SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆதரவு கரம் நீட்டும் ஆரண்ய சுந்தரேஸ்வரர்

2020-02-25@ 10:58:56

சோழ பெருவளநாட்டின் காவிரியின் வடகரை திருத்தலங்களில் 12வது தலம் கீழை திருக்காட்டுப்பள்ளி. இத்தலத்திற்கு ஆரண்யஸ்வரம் என்ற பெயரும் உண்டு. இங்குள்ளது ஆரண்டய சுந்தரேஸ்வரர் ஆலயம். இறைவன் ஆரண்ய சுந்தரேஸ்வரர். இறைவி அகிலாண்டேஸ்வரி. இறைவியின் இன்னொரு பெயர் அகிலாண்ட நாயகி. ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பை தாண்டி உள்ளே நுழைந்ததும் நீண்ட பிராகாரம். நடுவே பலிபீடமும் நந்தியும் இருக்க இடதுபுறம் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. பிரம்மேசர் முனி ஸ்ரீசர் என்ற அந்த இரண்டு சிவ லிங்கங்களை அடுத்து முருகப் பெருமான் சந்நதி உள்ளது. முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இங்கு அருட்பாலிக்கிறார்.

வடக்கு பிராகாரத்தில் சண்டீஸ்வரர் சந்நதி உள்ளது. ஆலய தலவிருட்சம் பன்னீர் மரமும் இங்கு உள்ளது. கிழக்கு பிராகாரத்தில் பைரவர், சண்டீஸ்வரர், சூரியன் திருமேனிகள் உள்ளன. தெற்கு பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி ஆறு முனிவர்கள் சூழ காட்சி தருகிறார். அவர் அருகே சுவற்றில் மன்னன் ஒருவன் சிவபெருமானை பூஜை செய்யும் கற்சிற்பம் அழகாக அமைந்துள்ளது. மேற்கு திருச்சுற்றில் கற்கட மகா கணபதி உள்ளார். நண்டு பூஜித்த கணபதி இவர். இவரது பீடத்தில் நண்டு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கடக ராசிக்காரர்கள் இந்த விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதால் அவர்களை பற்றியிருக்கும் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

இந்த விநாயகரை அடுத்து இரட்டை லிங்கம் உள்ளது. இரண்டு லிங்கங்கள் இணைந்து காணப்படும் அமைப்பு சிறப்பான அமைப்பு என்கின்றனர் பக்தர்கள். இந்த இரட்டை லிங்கத்தை அபிஷேகம் செய்து ஆராதனை செய்தால் இழந்த பதவியை மீண்டும் பெறலாம் என்பது அனைவரது அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இதனால் தானோ, என்னவோ சமீபத்தில் பதவியிழந்த பலரும், உயர் பதவி வேண்டும் பலரும் இந்த ஆலயத்திற்கு அடிக்கடி வந்து போய் கொண்டிருப்பது கண்கூடான நிஜம். சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் சம்பந்தரால் பாடப்பெற்ற தலம். ஆலய கிழக்கு திருச்சுற்றில் உள்ள பிரம்மேசரரை பூஜை செய்து வழிபடுபவர்கள் 100 அசுவ மேத யாகம் செய்த பலனை அடைவர். பிரம்மன் இத்தலத்தில் வியாக்கரபரதேஸ்வரர், கபாலீசர், அகஸ்தியேசர், முனீசர், சக்ரேஸ்வரர், பிரமேஷ்வரர் உட்பட பத்து சிவலிங்க திருவுருவங்களை எழுந்தருளிவித்து வழிபட்டார்.

இது ஆரண்ய முனிவர் வழிபட்ட அருள்பெற்ற தலம். இவர் மகா காளம்மையை தம் பூஜை முடியுமளவும் காவலாக இருக்குமாறு கேட்டுக்கொண்டு இறைவனை வழிபட்டார் என தல வரலாறு கூறுகிறது. இந்திரன், தேவ குருவாகிய வியாழனை அவமதித்தான். அசுர குருவாகிய துவாட்டாவின் மகன் விசுவரூபனை தேவ குருவாகக்கொண்டு வேள்வி செய்தான். விசுவரூபன் தேவர்கள் அழியுமாறு வேள்வி செய்வதைக் கண்டு இந்திரன் விசுவரூபனைக் கொன்றான். அவன் தந்தை துவாட்டா இந்திரனை கொள்வதற்கு வேள்வி செய்தான். வேள்வியில் தோன்றிய விருத்திரா சூரனை ததீசி முனிவரின் முதுகுத்தண்டை இந்திரன் ஆயுதமாகப் பெற்று அழித்தான். அந்த தோஷம் இந்திரனைப் பற்றியது.

அந்த தோஷம் நீங்க இந்திரன் பல தலங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டான். பின் திருவெண்காடு, கீழை திருக்காட்டுப்பள்ளி இறைவனை வணங்கி தோஷம் நீங்கப்பெற்று தேவலோக ஆட்சியை மீண்டும் கைப்பற்றினான். ஆலயம் மகாமண்டபத்தின் இடது புறம் அன்னை அகிலாண்ட நாயகி தென்திசை நோக்கி நின்ற கோலத்தில் புன்னகை தவழும் முகத்துடன் அருட்பாலிக்கிறாள். இறைவன் கருவறையில் சதுர பீட ஆவுடையாரின் மேல்திசை நோக்கி அருட்பாலிக்கிறாள். சிவபெருமான் பலாசவனம் என்றும் மதங்காஸ்ரமம் என்றும் வழங்கப்படும் திருநாங்கூரிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலுமாக 12 பீடங்களில் எழுந்தருளியுள்ளார்.

இந்த 12 ஆலய இறைவன் ஏக காலத்தில் வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில திருநாங்கூரில் அமைந்துள்ள மதங்கீஸ்வர சுவாமி ஆலயத்தில் ரிஷப வாகனத்தில் திருக்கல்யாணம் கோலத்தில் திவ்ய தரிசனம் தரும் வைபவம் ஆண்டு தோறும் பல ஆயிரம் பக்தர்கள் சூழ சிறப்பாக நடைபெறுகிறது. இந்த வைபவத்தில் அகோர பீடம் என அழைக்கப்படும் இத்தல இறைவனும் இறைவியும் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருட்பாலிப்பது வழக்கமான நிகழ்வாகும். இந்த ஆலயம் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 5 1/2 மணி முதல் இரவு 7  மணி வரையிலும் திறந்திருக்கும். இத்தலம் நாகை மாவட்டம் கீழை திருக்காட்டுப்பள்ளியில் உள்ளது.

தொகுப்பு: ஜெயவண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்