SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமண பாக்கியம் தரும் மருந்தீசர் திருக்கோயில்

2020-02-15@ 08:55:23

விழுப்புரம் அருகே டி.எடையாறில் உள்ளது மருந்தீசர் திருக்கோயில். சுந்தரரின் தேவாரப்பாடலில் இடம்பெற்ற நடுநாட்டுத்தலங்களில் இது 13வது தலமாகும். சில சிவால யங்களில் சிவனுக்கும், பார்வதிக்கும் சோமாஸ்கந்த அமைப்பில் முருகன்தான் அருள் பாலிப்பார். ஆனால், இத்தலத்தில் சிவ, பார்வதி சன்னதிக்கு நடுவே பாலகணபதி குழந்தை வடிவில் மேலிரு கரங்களில் லட்டு மற்றும் பலாச்சுளையுடனும், கீழிரு கரத்தில் அபய முத்திரையும், கரும்பும் வைத்து அருள்பாலிக்கிறார். சுந்தரர் இத்தலத்திற்கு வந்துபாடியுள் ளார். 39 தலங்களை வைப்புத்தலமாக வைத்து இத்தகைய தலங்களுக்கு இணையானது இடையாறு என்று பாடியுள்ளார்.

திருநாவுக்கரசரும், ராமலிங்க அடிகளாரும் இத்தலத்தை பாடியுள்ளனர். அகத்தியர் இத்தலத்தில் லிங்கம் அமைத்து, வழிபட்டார். இந்த லிங்கம் அகத்தீஸ்வரர் எனஅழைக்கப்படுகிறது. அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது. சந்தனாச்சாரியருள் மறைஞானசம்மந்தரின் ஆதாரத்தலமும் இதுவே. இடையாறில் பிறந்த இவர், பெண்ணாடத்தில் வாழ்ந்தவர். இவரை மருதமறை ஞானசம்மந்தர் என்றும், கடந்தை மறைஞான சம்மந்தர் என்றும் போற்றுவர். சுகம் என்ற சொல்லுக்கு கிளி என்று பெயர். சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்துகொண்டே இருக்கும்.

இங்குள்ள சுப்பிரமணியரின் பெயர் கலியராமப்பிள்ளையார் என்பதாகும். கயிலையில் சிவபெருமாள் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அவற்றை கிளிமுகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டுகேட்டார். இதையறிந்த சிவன் முனிவரை பூமியில் பிறக்கும்படி சபித்தார். தவறை உணர்ந்த முனிவர் ஈசனிடம் சாபவிமோசனம் கேட்டார். பூவலகில் வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணைநதியின் தென்பகுதியில் அமைந்துள்ள தலமான திருமருதந்துறை என்ற இடையாற்றில் எம்மை பூஜித்து, மருதமரத்தின் கீழ் தவமிருந்து பூலோக வாழ்வுநீங்கப் பெற அவர் வரமளித்தார். ஒட்டுகேட்ட முனிவருக்கே மானிடப்பிறவி என்றால், ஒட்டுகேட்கும் மானிடர்களுக்கு எத்தகைய பிறவி கிடைக்கும் என்றுச்சொல்லித்தெரியவேண்டியதில்லை.  

அம்மன்கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சிதருகிறார். இவர்களை சுகமுனிவர், பிரம்மன், அகத்தியர், சுந்தரர், மறைஞான சம்மந்தர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். இங்குள்ள மூலவர் மருந்தீசர் எனவும், மருதீஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறார். அம்பாளுக்கு ஞானாம்பாள் மற்றும் சிற்றிடைநாயகி என்ற பெயருண்டு. தல விருட்சம் மருதமரம். தீர்த்தம் சிற்றிடை தீர்த்தம், இது அம்மன்கோயிலில் கிணறாக உள்ளது. டி.எடையாறின் புராணப்பெயர் திருஇடையாறு மற்றும் திருவிடையாறு ஆகும். திருமணத்தடை நீங்கும் நெடுநாள் திருமணத்தடை உள்ளவர்கள் இத்தலத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து மாலைமாற்றி எடுத்துச்சென்றால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். தைமாதம் நடக்கும் ஆற்றுத்திருவிழா இத்தலத்தின் முக்கிய திருவிழாவாகும். இங்கு சிவன்மேற்கு நோக்கிய சுயம்புலிங்கமாக உள்ளார். மாசி 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரியபூஜை நடக்கிறது. 8ம் நூற்றாண்டு கோவிலானாலும் கி.பி 1471ல் ஒடிசா மன்னனால் அழிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்து சாளுவ நரசிம்ம அரசரால் மீண்டும் கட்டப்பட்டது என கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.

செல்வது எப்படி?

விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசூரில் இருந்து திருவெண்ணைநல்லூர் சென்றால் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் டி.எடையார் மருந்தீசர் கோயில் அமைந்துள்ளது. பேருந்து வசதி உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்