட்டுமின்றி, ருக்மிணி சீதையாகவும் சத்யபாமா லட்சுமணனாகவும் காட்சி அளித்தார்கள். அதைக் கண்டு பரவசம் அடைந்த அனுமன், கண்ணன் செய்த இந்தத் திருவருளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாளன்று, ராமனின் கோலத்தில் வரும் கண்ணனைப் பஞ்ச முக ஆஞ்ஜனேயராக (கருடன், நரசிம்மர் - சிங்கம், ஹயக்ரீவர் - குதிரை, வராகர் - பன்றி, குரங்கு என ஐந்து முகங்கள்) இருந்து சுமக்கிறார்.

ஆறாம் திருநாளன்று கண்டபேரண்ட பட்சி வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் ராஜகோபாலன் காட்சி தருவார். இரணியனை வதைத்த பின்னும் மிகவும் உக்கிரமாக நரசிம்மர் இருப்பதைக் கண்ட தேவர்கள், அவரை அழிப்பதற்காகச் சரபம் எனும் பறவையை ஏவினார்கள். ஆனால் நரசிம்மரோ இரண்டு தலைகள், பல பற்கள், பெரிய இறக்கைகள், கரிய உடல் கொண்ட கண்ட பேரண்டப் பறவையாக வடிவெடுத்து சரபத்தை வீழ்த்தினார். தேரழுந்தூர் தேவாதிராஜப் பெருமாளின் கழுத்தில் கண்டபேரண்டப் பதக்கம் இருப்பதைக் காணலாம். அந்த கண்டபேரண்ட அவதாரத்தின் நினைவாக ஆறாம் நாளன்று கண்டபேரண்ட வாகனத்தில் ராஜகோபாலன் வலம் வருகிறார்.

ஏழாம் திருநாள் இரவு வண்ணப் புஷ்ப பல்லக்கில் ராஜ அலங்காரத்தில் ராஜகோபாலன் காட்சி தருவார். கொல்லாமை, நல்லொழுக்கம், பொய்யாமை, பொறுமை, மன அடக்கம், புலன் அடக்கம், தியானம், கருணை ஆகிய எட்டு நற்குணங்களையே எட்டு பூக்களாக இறைவனிடம் நாம் அர்ப்பணித்தால், அதை மகிழ்ச்சியோடு ஏற்று நமக்கு முழுமையாக அவர் அருள்புரிவார் என்பதை உணர்த்தவே, பூக்களால் நன்கு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் ஏழாம் நாள் இரவில் ராஜகோபாலன் புறப்பாடு கண்டருளுகிறார்.

எட்டாம் திருநாள் இரவு ரிஷ்யமூக மலை வாகனத்தில் பட்டாபிராமர் திருக்கோலத்தில் ராஜகோபாலன் புறப்பாடு கண்டருள்வார். ராமாவதாரத்தில், அனுமனையும் சுக்ரீவனையும் ராமன் முதன்முதலில் ரிஷ்யமூக மலையில் சந்தித்ததன் நினைவாக இப்புறப்பாடு நடைபெறுகிறது.

ஒன்பதாம் திருநாள் இரவு ராஜ அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் ராஜகோபாலன் காட்சி தருவார். சிங்கம் மிருகங்களுக்கு ராஜா, கண்ணன் உலகுக்கெல்லாம் ராஜா. சிங்கம் பெரும் காட்டுக்கு அதிபதி, கண்ணன் பெருநாடு எனப்படும் வைகுண்டத்துக்கு அதிபதி. சிங்கம் மலைகளில் குடியிருக்கும், கண்ணன் திருமலை திருமாலிருஞ்சோலை போன்ற மலைகளில் குடியிருக்கிறான்.

சிங்கம் மிகுந்த வலிமை படைத்திருந்த போதும் விலங்கு சாகச மேலாளருக்குக் (circus master) கட்டுப்படும், அவ்வாறே கண்ணனும் தன் அடியார்களுக்குக் கட்டுப்படுவான். சிங்கத்தின் நடையைப் போலவே கண்ணனின் நடையும் கம்பீரமாக இருக்கும். சிங்கம் மத யானைகளை வீழ்த்துவது போல், மது கைடபன் போன்ற அசுரர்களைக் கண்ணன் அழிக்கிறான். இப்படிச் சிங்கத்துக்கும் கண்ணனுக்கும் இடையிலுள்ள ஒற்றுமைகளைக் காட்டவே ஒன்பதாம் நாள் சிம்ம வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.

பத்தாம் நாள் இரவு வேணுகோபாலன் அலங்காரத்தில் தங்க சூரியப் பிரபையில் ராஜகோபாலன் புறப்பாடு கண்டருள்வார். சூரியன் இருளைப் போக்குவது போல், நமது அறியாமை என்னும் இருளைப் போக்கி ஞானம் எனும் ஒளியைத் தரும் சூரியனாக ராஜகோபாலன் திகழ்வதை இந்த வாகனம் உணர்த்துகிறது.

பதினொன்றாம் திருநாளன்று இரவு வெள்ளி சேஷ வாகனத்தில், வைகுண்டத்தில் வீற்றிருக்கும் பர வாசுதேவனின் திருக்கோலத்தில் ராஜகோபாலன் காட்சி தருவார். சேஷன் என்ற சொல் தொண்டனைக் குறிக்கும். உலகிலுள்ள அனைத்து ஜீவாத்மாக்களும் தனக்கு சேஷர்கள் தொண்டர்கள் என்பதை உணர்த்தவே, சேஷன் மீது புறப்பாடு கண்டருளுகிறார் ராஜகோபாலன்.

