SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எமபயம் நீக்கும் ஈஸ்வரன்

2020-02-20@ 16:04:22

திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருக்காளத்தி போன்ற மகாசிவராத்திரி தலங்களின் வரிசையில் முக்கியத்துவம் பெற்றது திருவைகாவூர். காலம் காலமாக வேடனொருவன் சிவராத்திரியன்று ஈசனை பூஜித்த சம்பவம் நிகழ்ந்த தலமே இதுதான். வேடன் ஒருவன் மானை பார்த்தான். வேடன் நோக்குவதை உணர்ந்த மான் துள்ளிக் குதித்து ஓடியது. அடர்ந்த பிரதேசமான வில்வாரண்யத்திற்குள், அங்கிருந்த முனிவரின் குடிலுக்குள் புகுந்தது. வேடன் விடாது துரத்தி, உள்ளே நுழைந்தான். தவநிதி என்ற அந்த முனிவர் ‘‘மானைக் கொல்லாதே. வேறெங்கேனும் சென்று விடு’’ என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், வேடனோ, ‘‘இதோ பாருங்கள். என் வேலை வேட்டையாடுவது. உங்கள் பேச்செல்லாம் பிறகு வைத்துக் கொள்ளுங்கள். ஒழுங்காக மானை விடுவியுங்கள்.

இல்லையெனில் உங்களைத் தாக்கிவிட்டு மானை பிடித்துச் செல்வேன்’’ என்றான். முனிவர் மெல்ல சிரித்தபடி, ‘‘உன்னைவிட பலமான விஷயத்தைக் கண்டால் நீ பயப்படுவாய் அல்லவா? நான் புலியாக மாறினால் நீ என்ன செய்வாய்? இதோ நானே புலி வடிவில் உன்னை கொல்கிறேன் பார்’’ என்று சொல்லி, புலியாக மாறினார். வேடனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பயந்துபோய் அந்தப் புலியிடமிருந்து தப்பிக்க, அருகேயிருந்த வில்வமரத்தின் மீது ஏறினான். கீழே, சிவமே புலியாக, இவன் எப்படியானாலும் வந்துதானே ஆகவேண்டும் எனக் காத்திருந்தது.

அன்று மகாசிவராத்திரி இரவு. உறங்காது உலகமே விழித்திருந்தது. பசியும், பயமும் வேடனை பதட்டமடைய வைத்தன. என்ன செய்வது என்று தெரியாமல், எதை பறிக்கிறோம் என்று கூடத் தெரியாமல் வில்வத் தளிர்களை உருவினான். புலியின் மீது போட்டான். புலிச் சிவம் பரவசமாக ஏற்றுக் கொண்டது. சிவராத்திரி இரவு முழுவதும் தூக்கம் வராதிருக்க மரத்தின் எல்லா இலைகளையும் பறித்துக் கீழே போட்டபடி இருந்தான். ஈசனுக்குள் கருணை பீறிட்டது. சட்டென்று மரத்தினடியில் லிங்க உருவில் தோன்றினார். வேடனை ஆட்கொண்டு மோட்சமளித்தார்.

பிரம்மனும், விஷ்ணுவும் அங்கே தோன்றினார்கள். அன்று அதிகாலையில் வேடனின் ஆயுள் முடிவதாக இருந்தது. எமதர்மராஜன் அவன் உயிரை வேட்டையாட அருகே வந்தான். சிவபெருமானோ தட்சிணாமூர்த்தியின் வடிவில் கையில் கோலேந்தி, எமனை விரட்டினார். சற்று தொலைவில் இருந்த நந்திதேவரை ஈசன் முறைக்க நந்திதேவர் மூச்சுக்காற்றாலேயே எமனைத் தள்ளி நிறுத்தினார். எமன் பயந்தான். அங்கேயே சிறிது காலமிருந்து, அருகேயே தீர்த்தம் உருவாக்கி நீராடி வேண்டினான். ஈசனும் எமனை விடுவித்தார்.

