SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சூரியன் பூஜித்த தலங்கள்

2020-02-11@ 11:59:10

சிலப்பதிகாரத்தில் பூம்புகாரில் உச்சிக்கிழான் கோட்டம் எனும் பெயரில் சூரியனுக்கு கோயில் இருந்தது. காவிரிப் பூம்பட்டிணம் என்கிற அந்த நகரம் மாபெரும் கடல் கோளுக்குப் பிறகு கோயிலும் அழிந்து விட்டது. கள்ளக்குறிச்சி அருகேயுள்ள வீரசோழபுரத்தில் சூரியநாராயண மூர்த்தி. தஞ்சாவூர், ஒரத்தநாடுக்கு அருகே பரிதியப்பர் கோயில் என்றே சூரியனின் பெயரோடேயே தலமும் அமைந்துள்ளது. இத்தல ஈசனுக்கு பாஸ்கரேஸ்வரர் என்று பெயர்.

சென்னையிலிருந்து விழுப்புரம் செல்லும் பாதையில் விக்கிரவாண்டிக்கு அருகே பனையபுரம் எனும் தலம் உள்ளது. இங்கு நேத்ரோத்தாரகேஸ்வரர் என்கிற திருப்பெயரில் ஈசன் அருள்கிறார். மயிலாடுதுறை, திருவாடுதுறைக்கு அருகேயுள்ள பேராவூர் தலத்தில் ஆதித்தேஸ்வரர் என்று காட்சி தருகிறார். ஆடுதுறைக்கு அருகேயுள்ள திருமங்கலக்குடியில் நவகிரகங்களுக்குமே சக்தியைக் கொடுத்தவராக பிராணநாதேஸ்வரரை தரிசிக்கலாம்.

இதே சூரியனார்கோவிலை அடுத்துள்ள திருக்கோடிக்காவல் ஊருக்கு அருகேயுள்ள பாஸ்கரராயபுரத்தில் பாஸ்கரேஸ்வரரும், அருகேயே கீழசூரியமூலை எனும் தலத்தில் சூரிய கோடீஸ்வரராகவும் கருணையோடு அருட்பாலிக்கிறார். சென்னை, பொன்னேரிக்கு அருகேயுள்ள ஞாயிறு என்றே ஒரு தலம் உள்ளது. இங்கு புஷ்பரதேஸ்வரர் எனும் திருப்பெயரில் அருளை அள்ளித் தருகிறார். சென்னை - வியாசர்பாடியில் ரவீஸ்வரராக கம்பீரமாக வீற்றிருக்கிறார். கும்பகோணம், அரித்துவாரமங்கலத்திற்கு அருகே பயரி தலத்தில் கோடி சூரியப் பிரகாசராகத் திருநாமம் பூண்டு அருட்பாலிக்கிறார். திருச்சி, முசிறிக்கு அருகேயுள்ள ஆமூர் தலத்தில் ரவி ஈஸ்வரராக ஈடிணையற்று விளங்குகிறார்.  

இன்றும் பல்வேறு சிவாலயங்களில் சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் சூரியன் தமது கிரணங்களால் ஈசனை வழிபடுகிறார். சரியாக அந்த நேரங்களில் சூரியக் கிரணங்கள் லிங்க மூர்த்தியின்மீது படருவதை பல தலங்களில் தரிசிக்கலாம். இவை தவிரவும் சூரியனுடைய திருப்பெயரில் தீர்த்தங்களும் அமைந்துள்ளன. இந்த தீர்த்தத்தில் நீராடி ஈசனை தரிசிக்க தீராத நோயெல்லாம் தீருகிறது. மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள திருமீயச்சூர். மேல்மருத்துவத்தூருக்கு அருகேயுள்ள அச்சிறுப்பாக்கம், திருவெண்காடு புதன் ஸ்தலம், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், சங்கரன்கோயில், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, திருவாடானை என்று பல தலங்களில் சூரிய தீர்த்தம் அமைந்துள்ளது.

சூரியன் வழிபட்டுப் பேறு பெற்ற ஏழு திருமுறைத் தலங்களை திருவேதிக்குடி தலபுராணப் பாடலொன்று  சுட்டிக் காண்பிக்கிறது.

கண்டியூர் வேதிகுடி நற்குடந்தைக்
கீழ்க்கோட்டம் பண்பரிதி நன்றியமம்
பாங்கார் தெளிச்சேரி பொற்புற வார்பனங்
காட்டூர் நெல்லிக் காவேழும்  பொற்பரிதி
பூசனை செய்யூர்

திருவையாறைச் சுற்றியுள்ள திருக்கண்டியூர், திருவேதிக்குடி, கும்பகோணம் கீழ்க்கோட்டம் என்கிற நாகேஸ்வரர் கோயில், ஒரத்த நாட்டிற்கு அருகேயுள்ள பரிதியப்பர் கோயில், காரைக்கால் அருகேயுள்ள தெளிச்சேரி என்கிற கோயில்பத்து, விக்கிரவாண்டிக்கு அருகேயுள்ள பனங்காட்டூர், திருவாரூருக்கு அருகேயுள்ள திருநெல்லிக்கா போன்ற தலங்கள் சூரியன் ஈசனை பூஜித்த முக்கியத் தலங்களாகும்.

- ஆ.அன்னவயல்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 28-02-2020

  28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • kalavaram2020

  டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

 • flight2020

  கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

 • keeladi20

  தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

 • raajeshaathan20

  ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்