SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு

2020-03-05@ 10:54:40

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் 55

ஆளுகைக்கு உந்தன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால்
மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என் குறை நின் குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே
பாடல்  எண்:39

அபிராமி பட்டர் இறைவியை பற்றியும் (பதிவாக்கியம்) இயற்கையை பற்றியும் (பாசவாக்கியம்) தன்னை பற்றியும் (பசு வாக்கியம்) மூன்று விதமான  கருத்துக்களை பதிவு செய்கிறார். குறிப்பாக இந்த பாடலை பொறுத்தவரை தன் உணர்வைப் பதிவு செய்கிறார். அவர் பதிவு செய்வதன் அவசியம்  உபாசனை செய்பவர்கள் அனைவருக்கும் அந்த உணர்வு வரும் என்பதே அதற்கு காரணம்.

பொதுவாக உபாசனை நெறி என்பது ஒரு பயணத்தைப் போல, அதன் துவக்கம் தீட்சை பெறுவது. அதன் முடிவு இறையருளை அனுபவிப்பது.  உபாசனையை தொடங்கி முழுமையடையும் முன் நடுநிலையில் உள்ள உபாசகனின் தடுமாற்றமான மனநிலையை இந்த பாடலில் பதிவு செய்கிறார்.   ஒரு உபாசகனாக நம்பிக்கையுடன் தீட்சை பெற்றார். அதை முறையாக ஆசான் காட்டிய வழியில் பின்பற்றி பூசனை, ஜபம், தியானம் முதலியவற்றை  தொடர்ந்து செய்கின்றார். அப்படி செய்தும் எந்த விதமான வளர் நிலை மாற்றமும் காணாத சூழலில் அவரின் மன உறுதி சற்று தடுமாற்றமான  நிலையை அடைகிறது. அந்த நிலையில் இந்த பாடலை பாடுகின்றார்.

‘‘அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே’’ என்று இறைவியை முன்னிலைப் படுத்தி அழைப்பதிலிருந்தும் உண்டு, உண்டு, என்று மீண்டும்,  மீண்டும் உறுதி செய்வதனாலும், தன்னை சுய தணிக்கை (இதை சாத்திரம் ஆத்ம சாதனம் என்கிறது) செய்து கொள்கிறார்.தன் மனது பூரணமாக  உமையம்மையை நம்ப வேண்டும். அப்பொழுது தான் இறையருளை அடைய முடியும். அந்த நம்பிக்கை குறைகிறது. அது பெரும்பாலும் சூழல் சார்ந்தே  அமைகிறது. உதாரணமாய் இப்பாடலை பாடும் சூழலும், அதற்கு முன் உள்ள சூழலும் அவர் சிந்திப்பதற்கு காரணமாய் அமைந்துள்ளது. ஏனென்றால்  கீழே நெருப்பு, மேலே நிலவு இன்னும் தோன்றவில்லை. இதனாலே அவரின் மனது தடுமாற்றமான நிலையை அடைகிறது. அந்த வேலையில்  தனக்குத் தானே சரியற்ற தன்னுடைய மனநிலையை சரி செய்து கொள்கிறார் பட்டர்.

‘‘அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனிமாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே’’  
பாடல் எண்:72

வழிபட நெஞ்சுண்டு    என்பதனால் பிற (தவறான) தன்மைகளில் சென்று விடும் தன் மனதை, இறைவியின் முன்னிலையில் கொண்டு நிறுத்த  முற்படுகின்றார். நம்பிக்கை இழக்கும் மனதிற்கு நம்பிக்கையூட்டுகிறார். உபாசனை நெறியில் இருப்பவர்கள் இப்பாடலை பாராயணம் செய்யும் போது  முழுமையான நம்பிக்கை அடைவர்.இப்பாடலில் அபிராமி பட்டர் வஞ்சகப் புகழ்ச்சி அணியை பயன்படுத்தி புகழ்வது போல் பழிப்பதும். பழிப்பது போல்  புகழ்ந்தும், இருவகையாகவும் தன் உள்ளக் குமுறல்களை, புலம்பல்களை, வெளிப்படுத்தியுள்ளார்.

