SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எண்ணியதை ஈடேற்றுவார் ஏகாம்பரேஸ்வரர்

2020-02-17@ 09:58:46

ஒரு முறை கயிலாய மலையில் உமையாள், ஈசனுடன் அமர்ந்திருந்தாள். அந்நேரம், ஆதிசிவனை ஆரத்தழுவி அன்பொழுக பேசிக்கொண்டிருந்த ஆதிபராசக்தி, விளையாட்டாக தன்நிலை மறந்து தயாபரனை, தம்மோடு இணைத்து அவரது கண்கள் இரண்டையும், தமது இரு கரங்களால் மூடினாள். இதனால் ஈரேழுலோகத்திலும் இருள் சூழ்ந்தது. எல்லா உயிர்களும் இன்னலுக்கு ஆளாகின. உடனே திடுக்கிட்டு எழுந்த திரிபுர சுந்தரர். ‘‘என்ன காரியம் செய்து விட்டாய் எழிலரசி. சிறுபிள்ளைத்தனமாய் நடந்து கொண்டாயே சிவசங்கரி’’‘‘சுவாமி, அடியாள் அறியாது செய்து விட்டேன்.’’

‘‘உலகாளும் உமா மகேஸ்வரி செய்கிற செயலா? இது. இச்செயலுக்கு நீ வருந்தியே ஆக வேண்டும். பூலோகம் செல்ல வேண்டும், மானிடப்பிறவி எடுக்க வேண்டும்’’‘‘சிவனை சினம் கொள்ள வைத்ததற்கு இவ்வளவு பெரிய தண்டனையா! எப்படி இனி நான்,உங்களை சேர்வது?’’‘‘பாலர் பருவம் முடிந்து மங்கை பருவம் எய்யும் நீ, பாலாற்றின் கரையோரம் உள்ள வனத்தில் எம்மை நினைத்து பூஜித்தால். உரிய நேரம் வரும்போது உன்னை வந்து மணமுடித்து கயிலாயம் அழைத்து வருவேன்’’ என்றுரைத்தார் ஈஸ்வரன்.

கயிலை நாதனின் கட்டளைப்படி கல்யாண சுந்தரி, பத்ரிகாசிரமத்தில் கார்த்யாயன மகரிஷிக்கு புதல்வியாகப் பிறந்தாள். கார்த்யாயினி என்று பெயரிட்டு அந்தக் குழந்தையை, வளர்த்து வந்தார் மகரிஷி. கன்னிப் பருவம் அடைந்த கார்த்யாயினியிடம் மகரிஷி கார்த்யாயனர், ‘‘மகளே, நீ, சாதாரண மானிடப் பெண் அல்ல, அந்த மகேஸ்வரனின், இடப்பாகம் அமர்ந்திருப்பாளே மலைமகள், அவளின் வடிவம் நீ. நீலகண்டனை நீ அடைய நித்திரையை தொலைத்து நித்தமும் அவரை நினைத்து பூஜித்து வா’’ என்றார்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற வாக்கின்படி, கார்த்யாயினி, அந்த காமேஸ்வரனை நினைத்து பூஜிக்க புறப்பட்டாள். பாலாற்றின் கரையோரம் நடை பயின்றாள் பாலசுந்தரி. அந்நேரம் ஆற்றின் கரையோரம் இருந்த நந்தவனத்தில் ஒரு அபூர்வ ஒளி விழுந்தது. அவ்விடமே நமக்கு பூஜை செய்ய ஏற்ற இடம் எனக் கருதிய கார்த்யாயினி. அந்த இடத்திலே அமர்ந்தாள். பரவியிருந்த மணலை தனது இரு கரங்களால் ஒரு சேரக் குவித்தாள்லிங்கம் பிடித்தாள். எதிரே சிவனே அமர்ந்திருப்பது போல் சிந்தையில் எண்ணினாள். இரவு, பகல் பாராமல் இடப வாகனனை நினைத்து இடை விடாது பூஜித்தாள்.