ஈசன் ஆட்கொள்ள வேண்டுமென்று நினைத்து விட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது. ஈசன் எமனைக் கட்டுப்படுத்தியதால், இத்தலத்தில் எமபயம் நீங்கும். மகாசிவராத்திரியின் முழு மகத்துவத்தையும் விளக்கும் தலமும் இதுதான். திருவைகாவூர், பச்சை வயல் பூசிய அழகிய கிராமம். கோயிலுக்கு எதிரேயே எம தீர்த்தம். ஈசனுக்கு முதுகு காட்டி, வாயிலை நோக்கும் நந்திதேவர். கோயிலுக்குள் ஆங்காங்கு வேடன் மோட்சம் பெற்ற கதையை சுதைச் சிற்பமாகவும் செய்து வைத்திருக்கிறார்கள். இங்கே வேதங்களே வில்வ விருட்சங்களாக நின்று தவம் புரிவதாக புராணம் கூறுகிறது.

மகாமண்டபத்தின் அருகேயே தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில். தன் கையில் கோலோடு, மான், மழுவோடு ஜடாதாரியாக அருள்வது இத்தலத்தில்தான். அருகில் துவாரபாலகர்களாக பிரம்மனும், விஷ்ணுவும் நிற்கிறார்கள். அடுத்து அர்த்த மண்டபத்திலுள்ள நந்திதேவரும் வாசலையே நோக்கியிருக்கிறார். எதிரே வில்வாரண்யேஸ்வரர் அற்புதக் காட்சி தருகிறார். கருவறை கோஷ்டத்தில் அகத்தியர், பிள்ளையார், அர்த்தநாரீஸ்வரர், வள்ளி - தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி அருட்பாலிக்கின்றனர். கோயிலை வலம் வரும்போதே துர்க்கையை வணங்கி அருகேயுள்ள அம்பாள் சந்நதியை அடையலாம். ஸ்ரீ சர்வ ஜன ரட்சகி எனும் திருநாமத்தோடு அம்பாள் அருட்பாலிக்கிறார். அழகிய தமிழில் வளைக்கை அம்மன் என்று பெயர். அழகும், அருளும் சேர்ந்து இலகும் திருமுகம்.

அபய வரத ஹஸ்தத்தோடு நாடி வருபவர்களின் குறைகளை தீர்க்கிறாள். கோயிலை வலமாக வரும்போது நடராஜர் சந்நதியை தரிசிக்கலாம். இக்கோயிலில் பஞ்ச பைரவர்கள் அபூர்வ கோலத்தில் காட்சியளிக்கிறார்கள். மாசி மாத மகாசிவராத்திரி விழா நான்கு கால பூஜையும், வேடனுக்கு மோட்சமளித்த நிகழ்வும், அமாவாசை அன்று பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும், தீர்த்தவாரியும் நடைபெறுகின்றன. மகாசிவராத்திரியின் மகிமை சொல்லும், திருஞான சம்பந்தரால் பாடல்பெற்றது இந்த ஆலயம்.

நோயின் கடுமை தாங்க முடியாதவர்கள், மரண பயம் கொண்டவர்கள் இத்தலத்திற்கு வந்தவுடன் குணமாகிறார்கள். இத்தலத்தின் எல்லையில் நின்று அவரை காப்பாற்றுங்கள் என்று யாரையேனும் குறிப்பிட்டுச் சொன்னாலே போதும், பாதிக்கப்பட்டவர் குணமாவார் என்கிறது தலபுராணம். ஸ்ரீவாஞ்சியத்திற்கு இணையான எமபயம் போக்கும் தலம் இது. பொதுவாகவே இது மோட்ச பூமியாதலால் பயம் குறைத்து அபயத்தை கூட்டும் தலமாகும். கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது திருவைகாவூர். பேருந்து வசதிகள் உள்ளன.

படங்கள்: சி.எஸ். ஆறுமுகம்

-கிருஷ்ணா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்