இதை பட்டரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை அடியொற்றி காண்பது மேலும் நம் புரிதலுக்கு வழி வகுக்கும். ஒரு சமயம் அபிராமி பட்டர் தன்  வழக்கமான பரிசாரக பணியை ஆலயத்தில் செய்து கொண்டிருந்தார்.அப்போது அபிஷேகத்திற்காக குடத்தினில் நீரை கொண்டு போய் அண்டாவில்  நிரப்ப வேண்டும். ஒவ்வொரு முறையும் கிணற்றினில் நீரை இறைத்து குடத்தினில் தூக்கி சென்று அபிராமியின் அருகில் இருக்கும். அண்டாவில் மிக  கவனமாக ஊற்ற வேண்டும். அவர் கடந்து செல்லும் பாதை அந்தராளம் என்ற விளக்குகள் இடாத இருட்டு பகுதியாகும்.
அதை அடுத்துள்ள கர்பகிரஹம் மிகவும் குறைந்த விளக்குகளுடனேயே இருக்கும். தற்போது உள்ளதை போல் மின் விளக்குகளோ ஒளி வசதியோ  இல்லை மேலும் அபிராமிக்கு அபிஷேகம் செய்ய எண்ணெய் பஞ்சாமிருதம் பால் போன்றவை அடிக்கடி பயன்படுத்தப் படுவதால், தரை நன்கு  வழுக்கும் தன்மையுடையதாக இருக்கும். குடம் வேறு வழுக்கும் தன்மை உடையதாக இருக்கும். இவ்வளவு சூழலிலும் தண்ணீரை கவனமாக கொண்டு  அண்டாவில் நிரப்ப வேண்டும். இது தினசரி நிகழ வேண்டிய செயல். திறமையாக செய்பவர் தான் அபிராமி பட்டர். அன்று ஏனோ மிகவும் தடுமாறியது.  வழக்கமாக தான் தூக்கும் குடம் கூட, அதிக பாரமாக தோன்றியது.

அவர் மனைவி அவரிடத்தில் வழக்கமான தன் வறுமையை சுட்டிக்காட்டி பேசிய வார்த்தைகள் தான். அந்த தடுமாற்றத்திற்கு காரணம். பொதுவாக  எப்பொழுதும் பட்டர், பெரும் புலவர் காலையிலே எழுந்து ஸ்நானம் செய்து சந்தியா வந்தனம், தீட்சா, ஜபம், ஆத்மார்த்த பூசை ஆகியவற்றை செய்து  விடுவது. அவர் வழக்கம் ஆனால் அன்று சற்று கூடுதலாக கண் அயர்ந்து விட்டார். கோயில் மணியோசை அவரை அழைப்பது போல் ஓங்கி ஒலித்தது. வழக்கமாக பொறுமையாக இருக்கும் அவர் படபடத்தார். நீயாவது எழுப்பிவிடக் கூடாதா என்று தன் மனைவியை கடிந்து கொண்டார்.தான். செய்யாத குற்றத்திற்கு பொறுப்பேற்காத அவர் மனைவியார் சற்றே அன்புடன் கோபித்துக் கொண்டார். அனுஷ்டானத்தில் ஒன்றும்  குறைவில்லை பணத்திற்கு மட்டும் பஞ்சமில்லை என்று எதிர் மறையாக இன்றைய வறுமை சூழலை விளக்கினாள். அதைப்பற்றி யோசித்துக் கொண்டேயிருந்தார் பட்டர்.

     ‘‘இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்தும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே’’
பாடல் எண்: 54.
 
‘‘தோத்திரம் செய்து தொழுது மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை குலம்
கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பார்
எங்குமே ’’
பாடல் எண்: 67
உழலும் உண்மையை யோசித்தவாரே குடம் சுமந்தார் அது தான் அந்த தடுமாற்றத்திற்கு காரணம்.
 
‘‘வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே ’’
பாடல் எண்: 52.

என்றெல்லாம் பெற்றுவிட ஆசைப்பட்டார். அந்த ஆசைப்பட்ட பொருள் கிடைக்காத போது துவள்கிறார். உமையம்மைக்கு தன் ஆசையை தீர்க்கும்  பேற்றாறல் இருந்த போதும். அதை தனக்கு கொடுக்காத போது அதுவே உமையம்மையின் மீது கோபத்தையும் வருத்தத்தையும் தருகிறது.
     
‘‘ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு  அந்தகன் பால்
  மீளுக்கு உன்தன் விழியின் கடை உண்டு’’
மேல் இவற்றின்
 மூளுகைக்கு கென் குறை நின் குறையே அன்று’’

