SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குரு பலன் ஏன் அவசியம்

2020-02-12@ 11:11:02

மனித சமூகத்தில் நிகழும் மகத்தான காரியங்களில் திருமணமும் ஒன்று. வாழ்வியலின் மறுமலர்ச்சி சின்னம் திருமணம் எனில் அது மிகையில்லை. ‘‘பொண்ணுக்கு வரன் தேடிக்கிட்டிருக்கேன். ஒன்னும் சரியா தகையல.’’  ‘‘குரு பலன் இன்னும் வரலையே. இப்போ ஏன் ஜாதகத்தை தூக்கிகிட்டு அலையறீங்க. அடுத்த வருஷம் வாங்க’’ என்று ஜோதிடர்கள் உங்களை விரட்டுகிறார்களா. அதென்ன குரு பலன். குருவின் பார்வை. அப்போது திருமணமே குருவின் பலத்தினால்தான் தீர்மானிக்கப்படுகிறதா. மற்ற எட்டு கிரகங்களும் என்ன ஒப்புக்கு சப்பாணியா என்கிற கேள்விகளும் உங்களுக்குள் எழலாம்.   

அப்படியெல்லாம் இல்லை. அந்தந்த கிரகத்திற்குரிய வேலையை அவை செய்கின்றன. ஒன்பது கிரகங்களில் முழுமையான சுப கிரகம் வியாழன் என்றழைக்கப்படும் குரு. மெத்தப் படித்த மேதாவிகளை உருவாக்குபவர் இவர்தான். கற்றல், கற்றுக் கொடுத்தல் இவை இரண்டையும் சரிவர செய்பவரும் இவர்தான். எங்கெல்லாம் அட்சதை போட்டு ஆசிர்வாதம் செய்கிறார்களோ அங்கெல்லாம் இவர் இருப்பார். அவர்களை ஆசிர்வதிக்கச் செய்பவரும் இவர்தான். ஆசி வார்த்தைகள் கூறுபவரின் நாவில் அமர்பவரும் இவர்தான். அப்பேற்பட்ட மகோன்னதமான குருவின் ஆசிர்வாதத்தைத்தான் குரு பலன் என்கிறோம். ஒரு ராசியில் நின்று பார்ப்பதை குரு பார்வை என்றும் வியாழ நோக்கம் என்று அழைக்கிறோம்.
குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். விதைக்கு வீர்யத்தை அளிப்பவராக இருக்கிறார்.

பட்டுப்போனதை பட்டாக துளிர்க்க செய்வதில் கருணைமுனி. மொட்டுக்களை மலர வைப்பதும் இவரே. தொன்னூறு என்றால் அதை நூறாக்கி முழுத் திருப்தியை தருவார். காயை கனிய வைப்பார். கண்ணுக்குள் பார்வையாக இருக்கிறார். சொல்லுக்குள் பொருளாய் பொதிந்தவர். உடம்புக்குள் உயிராக உறைபவர். சுக்கிலத்தையும் சுரோணிதத்தையும் கருவாக்குபவர் என்று எல்லாமே குருவின் அருளாலும், திருப்பார்வை யாலும்தான் நிகழ்கின்றன.  
‘‘முப்பத்திரெண்டு மார்க் எடுத்தான். நான்தான் முப்பத்தஞ்சு போட்டு பாஸ் பண்ணிவிட்டேன்’’ என்று சொல்லும் ஆசிரியருக்கு பின்னால் இருப்பவரே குரு. பெண்ணின் திருமண வயது இன்னது என்று ஆட்டோவில் எழுதியிருக்கலாம். எத்தனை பேருக்கு அந்த வயதில் திருமணமாகிறது.

‘‘இருவத்தேழு வயசாகியும் இன்னும் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்றாங்க’’ என்று சொல்கிறார் எனில் குருவின் பார்வையும், குருவின் பலனும் வலுவடையவில்லை என்று அர்த்தம். எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்ல இடத்தில் திருமணம் முடியவேண்டுமெனில் இவருடைய அனுமதியும், ஆசியும் தேவை. குரு பார்க்க கோடி நன்மை என்பது மகாவாக்கியம். உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் நீச்சமாகவும், வக்கிரமாக இருந்தாலும், எவ்வளவு பலவீனமானாலும் சரி குரு பார்த்துவிட்டால் போதும். தானாக பலம் கிடைத்து விடும். பதப்படுத்துதல், பக்குவமாக்குதல், பலப்படுத்துதல் என்று மூன்று விஷயங்களைத்தான் குருவின் பார்வை செய்கிறது.

குழந்தைக்கு முதல் முடி எடுத்து மொட்டை போடுவதற்கு குல தெய்வத்துக்கு செல்கிறோம். இன்னொரு கோணத்தில் பார்த்தால் குல தெய்வம்தான் உங்களுக்கு குருவும் கூட. குல தெய்வத்திற்கு செய் என்று உணர்த்துபவர்தான் குரு. குல தெய்வமே தெரியவில்லை என்கிறீர்களா. குருவின் முழு அம்சமான திருச்செந்தூர் முருகனையே குல தெய்வமாகக் கொள்ளுங்கள். குரு பகவான்தான் முறையற்ற உறவுகளை தடுக்கக் கூடியவர். சம்பிரதாயப்படி திருமணத்தையும் நடத்தி வைப்பவர். இவ்வளவு விஷயங்களும் குருவருளால் நடப்பதால்தான் குரு பலன் வேண்டுமென்று ஜோதிடர் சொல்கிறார். அப்போது எல்லா ராசிகளுக்குமே குரு பலன் தேவையா? குரு எல்லா ராசிகளுக்குமே சாதகமானவரா? என்று கேள்வி எழும்.

 
எல்லா ராசிக்காரர்களுக்குமே குரு பலன் வேண்டும். ஆனால், எல்லா ராசிக்காரர்களுக்கும் குரு நன்மையையே செய்து கொண்டிருக்க மாட்டார் என்று சொல்ல முடியாது. சில ராசிகளுக்கு தன் எதிர்மறை கதிர்வீச்சை தந்து கொண்டிருப்பார். நீங்கள் ரிஷப ராசிக்காரர் எனில் குரு எட்டாமிடம் எனும் அஷ்டமாதிபதி ஆகிறார். எட்டாமிடத்திற்குரியவரான குரு அலைச்சலைத்தான் தருவார் என்பது ஜோதிட சட்டம். அதேபோல மிதுனம், கன்னி ராசிக்காரர்களுக்கு பாதகாதிபதி என்கிற கெடுபலன்களை கொடுப்பவர் ஆகிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு கடன், எதிரிகளை உருவாக்கக் கூடியவராக குரு இருக்கிறார். இப்படி அல்லல் தரக்கூடிய ராசிகளுக்கு அதிபதியாக இருக்கும் குரு எப்படி திருமணத்திற்கு உதவுவார் என்கிற சந்தேகம் வரும். ஆனால், அந்த சட்டம் திருமணம் என்று வரும்போது செல்லுபடியாகாது. உங்களின் தற்போதைய நிலையின்படி உங்களின் ராசிக்கு 2, 5, 7, 9, 11ம் வீடுகளில் குரு அமரும்போது நல்லதுதான் செய்வார். குரு பலனை அளித்து கெட்டி மேளத்தை கொட்டச் செய்வார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்