SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரிஷப ராசி முதலாளி

2020-03-12@ 10:25:37

என்னோட ராசி நல்ல ராசி 12

இலாபமான தொழில்கள்

ரிஷப ராசிக்காரர் மண் ராசி என்பதால் ரியல் எஸ்டேட், உழவு கருவிகள் உட்கார்ந்த இடத்தில் செய்யும் கமிஷன் வியாபாரம், ஷேர் புரோக்கர், கடை, உணவகம் போன்றவை சிறப்பாக இருக்கும். சுக்கிரன் ராசி அதிபதியாக இருப்பதால் பெண்கள் தொடர்பான ஜவுளிக்கடை, ஃபேன்சி ஸ்டோர், நவரத்தின விற்பனை, இசைக்கருவிகள் மற்றும் இசைத்தட்டு விற்பனை, தொழில்முறை பாடகராதல். கணினி தொடர்பான தொழில் போன்றவை வெற்றி தரும்.  
நன்கு யோசித்து எந்த தொழிலிலும் இறங்குவார். சிறிய வெற்றிலை பாக்குக் கடை வைப்பதாக இருந்தாலும் அதையும் சரியாக செய்வார். அதில் நல்ல லாபமும் பார்ப்பார். எதிலும் இவருக்கு இரண்டாவது சிந்தனையே கிடையாது. தொழிலில் இறங்கிவிட்டால் பின்பு வெற்றிப் பாதையில் இவரது பயணம்
ஆரம்பித்துவிடும்.

நிதானமான வளர்ச்சி

ரிஷப ராசிக்காரர் சிறியளவில் தொழில் தொடங்கினாலும் அலட்டிக்கொள்ளாமல் தன் கடின உழைப்பாலும் சாமர்த்தியத்தாலும் பெரியளவில் வளர்த்துக்கொண்டு வருவார். டீக்கடையில் தொடங்கி நிதானமாக வளர்ந்து தன் ஐம்பது வயதில் பெரிய உணவகங்களை பல நாடுகளில் தொடங்கிவிடுவார். நிதானமாகச் செயல்பட்டாலும் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையிலேயே போவார். வரையறுக்கப்பட்ட கொள்கைகளையும் கோட்பாடுகளையும் விதிமுறையையும் தன் தொழிலில் பின்பற்றுவார். இவர் கீழ் பணி செய்வது பணியாளருக்கு எவ்வித சிரமத்தையும் தராது. இவர் நல்ல முதலாளியாக இருப்பார். அதிக ‘நொச்சு’ [nagging], தொணதொணப்பு  இருக்காது. அமைதியாக இருந்தாலும் அனைவரது பணித்திறனையும் நேர்மையையும் கவனித்துக்கொண்டே இருப்பார். யாராவது தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருந்தால் அவரிடம் அதிகம் பேசமாட்டார். திட்ட மாட்டார். அவரை விசாரிக்க மாட்டார். ‘கிளம்பு’ என்ற ஒற்றை சொல்லில் முடித்துவிடுவார். அதன் பின்பு அந்த ஆள் தலை கீழாக நின்று அழுதாலும் கும்பிட்டாலும் ‘நோ என்ட்ரி’. சந்திரன் உச்சமடையும் ராசி என்பதால் இவர் மனமகிழ்ச்சி அல்லது நிம்மதியுடன் இருப்பார். மனக்குழப்பம், சந்தேகம், சஞ்சலம் என்பன இவரிடம் இருக்காது. எந்தத் தொழில் செய்தாலும் மனத்தெளிவு இருக்கும். லக்கினத்துக்கு ஆறு எட்டில் சந்திரன் அமைந்தால் மனக்குழப்பம்  உண்டாகும்.

உழைப்புக்கு மரியாதை

அசுர குருவான சுக்கிரனின் ராசி என்பதால் ரிஷப ராசிக்காரர்கள் எப்பேர்ப்பட்டவரையும் தன் கீழ் வைத்து வேலை வாங்கிவிடுவர். வேறு எவரிடமும் வேலை செய்யாதவர் கூட இவரிடம் வேலை செய்வார், காரணம் இவர் திறமையுள்ளவருக்கு நல்ல மரியாதையும், சுதந்திரமும், ஊக்கமும் கொடுப்பார். ஏதேனும் தவறு நடந்துவிட்டால் மேஷ ராசிக்காரர் மாதிரி குய்யோ முறையோ என்று கத்த மாட்டார். இனி இப்படி செய்யாதே என்பார். அந்த ஒரு வார்த்தையில் தவறு செய்தவர் திருந்திவிடுவார். மறுமுறை அந்த தவறு நடக்காது. இவரும்  கடுமையான உழைப்பாளி என்பதால் உழைப்புக்கு மதிப்பு கொடுப்பார். இவரும் மற்றவருடன் சேர்ந்து  இரவு பகல் பாராமல் உழைப்பார். தன் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவார்.

உலக வாழ்க்கை இன்பம்

சுக்கிரனின் ஆதிபத்தியத்தில் பிறந்த ராசிக்காரர் என்பதால் உலக வாழ்க்கை இன்பங்களில் இவருக்கு நாட்டம் அதிகம் நல்ல சுவையான சாப்பாடு, தரமான உடை, குடியிருக்க வசதியான வீடு அமைதியான பணிச்சூழல் அன்பான சுற்றமும் நட்பும் என சொகுசாக வாழ்வார்கள். கூடுமானவரை  பிக்கல் பிடுங்கலை தவிர்த்துவிடுவார். பெண்களிடம் பிரியமாய் இருப்பார். ஆனால் பாரம்பரியம் மாறாமல் பெண் பணியாளர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார். ஆணாதிக்கவாதி போல நடந்துகொள்வார். பணித்தளத்தில் பெண்கள் சத்தமாக பேசுவதும் அரட்டை அடிப்பதும் இவருக்குப் பிடிக்காது. அறிவும் திறமையும் மிக்க பெண்களுக்கு நல்ல மரியாதை கொடுப்பார்.