என்று மிக அழுத்தமாக உமையம்மை இருக்கின்றாள். அவள் நமக்கு அருள மறுக்கின்றாள் என்று தனக்குள்ளே ( Mind voice) புலம்புகின்றார். உன் அருள் மட்டுமே அத்துனையும் செய்ய வல்லது. நீ அருள் செய்யாமல் இருக்கின்றாயா? என் கண் முன்னே உன்னை வணங்குபவர்கள் வேண்டிய  பயனை அடையத் தானே செய்கிறார்கள். உன்னை வணங்கி சென்ற பக்தர்கள் சில நாட்களில் வேண்டியது போல் நடந்து விட்டது என்று (குழந்தை  பிறந்து விட்டது, வேலை கிடைத்து விட்டது, நோய் நீங்கி விட்டது) உன் சந்நதியில் நீ அருளியதற்கு சான்றாக இங்கே வரும் பக்தர்கள் அபிஷேகம்,  அலங்காரம் பூசை என்று செய்து கொண்டு தானே இருக்கிறார்கள். நான் உடன் இருந்து தானே அவற்றை எல்லாம் காண்கிறேன். அவர்களுக்கெல்லாம்  அருளும் நீ எனக்கு மட்டும் ஏன் அருள் செய்ய மறுக்கிறாய் வேண்டியது நிகழவில்லையே என்று ஏக்கத்தோடும் இத்தனை உள் உணர்வுகளோடு  அபிராமியை பார்க்கிறார்.

‘‘ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு’’

இந்த பூவுலகத்தில் அனைத்து விதமான போக போக்கியங்களை அனுபவிப்பதில் முதன்மையானவர் அரசனேயாவார். அபிராமி பட்டர் அரசனாக  விரும்பாமல் அரசன் அனுபவிக்கும் பணம், பதவி, செல்வம் போன்ற ராஜ போகத்தை விரும்புகிறார் அதை அடைவதற்கு வழி தேடுகிறார். தேவர்கள்  என்பவர்கள் பிறப்பு, இறப்பு, மூப்பு இவை மூன்றும் இல்லாதவர்கள். அது போல் தான் ஆக வேண்டும் என்று ஆசை கொள்கிறார். (த்ரி தஷா என்கிறது  அமர கோசம்) அப்படி ஆள்வதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை சாத்திரங்கள் பல கருத்துக்களை சொல்கிறது. அதில் சில உதாரணமாய் நூறு  அஸ்வமேத யாகம் செய்பவர்கள் இந்திரபதவியை அடையலாம் என்கிறது பூர்வமீமாம்சா சாத்திரம்.இறந்தவர்களுக்கு முறையாக செய்யும்  திவசத்தால் அவர்களது ஆன்மா சொர்க்கலோகத்தை அடையும் என்கிறது கல்ப சூத்திரம். அது போலவே ஸ்ரீ வித்யா உபாசனையில் உமையம்மையின்  பாதுகைகளை பூசித்தல் மூலம் அரசபோகத்தோடு இந்திர பதவியையும் அடையலாம் என்கிறது, உமையம்மையின் ஆகமம்.
 
‘‘அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே ’’

என்ற வரியினால் நன்கு உணரலாம். இப்படி உயர்ந்த ஸ்ரீ வித்யா உபாசனை நெறியை நன்கு கற்று அதன் வழி ஆராதித்தும் வருவதனால் அந்த  அமராவதியை ஆளுவதற்கான தகுதி தனக்கு இருப்பதாக இங்கு உறுதியாக கூறுகின்றார்.அவர் உறுதிபடக் கூறுவதனால் நமக்கு நம்பிக்கையும்,  உறுதியும் ஏற்படுத்துவதற்கு மிக ஆழமாக ‘‘உண்டு’’ என்ற வார்த்தையை பயன் படுத்துகிறார். அது எதையும் தான் அடையவில்லை என்பதனால்  இந்த இடத்தில் புகழ்வது போல் பழிக்கின்றார்.

‘‘அந்தகன் பால் மீளுகைக்கு உன்தன் விழியின் கடை உண்டு’’

பிறந்த ஒவ்வொரு ஆன்மாவும் ஒரு காலத்தில் இறந்து அடுத்த உடல் புக நேரிடும், அப்படி உடல் புகுவதற்கு பிறப்பு என்றும், ஒரு உடலை விட்டு  நீங்குவதற்கு இறப்பு என்றும் பெயர். இந்த பிறப்பு இறப்பு இரண்டும் மிகுந்த துன்பத்தை தரும். அந்த துன்பத்தை கண்டு உலகிலுள்ளோர்  அஞ்சுகின்றனர்.நாம் செய்கின்ற பாவ புன்ண்ணியத்திற்குத்தக்கவாறு இரக்க மற்ற காலன் கையில் இருக்கும் பாசக்கயிறானது நம் கழுத்தை இறுக்கும்.  நோய்,மூப்பு, இயலாமை, அச்சம் இவை காலனின் வரவை அறிவுறுத்தல் காரணிகள்.காலன் வந்திட்ட அச்சத்தால் உன் மேல் இருக்கின்ற சிரத்தை  குறைகிறதோ, முதுமையினால் என் செயல் தடுமாறுகிறதோ, செய்ய வேண்டிய கடமையை எண்ணி கலக்கம் வருகிறதே. உன்னைப்பற்றி இதுவரை  நான் செய்த பூசனை எல்லாம் பயன் இன்றிப் போய் விடுமோ? நான் வைத்த உறுதியான நம்பிக்கை குறைகிறதே.காலன் வரும் போது எதை செய்ய  வேண்டும், எதை செய்யக் கூடாது என்று என் அறிவு உறுதி செய்ய மறுக்கிறதே என்று தனக்குள்ளே ஏற்பட்ட மாற்றத்தை எண்ணி  கலங்குகிறார்.அச்சத்தை இல்லாமல் செய்பவள் உமையம்மை. இந்த பாடலில் எமனிடம் இருந்து நம்மை காப்பது உமையம்மையின் கண் என்பது
கூறுகிறார்.

