SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குருவுக்கு விளக்கேற்றினால் கல்வி தேர்ச்சி கிட்டும்!

2020-02-20@ 11:59:30

?எனது பேத்தியின் கல்விநிலை மிகவும்  பின்தங்கிய நிலையில் உள்ளது. +1 பயிலும்  அவள் பல பாடங்களில் தேர்ச்சி  பெறவில்லை. அவளது தாயார் கல்லூரி  விரிவுரையாளர், தந்தையும் நன்கு  படித்தவர்தான். அப்படியிருந்தும் இந்த நிலை  உண்டானதற்கு ஜாதகம் காரணமா?  உரிய பரிகாரம் கூறுங்கள்.

- திலகமணி, விருதுநகர் மாவட்டம்.

ரோகிணி   நட்சத்திரம், ரிஷப ராசி, சிம்ம லக்னத்தில் (கன்னி லக்னம் என்று தவறாக   கணிக்கப்பட்டுள்ளது) பிறந்திருக்கும் உங்கள் பேத்தியின் ஜாதகப்படி தற்போது   ராகு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் வித்யாகாரகன்   புதன் எட்டாம் வீட்டில் சூரியனுடன் இணைந்திருப்பதும், ஜென்ம லக்னத்தில்  குரு  வக்ர கதியில் அமர்ந்திருப்பதும் கல்வி நிலையில் முன்னேற்றத்தை தடை   செய்கிறது. என்றாலும் உரிய தனிப்பயிற்சியின் மூலம் பதினொன்றாம் வகுப்பில்   தேர்ச்சி பெற்றுவிடுவார். அவர் மிக உயர்ந்த கல்வி கற்கவேண்டும் என நீங்கள்   விரும்புவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் நினைக்கும்   அளவிற்கு மிக உயர்ந்த கல்வி என்பது அவருக்கு இல்லை என்றாலும்   உத்தியோகத்திற்குச் செல்லும் அளவிற்கு தன் தகுதியையும் திறமையையும் நிச்சயம்   வளர்த்துக் கொள்வார். சற்று பிடிவாத குணம் கொண்ட அவரை நீங்கள்   கட்டாயப்படுத்தி படிக்க வைக்க இயலாது.

மகளின் கல்வி நிலை குறித்து அவரது   தந்தையை கண்காணிக்கச் சொல்லுங்கள். தந்தையின் அரவணைப்பும், ஆதரவான பேச்சும்   உங்கள் பேத்தியை மனத் தெளிவுடன் செயல்பட வைக்கும். பேத்தியின் வயதினையும்   கருத்தில் கொண்டு அவரை கட்டாயப்படுத்தாமல் அன்போடு பேசி படிக்க  வையுங்கள்.  பிரதி வியாழன்தோறும் குரு பகவானுக்கு விளக்கேற்றி வழிபட்டு  வருவதால் அவரது  கல்விநிலையில் நல்ல முன்னேற்றம் காண முடியும். ஜீவன  ஸ்தானம் என்பது  வலிமையாக உள்ளதால் உங்கள் பேத்தி நிச்சயமாக உயர்ந்த  உத்தியோகத்தில் அமர்வார்  என்பதால் அவரது கல்விநிலையும் அதற்குத் தகுந்தவாறு  உயரும் என்பதில்  எந்தவிதமான ஐயமும் இல்லை.

?எனக்கு கடந்த 10 வருடங்களாக வரன் பார்த்து வருகிறார்கள். எதுவும் சரியாக அமையவில்லை. தங்கை, தம்பியும் திருமண வயதை கடந்துவிட்டார்கள். எல்லோரும் சொற்களால் என் மனதை நோகடிக்கிறார்கள். இந்த துன்பத்திலிருந்து விடுபட எனக்கு நல்வழியைக் கூறுங்கள்.

