SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோமாஸ்கந்தரை வழிபடுங்கள்...சோதனைகள் தீரும்!

2020-03-10@ 13:11:15

?என் மகள் மருத்துவத்துறையில் டிப்ளமோ முடித்து வெளியூரில் பணிபுரிகிறாள். அவளுடன் படித்த மாணவன் ஒருவனை விரும்புவதாகவும், அவனையே திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறுகிறாள். அந்தப் பையன் சாதியைக் காரணம் காட்டி இடையில் ஒத்துவராது என்று தெரிவித்ததாகச் சொன்னாள். தற்போது மீண்டும் பழகி வருகிறாள். அவர்கள் குடும்பம் என் மகளை ஏற்றுக்கொள்ளுமா? மகளின் வாழ்வு சிறக்க என்ன செய்ய வேண்டும்? வழிகாட்டுங்கள்.

- தமிழ்செல்வி, வேலூர்.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் காதலைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் தற்போது நடந்து வரும் ராகு புக்தியின் காலத்தில் காதலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் அவரது இந்தக் காதல் திருமணத்தில் முடியுமா என்பது சந்தேகமே. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் செவ்வாயின் அமர்வும், ஏழாம் வீட்டின் அதிபதி புதனின் பாக்ய ஸ்தான அமர்வும் கண் நிறைந்த கணவனை அவருக்கு அமைத்துத் தரும். திருமண வாழ்வு என்பது நல்லபடியாக அமையும்.

பொருந்தாத இந்தக் காதலை மறந்துவிட்டு உத்தியோகத்தில் கவனத்தை செலுத்தச் சொல்லுங்கள். உத்தியோக ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரனின் இணைவு சிறப்பான உத்தியோக பலத்தினைத் தருகிறது. உத்தியோக ரீதியாக தற்போது இடமாற்றத்திற்கான வாய்ப்பும் உண்டு. அந்த இடமாற்றம் இவரது மனதிலும் மாற்றத்தினை உண்டாக்கும். செவ்வாய்கிழமை தோறும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று கீழ்க்கண்ட துதியினைச் சொல்லி வழிபட்டு வரச் சொல்லுங்கள். 04.01.2021 முதல் மகளின் மனநிலையில் தெளிவான
சிந்தனையைக் காண்பீர்கள்.

“இணையறும் அறுமுகனே இதசசி
மருமகனே இணரணி புரள்புயனே
எனநினை எனதெதிரே.”

?என் மகனை நல்லபடியாக படிக்கவைத்து, நல்ல உத்தியோகம், திருமணம் என்று நல்ல வாழ்க்கையை அமைத்து தந்திருக்கிறேன். பேரனும் பிறந்துவிட்டான். என்னை தந்தையாக, மானசீக குருவாக, நல்ல நண்பனாக, ரோல் மாடலாக ஏற்று வாழ்ந்த மகன் ஓரிரு ஆண்டுகளாக நடத்தையில் முரண்பட்டு நிற்கிறான். நானும் என் மனைவியும் தனித்துச் செல்லலாமா, இந்நிலை எவ்வளவு காலம் தொடரும்? உரிய பரிகாரம் சொல்லுங்கள்.

- நாயகம், காஞ்சிபுரம்.

31வயதாகும் உங்கள் மகன் குடும்பப் பொறுப்பினை சுமக்க ஆரம்பித்துவிட்டார் என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டு முடிவெடுங்கள். உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் தந்தையைப் பற்றிச் சொல்லும் ஒன்பதாம் வீட்டில் குரு அமர்ந்திருக்கிறார். நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் தந்தைதான் அவரது ரோல் மாடல் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. தந்தையின் மீது உயிரையே வைத்திருக்கும் உங்கள் மகன், வயதான பெற்றோருக்கு எந்தவிதமான சிரமமும் கொடுக்கக்கூடாது என்பதற்காக மொத்தப் பொறுப்புகளையும் தானே சுமக்கத் துவங்கியிருக்கிறார். சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் நீங்கள் அநாவசியமாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் மகனின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்படுங்கள்.