பக்தர்களின் அன்பை சோதித்து பார்த்து திருவிளையாடல் புரிவது அந்த சோமசுந்தரனுக்கு கை வந்த கலை. அந்த அம்பலக் கூத்தனின் திருவிளையாடலுக்கு கார்த்யாயினியும் தப்பவில்லை. கார்த்யாயினி மணலால் லிங்கம் செய்து தவம் புரிந்த தலத்தின் அருகே இருந்த மாமரம் தானே பற்றி எரிந்தது. அதைக் கண்டு கலங்கிய கார்த்யாயினி, தன் அண்ணனான திருமாலை வேண்டினாள். உடனே காட்சி அளித்தார் திருமால். பிறைச்சந்திரனை எடுத்து குளிர்ச்சி பொருந்திய அதன் அமுத கிரணங்களை பட்ட மாமரத்தில் பாய்ச்ச, மரத்தில் பசுந்தளிர்கள் துளிர்த்துச் செழித்தன. அது மட்டுமல்லாமல், அங்கேயே ‘நிலாத்திங்கள் துண்டத்தான்’ எனும் பெயரில் பெருமாள் நிலையும் கொண்டார்.

இதுகண்டு மகிழ்ச்சி அடைந்த கார்த்யாயினி, மீண்டும் தன் தவத்தைத் தொடர்ந்தாள். சொக்கநாதனும், தேவியை விட்டாரில்லை, மீண்டும் அவளை சோதனைக்குள்ளாக்கினார். கங்காதேவியை கம்பாநதியாக உருமாறி வருமாறும் அம்பிகை பூஜை புரியும் மணல் லிங்கத்தை அடித்துச் செல்லுமாறும் கட்டளையிட்டார். அதன்படியே கங்காதேவியும் கம்பா நதியாக உருமாறி, கார்த்யாயினி தவமியற்றும் இடம் நோக்கி காட்டாறாக வந்தாள். நதியின் சீற்றம் கண்ட நங்கை அஞ்சி நடுங்கினாள். எங்கே, ஆற்று வெள்ளம் லிங்கத்தை, அடித்துக் கரைத்துச் சென்று விடுமோ என அஞ்சிய கார்த்யாயினி, லிங்கத்தை ஆரத் தழுவிக் கொண்டாள்.

கங்கையின் வெள்ளப் பெருக்கிலிருந்து லிங்கத்தைக் காத்து நின்றாள். உடனே சிவபெருமான், அந்த மாமரத்தில் காட்சி அளித்தார். இரண்டு படி நெல்லைக் கொடுத்தார். பின்னர் காமாட்சி என்ற பெயரில் காமக்கோட்டத்தில் 32 அறங்களை செய்யப் பணித்தார். உமையாள் கட்டித் தழுவிய லிங்கத்திருமேனி என்பதால் ஏகாம்பரேஸ்வரருக்கு தழுவக் குழை நாதர், தழுவக் குழைந்தார் என்ற பெயர்களும் உண்டு. கார்த்யாயினி உருவாக்கிய லிங்கம் அமையப்பெற்ற திருத்தலமே ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலாகும். மூலவர் ஏகாம்பரேஸ்வரர் எனும் திருப்பெயரோடு அருள்கிறார்.

ஏகம் எனில் ஒன்று எனப் பொருள்படும். ஆம்ரம் என்பது வடமொழியில் மாமரம் என்பதாகும். ஒற்றை மாமரம் என்பதையே ஏகம் - ஆம்ரம் என்றும், அதுவே ஏகாம்பரம் என்றும் ஆயிற்று. மாமரத்தினைத் தன் தலவிருட்சமாகக் கொண்டிருப்பதாலும் இத்தலத்து சிவபெருமான், அந்த ஒற்றை மாமரத்தடியில் எழுந்தருளியிருப்பதாலும் ஏகாம்பரர் எனும் பெயரைப் பெற்றார். சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை மணந்த போது “உன்னைப் பிரியேன்” என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறி, சங்கிலி நாச்சியாரை விட்டு, திருவாரூருக்குச் செல்லப் புறப்பட்டு–்த் திருவொற்றியூர் எல்லையைக் கடந்தார். அப்பொழுது அவர் கண்பார்வை இழந்தார்.