பன்னிரண்டாம் திருநாள் இரவு தங்கக் கருட வாகனத்தில் வைகுண்ட நாதன் திருக்கோலத்தில் ராஜகோபாலன் எழுந்தருள்வார். கருடன் வேத சொரூபி. “வேதங்களால் போற்றப்படும் பரம்பொருள் நானே!” என்பதை உணர்த்தும் விதமாக வேதமே வடிவெடுத்த கருடன் மேல் ராஜகோபாலன் வலம் வருகிறார்.

பதின்மூன்றாம் நாள் காலை காளிய நர்த்தனத் திருக்கோலத்தில் பல்லக்குப் புறப்பாடு நடைபெறும். விஷம் கக்கி யமுனையை அசுத்தமாக்கிய காளியன் மேல் கண்ணன் நடனமாடி அதை அடக்கிய வரலாற்றை இது நினைவூட்டுகிறது.

“நாகாதீச்வர துங்க கோமல மஹாபோக அதிரூடோ ஹரி:”

என்ற கோபால த்ரிம்சத் ஸ்லோகத்தில் இந்தக் காளிய நர்த்தனத் திருக்கோலத்தை ஆசுகவி வில்லூர் சுவாமிகள் துதிக்கிறார். “பாம்புகளின் தலைவனான காளியனின் உயரமான, கோரமான தலைகளின் மேல் ஏறி நடனம் புரிந்த நாட்டிய நாயகன்” என்று குறிப்பிடுகிறார். அன்று மதியம் மூன்று மணியளவில் ஆண்டாள் திருக்கோலத்தில் ராஜகோபாலன் எழுந்தருள்வார். கண்ணனுக்கென்று தன் தந்தை தொடுத்த மாலையை ஆண்டாள் எடுத்து அணிந்து கண்ணாடியில் அழகு பார்த்த வரலாற்றை நாம் அறிவோம் அல்லவா? “நமது மாலையை ஆண்டாள் அணிந்து அழகு பார்த்தாள்! அவளைப் போலவே அலங்காரம் செய்து கொண்டு நாம் அழகு பார்ப்போம்!” என்று கருதிய கண்ணன், ஆண்டாளைப் போலவே தன்னை அலங்கரித்துக் கொள்கிறான்! அது தான் இந்த ஆண்டாள் திருக்கோலம். அன்று இரவு ஹனுமந்த வாகனத்தில் கோதண்டராமன் திருக்கோலத்தில் ராஜகோபாலன் புறப்பாடு கண்டருள்வார். பதினான்காம் நாள் இரவு ராஜ அலங்காரத்தில் யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளி, அதன்பின் அன்றிரவே திருக்கல்யாண உற்சவமும் கண்டருள்வார் ராஜகோபாலன்.

“வாரணம் ஆயிரம் சூழ வலம்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்”

என, யானையின் மேல் கண்ணன் வந்து தன்னை மணந்து கொண்டதாக ஆண்டாள் பாடியதற்கேற்ப, யானைமேல் ராஜ அலங்காரத்தில் புறப்பாடு கண்டருளி அதன்பின் திருக்கல்யாணமும் கண்டருளுகிறார் ராஜகோபாலன்.பதினைந்தாம் நாள் காலை திருப்பள்ளி அறையில் காட்சி தரும் ராஜகோபாலன், மாலை ஐந்து மணியளவில் சூர்ணாபிஷேகம் கண்டருளுகிறார். அன்று இரவு கோரதத்தில் புறப்பாடு நடைபெறும்.

பதினாறாம் நாள் காலை வெண்ணெய்த் தாழி அலங்காரத்தில் ராஜகோபாலன் காட்சி தருவார். கண்ணன் ஆயர்பாடியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அங்குள்ள வெண்ணெயை ஆசையுடன் வாங்கி உண்டதை நினைவூட்டும் விதமாக இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.

“நந்தஸ்ய மந்திரே பூர்வம் பார்த்தஸ்ய
ஸ்யந்தனே தத: நவநீத புஜே கீதா
நவநீத ஸ்ருஜே நம:”

 - என்ற கோபால த்ரிம்சத் ஸ்லோகத்தில், ஆசுகவி வில்லூர் சுவாமிகள் இந்த வெண்ணெய்த்தாழி அலங்காரத்தைத் துதித்துள்ளார். “நந்தகோபனின் இல்லத்தில் வெண்ணெயைத் திருடிவிட்டு, அர்ஜுனனின் தேர்த்தட்டில் கீதை எனும் வெண்ணெயை வெளியிட்டவனை வணங்குகிறேன்!” என்பது இந்த ஸ்லோகத்தின் பொருளாகும். அன்று மதியம் செட்டி அலங்காரத்திலும், அன்று இரவு குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்திலும் ராஜகோபாலன் காட்சி அளிப்பார்.

பதினேழாம் நாள் காலை திருக்கல்யாண கோலத்தில் திருத்தேரில் எழுந்தருளும் ராஜகோபாலன், நான்கு வீதிகளிலும் வலம் வருவார். அன்று இரவு தீர்த்தவாரி நடைபெறும். பதினெட்டாம் நாள் சப்தாவர்ணத்துடன் ராஜகோபாலனின் பிரம்மாண்டமான பிரம்மோற்சவம் நிறைவடையும்.
 
நாகராஜன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்