‘‘மேல் இவற்றின் மூளுகைக்கு ’’

‘‘மூளுகை’’ என்பது மனதிற்குள் எண்ணிப் பார்க்கப்படுகிற ஒரே கருத்தை சார்ந்த முரண்பாடான எண்ணம் என்பது பொருள். நல்லவைகளும்,  தீயவைகளும், சேர்ந்தே அமையும். உபாசனை சார்ந்த தன் மன நிலையை இது வௌிப்படுத்துகிறது. அந்த நிலையில் அபிராமி பட்டர் உள்ளுக்குள்.  இறைவியைப் பற்றிய இரண்டு முரண்பாடான கருத்துக்களை நினைப்பதை நாம் சிந்திப்போம்.உலக இன்பங்கள் அனைத்தையும் தரவல்லது உன்  திருவடி என்கிறது தேவி பாகவதம்.மேலும் சரணடைந்தவர்களை காப்பதில் உன்னைப்போல் யாருமில்லை.

‘‘சரணாகத தீனார்த்தே பரித்ரான பராயணே’’ என்கிறது தேவி மஹாத்மியம். கருணையின் கடல் ‘‘கருணாரச ஸாகராயை நமஹ :’’ என்ற இந்த  லலிதை ஸஹஸ்ர நாமத்தை தான் நான் தினமும் பாராயணம் செய்கிறேன். நவராத்திரி ஒன்பது நாளும் தேவி மஹாத்மியத்தை பாராயணம்  செய்கிறேன். சண்டி ஹோமம் செய்து, எனக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அந்தணர்களுக்கெல்லாம் சம்பாவணை கொடுத்து உன் ஹோரமத்தை   சிறப்பாக செய்ய முயற்சி செய்கின்றேன்.நான் சம்பாதிப்பது மிகவும் குறைவு. நான் என் குடும்பத்துக்கு கூட நகையோ, ஆடைகளோ வாங்கி  கொடுப்பதில்லை, கிடைக்கும் கொஞ்ச பணத்திலும் வேதம் சொன்ன வழிக்கே வழிபாடு செய்ய முயல்கிறேன்.உன்னை குளிர குளிரக் அபிஷேகம்  செய்ய தண்ணீர் அண்டாவில் நிறப்புகிறேன். இந்த தண்ணீரில் தானே நீ குளிக்கிறாய்.

 ‘‘ஆர்த்ராம்’’ என்று உன்னை ஸ்ரீ சூக்தம் குறிப்பிடுகிறதே, உன் மனம் இன்னும் குளிர வில்லையா ? என்று அவர் மனம் கேட்பது போல் இருந்தது.  நான் கேட்கிறம் மனித வாழ்விற்கான 16 செல்வங்கள், கலையாத கல்வி, குறையாத வயது, என்ற உன்னால் நிறை வேற்றி வைக்க முடிந்த சிறிய  வேண்டுதல் தானே. ஆயிரம் வயது வாழ வேண்டும். ஆயிரத்தியெட்டு அண்டங்களையும் ஆள வேண்டும் என்ற நீண்ட பட்டியலையா நான்  சமர்ப்பிக்கின்றேன் என்று தன் பக்கம் இருக்கும் நியாயத்தை ஒரு மனிதனின் இயல்பான ஆசையைதானே நிறைவு செய்யும்படி வேண்டினேன் ‘‘பஞ்ச  கிருத்ய பராயணா ’’ என்கிறதே லலிதா ஸஹஸ்ர நாமம்.அகில உலகங்களையும் படைத்தும், காத்தும் அழித்தும், மறைத்தும் அருளும் உனக்கு என்  இந்த சிறிய ஆசையை நிறைவேற்றுவது கடினமா என்ன? என்று உடன் பாட்டு முறையில் சிந்தித்தவர் இனி எதிர்மறையாக எப்படி சிந்திக்கின்றார்  என்று பார்ப்போம்.

(தொடரும்)

முனைவர்  பா.இராஜசேகர சிவாச்சாரியார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்