கண் பார்வை கிடைக்க, சிவனை வேண்டி, திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோலைப் பெற்றுத் திருவாலங்காடு திருவூறல்களைத் தொழுது காஞ்சிபுரத்தை அடைந்து, காமக்கோட்டத்தில் அறம்புரக்கும் அம்மையை வணங்கித் திருவேகம்பத்தை அடைந்து, “கச்சி ஏகம்பனே, கடையானேன் பிழை பொறுத்துக் கண்ணொளித் தருளாய்’ என்று வேண்டிப் பாடினார். அவ்வாறு பாடி, அவர் இடக்கண் பார்வையை பெற்றார். சுந்தரர் பாடும்போது கார்த்யாயினி அம்பாளை ‘‘ஏலவார் குழலுடைய நங்கை’’ என்று பாடினார். ஏல வார்குழ லாள்உமை நங்கை இதுவே இத்தலத்து அம்பிகையின் பெயரானது.

அரனார், தான் கொடுத்த வாக்கின்படி அம்பிகையை திருமணம் செய்து கயிலாயம் அழைத்துச் சென்றார். சிவனார், அம்பிகையை மணமுடித்தது பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம். அந்த திருநாளில் திருக்கல்யாண வைபவம் ஆண்டு தோறும் இத்தலத்தில் நிகழ்கிறது. அந்த வைபவம் 13 நாட்கள் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் மாவடி சேவை, நான்கு வெவ்வேறு சுவை கொண்ட மாம்பழம் தரும் மரத்தின் இலைகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏகாம்பரநாதர், ஏலவார் குழலியின் வரவேற்பு நிகழ்ச்சி. இதனைத் தொடர்ந்து பத்தாம் நாள் காலையில் திருக்கல்யாண பெருவிழா நடைபெறும்.

ஏகாம்பரநாதருடன் ஊடல் கொண்ட ஏலவார்குழலி அம்பாள் ஒக்கப்பிறந்தான் குளம் அருகில் உள்ள மண்டபத்திற்கு இரவு 10 மணிக்கு சென்று விடுவார். அவரை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக காமாட்சி அம்மன், ஆதிகாமாட்சி, கன்னியம்மன் ஆகிய 3 அம்பாள்களும் அந்த மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அவர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் ஏலவார்குழலியை 3 அம்பாள்களும் ஏகாம்பரநாதர் கோயில் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்திற்கு அழைத்து வருவார்கள். மனமகிழ்ந்த ஏலவார்குழலி, ஈசனை எண்ணி சிந்தை நிறைந்திருப்பாள். மணப்பெண் தயாராகி விட்டாள். நாணம் கொள்கிறாள் நங்கை. நாதன் வருகைக்கு காத்திருக்கிறாள். நடுவில் நாம் எதற்கு இடையூறாக என்று கருதிய மூன்று அம்பாள்களும் அங்கிருந்து அவரவர் சந்நதிக்கு சென்று விடுகின்றனர்.

ஏலவார்குழலி, நாதன் ஏகாம்பரேஸ்வரனை அடைய தவமிருந்ததை நினைத்துப் பார்க்கிறாள். அதை வைபவமாகவே நடத்துகின்றனர். முன்னதாக கம்பா நதிக்குச் சென்று ஏலவார்குழலி நீராடுகிறாள். (காட்டாற்றுபோல் பொங்கி வந்த கம்பா நதி, அம்பாளின் சக்திக்கு கட்டுப்பட்டு, குளமாக மாறி இவ்விடம் முடிவுற்று போனதாக கூறப்படுகிறது.) அந்த குளத்தில் நீராடும் ஏலவார்குழலி அம்பாள், நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 4 மணிவரை கம்பா நதியில் மணலால் லிங்கம் அமைத்து பூஜிக்கும் தலவரலாறு நிகழ்ச்சி வைபவமாக நடைபெறும். அதன் பின்னர் ஆயிரங்கால் மண்டபத்திற்குள் இருக்கும் திருமண மண்டபத்தில் ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலிக்கும் திருமணம் நடைபெறுகிறது. 3 முறை மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து திருக்கல்யாண கோலத்தில் ஏகாம்பரநாதர் - ஏலவார்குழலி பக்தர்களுக்கு அருட்பாலிப்பார்கள்.

‘‘தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி!
காவாய் கனக திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி!’’

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்