புதிய விஷயங்களில் ஆர்வம்

ரிஷப ராசி முதலாளிக்கு யாரும் தன்னிடம் வந்து நடைமுறைக்கு ஒவ்வாத கதைகளை, கற்பனைகளை, சொல்வது பிடிக்காது. நடக்கக்கூடிய விஷயங்களையே அவர் பேசவும் கேட்கவும் விரும்புவார். தனது தொழில் தொடர்பான புதிய விஷயங்கள் புதிய கண்டுபிடிப்புகள் போன்றவற்றை ஆர்வமாகக் கேட்பார். இத்தகைய விஷயங்களைச் சொல்பவரை அவருக்கு மிகவும் பிடிக்கும். எப்போதும் தன் அலுவலகத்தில் பத்தி, சாம்பிராணி போன்ற நறுமணம் இருக்க வேண்டும் என்பது இவரது ஆசை. சுத்தம், சுகாதாரம், நறுமணம், நல்ல பளிச்சென்ற நிறம், இன்னிசை, சாமி படம் ஆகியவை இவர் இருக்குமிடத்தில் இருக்கும். இருக்க வேண்டும்.

பக்தி உண்டு கொடை இல்லை

ரிஷப ராசி முதலாளிக்குத்  தெய்வ பக்தி உண்டு ஆனால் மூடப் பழக்க வழக்கங்களை வெறுப்பார். சாமி பெயரில் கோயில் குளம் விழா விசேஷம் என்று  யாராவது பணம் கேட்டால் தர மாட்டார். ஆனால் இவருக்கே ஒரு கோயில் விசேஷம் சிறப்பானது எனத் தோன்றினால் அல்லது கோயிலுக்கு ஒரு மண்டபம் கட்ட வேண்டும், என்று நினைத்தால் அதைச்  செய்து தருவார். அப்போது கஞ்சத்தனம் பார்க்கமாட்டார். பொதுவாக இவர் தன் குடும்பம், தன் தொழில் மேம்பாடு, தன் சுகம் பற்றிய ஆர்வம் அதிகம் உடையவர். பொது நலச்சிந்தனை மிகவும் குறைவு. இவர் செய்யாவிட்டாலும் இவர் நண்பர் மூலமாகக் கூட சிபாரிசு செய்வதற்கு தயங்குவார்.

உடையிலும் பேச்சிலும் நாகரீகம்

ரிஷப ராசி முதலாளி தன் பணியாட்கள் கலைந்த தலையுடன் நாகரீகம் என்ற பெயரில் சாயம் போன ஜீன்சை போட்டுக்கொண்டு அலுவலகத்துக்கு வருவதை விரும்பமாட்டார். நேர்த்தியாக உடை உடுத்தி, ‘நீட்டாக’ தலை சீவி வருவதையே விரும்புவார். அலுவலர்கள் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வது, பயனற்ற வெற்றுச்  சொற்களை பேசுவது ஸ்லேங்க் பாஷையில் பேசுவது, தேவையற்ற கமெண்ட் கேலி கிண்டல் செய்வது  போன்றவை இவருக்கு சுத்தமாகப் பிடிக்காது. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலே இவரது சொல்லாடல் பாணியாகும். இவரும் தம் பணியாட்களிடம் அதிகம் பேச மாட்டார். சில சொற்களில் நல்ல வழிகாட்டி விடுவார்.  ‘பேச்சு படிச்ச நாய் வேட்டைக்கு உதவாது’ என்பது இவருக்கு பிடித்த பழமொழி

இவர் பேசினால்...

ரிஷப ராசிக்காரரிடம்  எந்தப் பொருளையும் நயமாகப் பேசி கஸ்டமர் தலையில் கட்டி விடும் பழக்கம்  கிடையாது. அதனால் இவர் சேல்ஸ், மார்க்கெட்டிங் போன்ற துறைகளை விரும்ப மாட்டார். ஒருவேளை மண் தொழில் சார்ந்த வேளாண்மைக் கருவிகள் விற்பனை தொழில் செய்து வந்தால் அந்த குறிப்பிட்ட கருவியின் செயல் திறன், மின் சக்தி, மிச்சமாகும் மனித உழைப்பு பற்றி அழகாக கஸ்டமரிடம் எடுத்துரைப்பார். கூடுதலாக எதுவும் பேசமாட்டார். ரியல் எஸ்டேட் தொழில் செய்தால் அந்த வீட்டடி மனையை வாங்குவதால் ஏற்படக் கூடிய லாபங்கள் பற்றி எடுத்து விளக்குவார். சுக்கிரனுக்குரிய நவரத்தின வியாபாரம் செய்தால் குறிப்பிட்ட ரத்தினத்தின் மதிப்பு அதன் சக்தி அதனை அணிந்தோர் பெற்ற பயன் அதன் மறுவிற்பனை மதிப்பு போன்றவற்றைத் தெளிவாக எடுத்துரைப்பார். வேறு பந்தா  பகட்டு  கிடையாது. வெட்டித்தனமான பேச்சு இவரிடம் எப்போதும் இருக்காது. சூழ்நிலைக்குத் தேவையற்ற ஒரு சொல்லைக் கூடச் சொல்லி அவர் தன் வாக்கு சக்தியை வீணாக்க மாட்டார்.

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்