உங்களையே வழிகாட்டியாகக் கொண்டு செயல்படும் மகன் எந்தக் காலத்திலும் தவறு செய்யமாட்டார் என்பதை முழுமையாக நம்புங்கள். அவருக்கு பக்கபலமாக துணை நில்லுங்கள். காலத்திற்கு ஏற்றவாறு ஒரு சில பழக்க வழக்கங்கள் மாறுபடலாம். அதற்காக அவரைவிட்டு தனித்துச் செல்வது என்பது அவரது வாழ்வினை பாதித்துவிடும். மகனின் நல்வாழ்வு கருதி அவரோடு இணைந்து வாழுங்கள். திங்கட்கிழமை தோறும் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சோமாஸ்கந்தர் சந்நதியில் நெய்விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். மனதில் உண்டாக்கியுள்ள குழப்பம் சூரியனைக் கண்ட பனி போல் விலகிவிடும்.

?எங்களுடைய பூமி நான்கு வழிச் சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. அதனை விலைக்கு வாங்க பலரும் முன் வருகிறார்கள். என்னுடைய காலத்திற்குள் பூமிகள் விற்று என்னுடைய மக்களுக்கு கொடுக்க வேண்டும். எப்பொழுது விற்றால் நல்ல விலை கிடைக்கும்

? இன்னும் கொஞ்ச நாட்கள் நான் நலமுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?

- எம்.எஸ்., பொள்ளாச்சி.

சித்திரை நட்சத்திரம், துலாம் ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. தனாதிபதி சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் அமர்ந்து இருப்பதால் சற்று நிதானித்துச் செயல்பட வேண்டியது அவசியம். சத்ரு, ரோக, ருண ஸ்தானம் ஆகிய ஆறாம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்து தசையை நடத்தும் காலத்தில் எதிரி, கடன், வியாதி ஆகிய மூன்றும் ஏதேனும் ஒரு வகையில் பிரச்னையைத் தரக்கூடும். அதே நேரத்தில் சுக்கிரன் குருவின் சாரத்தில் அமர்ந்துள்ளதாலும், குரு ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்றுள்ளதாலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. பிரச்னை என்பது உண்டானாலும், அதனை சமாளிக்கும் வகையில் எவரேனும் ஒருவர் மூலமாக உதவி என்பது வந்து சேரும். தற்போது சொத்தினை விற்பதற்கான முயற்சியில் இறங்க வேண்டாம். 29.03.2021 முதல் துவங்க உள்ள சூரிய புக்தியின் காலத்தில் உங்கள் பூமி நல்ல விலைக்கு விற்பதோடு உங்கள் மக்களுக்கும் வேறொரு நல்ல இடத்தில் இடம் வாங்கித் தருவதற்கான சந்தர்ப்பமும் கூடி வரும்.

தற்போதைய சூழலில் நிதானித்துச் செயல்படுவதே நல்லது. இன்னும் ஒரு வருட காலத்திற்குப் பிறகு பூமியை விற்பதற்கான முயற்சியில் இறங்கலாம். அதுவரை மார்க்கெட் விலையில் உள்ள ஏற்ற இறக்கங்கள், நெளிவு சுளிவுகள் ஆகியவற்றை ஆற அமர அறிந்து கொள்ளுங்கள். பதட்டம் ஏதுமின்றி செயல்பட்டாலே உடல் ஆரோக்யம் என்பது நல்லபடியாக இருக்கும். வெள்ளிக்கிழமை தோறும் பசுமாட்டிற்கு பூஜை செய்து வழிபடுங்கள். அதற்கான வாய்ப்பு கிடைக்காவிடில் வெள்ளியினால் ஆன சிறிய கன்றுடன் கூடிய பசுமாடு விக்கிரகத்தை வாங்கி வீட்டுப் பூஜையறையில் வைத்து வழிபட்டு வாருங்கள். மகாலட்சுமியின் திருவருளால் செல்வச் செழிப்போடும் ஆரோக்யத்தோடும் அந்திமக் காலத்தினை ஆனந்தமாய் கழிப்பீர்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்