- சுலோச்சனா, ஈரோடு மாவட்டம்.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் திருமண அமைப்பைக் குறிக்கும் ஏழாம் வீடு சுத்தமாக இருப்பதாலும், ஏழாம் வீட்டின் அதிபதி சந்திரன் குடும்ப ஸ்தானம் ஆகிய இரண்டில் அமர்ந்திருப்பதாலும் எந்தவிதமான தோஷமும் அண்டவில்லை. நான்கில் செவ்வாய் இருந்தாலும் ஆட்சி பலம் பெற்றிருப்பதால் செவ்வாய் தோஷம் என்ற பேச்சிற்கே இடமில்லை. ஒரு பெண் பிறக்கும்போதே அவளுக்கு உரிய மணமகன் உலகில் ஏதோ ஒரு இடத்தில் பிறந்திருப்பார் என்று சிலர் கூறுவதாக கடிதத்தில் எழுதியுள்ளீர்கள். இந்த கருத்து முற்றிலும் உண்மையே. தற்போது நடந்து வரும் திருமணத்திற்கான வாய்ப்பினை உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது. இந்த நேரத்தினை தவறவிட்டால் பின் எப்போதும் திருமணம் நடக்காது.

35வது வயதில் இருக்கும் நீங்கள் இனியும் தாமதிக்கலாகாது. ஜாதகப் பொருத்தம், செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம் என்று எதை எதையோ சொல்லிக் கொண்டிருக்காமல் மனப்பொருத்தம் ஒன்றை மட்டும் பார்த்து திருமணத்தை நடத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஏற்கெனவே பார்த்த நபர் ஒருவரே உங்களுக்கு மணாளனாக அமைவார். பிரதி வெள்ளிக்கிழமை தோறும் அருகிலுள்ள அம்பிகையின் ஆலயத்திற்குச் சென்று இரண்டு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து கீழ்க்கண்ட அபிராமி அந்தாதி பாடலை ஆறு முறை சொல்லி வழிபட்டு வாருங்கள். 08.11.2020க்குள் உங்கள் திருமணம் நடந்துவிடும். அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம் துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதி பதிசயமானது அபசயமாக முன்பார்த்தவர்தம் மதிசயமாகவன்றோ வாமபாகத்தை வவ்வியதே.

?என் மகனுக்கு தலையில் அடிபட்டு மூன்று ஆண்டுகளாகி தற்போதுதான் குணமாகி வருகிறான். இந்நிலையில் திடீரென்று என் கணவருக்கு கிட்னி பிரச்னையாகி கடந்த வருடம் தெய்வமாகப் போய்விட்டார். நான், என் மகன், மகள் மூவரும் அநாதையாக இருக்கிறோம். என் பிள்ளைகளை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. எனக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்கள்.

- கரூர் வாசகி.
    
ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சூரிய தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. நன்கு வளர்ந்த பிள்ளைகளை வைத்துக்கொண்டு அஞ்சுவது எதற்கு? விசாக நட்சத்திரம், விருச்சிக ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மகன் தற்போது குணமாகி வருகிறார் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். சுவாதி நட்சத்திரம், துலாம் ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் எதிர்கால வாழ்வும் நன்றாகவே உள்ளது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் ஜாதகத்தில் வெற்றியைத் தரும் 11ம் இடத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், ராகு என ஐந்து கிரஹங்களின் இணைவு சிறப்பான வலிமையைத் தருகிறது. என்ன செய்வது என்று நடந்ததையே நினைத்து வருந்திக் கொண்டிருக்காமல் சுயமாகத் தொழில் தொடங்க முயற்சியுங்கள்.

தாய்-மகன்-மகள் என உங்கள் மூவரின் கூட்டு முயற்சி சிறப்பான வெற்றியைப் பெறும். உண்மையான உழைப்பின் மூலம் உச்சத்தைப் பெற இயலும் என்பதை உங்கள் மூவரின் ஜாதகங்களும் தெளிவாக உணர்த்துகிறது. சொந்தபந்தங்களுக்கு இடையில் அவமானத்துடன் வாழ்வதாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஏளனம் செய்வோர் மத்தியில் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும் என்ற உறுதியை மனதில் கொள்ளுங்கள். தெய்வமாகிவிட்ட உங்கள் கணவர் உங்கள் மூவரின் கூட்டு முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார். அமாவாசை தோறும் அந்தியூர் குருநாத ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்று தேங்காய் உடைத்து வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். வருகின்ற ஜூலை மாதம் ஆறாம் தேதி முதல் முன்னேற்றம் தருகின்ற திருப்புமுனையை வாழ்வினில் காண உள்ளீர்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்