SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்!

2020-03-03@ 10:05:40

?நான் வேலை பார்த்த இடத்தில் செய்யாத தவறுக்காக பழி சுமத்தி மிகுந்த அவமானப்படுத்திவிட்டனர். அந்த வேலையை விட்டுவிட்டு வேறு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். உடன் பணி புரிந்த சகஊழியர்களின் சூழ்ச்சியினால் இந்த நிலைக்கு ஆளானேன். என் வாழ்க்கையையே திசை திருப்பிய சம்பவம் அது. தற்போதைய வேலையில் முன்னேற்றம் கிடைக்குமா? உரிய பரிகாரம் கூறுங்கள்.
- உமாராணி, சென்னை.


திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. நீங்கள் என்னதான் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தினாலும் நடந்த தவறுக்கு நீங்களும் ஒருவிதத்தில் பொறுப்பாளிதான் என்பதை உங்கள் ஜாதகம் காட்டுகிறது. உங்கள் மனதில் உண்டான ஆசையின் காரணமாக அடுத்தவர்களின் தூண்டுதலுக்கு பலியாகியுள்ளீர்கள். ஒரு சில விஷயங்களில் நீங்கள் அவசரப்பட்டு செய்த செயல்களும் உங்கள் மீது பழிச்சொல் உண்டாகக் காரணமாக இருந்திருக்கிறது. ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் ராகுவின் தாக்கமே இதற்குக் காரணம். உங்களுடைய ஜென்ம நட்சத்திரமும் ராகுவின் கட்டுப்பாட்டில் வருகிறது. ராகு மனதில் அளவிற்கு மீறிய ஆசையைத் தருவதில் வியப்பில்லை. அதோடு புதன், சனி ஆகிய இரண்டு கிரகங்களும் வக்ர கதியில் சஞ்சரிக்கின்றன. நடந்ததை மறந்து புதிய பணியில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்துங்கள். தற்போது தசையை நடத்தி வரும் புதன் ஆறாம் பாவத்திற்கு அதிபதியாக இருந்தாலும் புத்திக்கூர்மையின் காரணமாக வெற்றியைத் தருபவர். நடந்த சம்பவங்களையே பாடமாகக் கொண்டு அவசரப்படாமல் நிதானித்துச் செயல்படுங்கள். பிரச்னைக்கு உரிய நேரத்தில் எல்லோரையும் போல் சாதாரணமாக யோசிக்காமல் மாற்றி யோசித்து நிதானத்துடன் கையாளுங்கள். வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும். பிரதி மாதந்தோறும் வருகின்ற திருவாதிரை நட்சத்திர நாளில் அருகிலுள்ள சிவாலயத்தில் அபிஷேகத்திற்கு உங்களால் இயன்ற அளவிற்கு பால் வாங்கித் தருவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். நாகாபரணத்துடன் கூடிய பரமேஸ்வரனை வழிபட்டு வருவதும் உங்கள் வாழ்வினில் முன்னேற்றத்தைத் தரும். புதன் தசையின் காலத்திலேயே உங்கள் தனித்திறமையின் மூலம் நீங்கள் யார் என்பதை நிரூபித்து தலைநிமிர்ந்து நடப்பீர்கள்.

?அமெரிக்காவில் உள்ள என் மகளுக்கு கண் பார்வை குறைந்துகொண்டே வருகிறது. கண்களில் நீரும், மருந்துகள் போடுவதால் வலியும் எரிச்சலுமாக மிகவும் கஷ்டப்படுகிறாள். அவளுடைய கண்பார்வை சரியாவதற்கான நல்வழி காட்டுமாறு வேண்டுகிறேன்.
- கணேசன், திருவனந்தபுரம்.


மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அமெரிக்காவில் வாழும் உங்கள் மகளுக்காக நீங்கள் இங்கே பரிகாரம் செய்து வருவதாகவும், சுந்தரர் இயற்றிய மூன்று பதிகங்களை தினமும் நீங்கள் படித்து வருவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். உடம்பு சரியில்லாதவர்கள்தான் மருந்து சாப்பிட வேண்டும். யாருக்கு பிரச்னை இருக்கிறதோ அவர்கள்தான் பரிகாரம் செய்ய வேண்டும். அதிலும் கல்யாணம் செய்துகொண்டு வேறு குடும்பத்திற்குச் சென்றுவிட்ட மகளுக்காக நீங்கள் செய்யும் பரிகாரம் எந்தவிதத்திலும் பலனைத் தராது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிகங்களை உங்கள் மகளுக்கு எழுதி அனுப்பி அவரை படித்து வரச் சொல்லுங்கள். அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் கேதுவின் அமர்வு பல்வேறு விதமான பிரச்னைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. அதிலும் கண் பார்வையின் வீரியத்தை நிர்ணயம் செய்யும் சுக்கிரன் எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதும், தற்போது நேத்ர ஸ்தானம் ஆகிய இரண்டாம் வீட்டின் அதிபதி ஆகிய சனியின் தசை நடப்பதும் சற்று சாதகமற்ற நிலையை இவருக்குத் தந்திருக்கிறது. உங்கள் மகள் அமெரிக்காவில் வசித்து வந்தாலும் அங்கிருந்தபடியே சமயபுரம் மாரியம்மனை மனதில் தியானித்து வழிபட்டு வரச் சொல்லுங்கள். அம்மனின் திருவுருவப் படத்தினை இன்டெர்நெட்டின் மூலமாகவும் டவுன்லோடு செய்து பிரிண்ட் செய்து கொள்ள இயலும். தினமும் காலையில் பூஜையறையில் அம்மனுக்கு விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தினை 18 முறை சொல்லி வழிபட்டு வரச் சொல்லுங்கள். இந்தியாவிற்கு வரும்போது அம்மனை நேரில் தரிசித்து கண்மலர் காணிக்கை செலுத்துவதாக அவரது பிரார்த்தனை அமையட்டும். அம்மனின் அருட்பார்வையால் உங்கள் மகளின் பார்வைக்குறைபாடு என்பது விரைவில் நீங்கி நலம்பெறுவார்.

“யாதேவி ஸர்வ பூதேஷூ நேத்ர ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:”


?என் மகன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு போலந்து சென்றுள்ளான். அங்கு சரியான வேலை கிடைக்காததால் கனடா நாட்டிற்கு செல்ல விரும்புகிறான். அவனுடைய முயற்சிகள் பலிக்குமா? என்ன செய்தால் அவனது எதிர்காலம் நன்றாக இருக்கும்? அவன் வாழ்வு சிறக்க வழிகாட்டுங்கள்.
- ஸ்ரீதர், தஞ்சாவூர்.


பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகனின் ஜாதகத்தில் புதன், குரு ஆகிய இரு கிரஹங்களும் வக்ர கதியில் சஞ்சரிக்கின்றன. உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் வக்ரம் பெற்ற குருவுடன், இயற்கையாகவே வக்ர கதியில் இருக்கும் ராகுவும் இணைந்திருப்பதால் இவர் தனது முயற்சிகளில் சற்று மாற்றி யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம் என்பதே இவருக்கான தாரக மந்திரம். பொதுவாக எல்லோரும் நினைப்பதற்கு மாற்றாக இவரது முயற்சி அமைய வேண்டும். கனடா, கலிஃபோர்னியா என்று முயற்சிக்காமல் மற்றவர்கள் செல்லத் தயங்கும் நாடுகளில் தனக்கான பணியினைத் தேடச் சொல்லுங்கள். இவரது ஜாதக பலத்தின்படி சொந்த நாட்டில் வேலை அமையாது. ஆப்பிரிக்கா அல்லது தென் அமெரிக்கா நாடுகளில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 06.05.2020 முதல் சம்பாத்யம் செய்ய துவங்கிவிடுவதால் வெகுவிரைவில் அவருக்கான வேலை கிடைத்துவிடும். தொடர்ந்து 16 வாரங்களுக்கு செவ்வாய்கிழமை தோறும் தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் அமைந்துள்ள மஹாவாராஹி அம்மன் சந்நதிக்குச் சென்று ஆமணக்கு எண்ணெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டு பிரார்த்தனை செய்து வாருங்கள். 16வது வாரம் முடிவடையும் நாளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வதாகவும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நான்கு மாதங்களுக்குள் மகனின் வேலைவாய்ப்பு நிரந்தரமாவதை கண்கூடாகக் காண்பீர்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்