SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனந்தனுக்கு 1000 நாமங்கள்

2020-02-06@ 12:15:11

227. விச்வாத்மநே நமஹ  (Vishwaathmane namaha)

அசுர அரசனாகிய இரணியன், தனது குருவான சுக்கிராச்சாரியாரின் மகன்களான சண்டன், அமர்க்கன் ஆகிய இருவரும் நடத்தும் குருகுலத்துக்குத் தன்  மகன் பிரகலாதனை அனுப்பி வைத்தான். தனது மகனுக்கு அசுரர்களின் ராஜ நீதியைப் பயிற்றுவிக்கும் படி அந்தக் குருமார்களுக்குக் கட்டளை  இட்டான் இரணியன்.அவர்களும் பிரகலாதனுக்கு அசுரர்களின் ராஜநீதியைப் பயிற்றுவித்தார்கள். ஆனால் அந்தப் பாடத்தில் பிரகலாதன் ஆர்வம்  காட்டவில்லை. நாராயண நாமத்தையேஎப்போதும் ஜபித்து வந்தான். “ஹிரண்யாய நமஹ ” என்று சொல்லி இரணியனை வணங்குமாறு குருமார்கள்  வற்புறுத்திய போதும், “நாராயணாய நமஹ” என்று இறைவனின் திருப்பெயரையே சொல்லி வந்தான். இறைவனின் நாமத்தைத் தான் ஓதுவதோடு  மட்டுமின்றி, தனது சக மாணாக்கர்களுக்கும் இறைவனின் மேன்மையை எடுத்துச் சொல்லி அவர்களையும் நாம சங்கீர்த்தனம் செய்ய வைத்தான்  பிரகலாதன்.இந்நிலையில், தன் மகன் எவ்வளவு தூரம் ராஜ நீதிகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறான் என அறிய விரும்பினான் இரணியன். தனது மகனை  அழைத்து வருமாறு சண்டன், அமர்க்கனுக்குக் கட்டளையிட்டான். பிரகலாதனும் அழைத்து வரப்பட்டான்.

தனது மகனை ஆசையோடு மடியில் அமர்த்திய இரணியன், “மகனே! குருகுலத்தில் உனக்கு ராஜநீதிகளைப் பற்றி நிறைய கூறி இருப்பார்கள் என  நம்புகிறேன். இப்போது அதிலிருந்து ஒரு கேள்வி கேட்கிறேன். நம் நண்பர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? நமது எதிரிகளிடம் எப்படி நடந்து  கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.“தந்தையே! உங்கள் கேள்வியே தவறு. நண்பர்கள், எதிரிகள் என்று பேதம் பார்ப்பதே தவறு. நமக்குள் இருக்கும்  திருமால் தானே எல்லோருக்குள்ளும் இருக்கிறார்? எனவே எல்லோரும் நமக்கு நண்பர்களே! எல்லோரிடமும் அன்புடன் தான் நடந்துகொள்ள  வேண்டும்!” என்று விடையளித்தான் பிரகலாதன்.தன் மகன் கூறிய பதிலைக் கேட்டு வெகுண்டெழுந்தான் இரணியன். “ஏ சண்டாமர்க்கர்களே! இதைத்  தான் நீங்கள் இவனுக்குச் சொல்லித் தந்தீர்களா?” என்று குருமார்களைப் பார்த்துக் கேட்டான். “அரசே! நாங்கள் இதைச் சொல்லித் தரவில்லை!  இளவரசர் வேறு எங்கோ கற்று இவ்வாறு பேசுகிறார் போலும்!” என்றார்கள் குருமார்கள்.“சரி, போகட்டும்! பிரகலாதா! நீ இதுவரை கற்ற விஷயங்களுள்  மிகச்சிறந்த விஷயம் யாது?” என்று கேட்டான் இரணியன்.

“ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோஸ்ஸ்மரணம் பாதஸேவநம் |
அர்ச்சநம் வந்தநம் தாஸ்யம் ஸக்க்யம் ஆத்மநிவேதநம் ||

1.இறைவனின் மேன்மைகளைக் கேட்டல்,
2.இறைவனின் நாமங்களைப் பாடுதல்,
3.இறைவனின் திருவுருவத்தைத்தியானித்தல்,
4.அவன் அடியார்களுக்குத் தொண்டு செய்தல்,
5.இறைவனுக்கு அர்ச்சனை செய்தல்,
6.இறைவனுக்கு நமஸ்காரம் செய்தல்,
7.இறைத்தொண்டு செய்தல்,
8.இறைவனுடன் நட்போடு பழகுதல்,
9.இறைவனின் திருவடிகளில் சரணாகதி செய்தல் ஆகிய ஒன்பது விதமான பக்திகளே நான் படித்ததில் பிடித்த விஷயம்!” என்றான் பிரகலாதன்.

“ஏ மூடனே! உனக்குள் ஏதோ ஒரு பூதம் இருந்து கொண்டு உன்னை இப்படி எல்லாம் உளற வைக்கிறது என்று நினைக்கிறேன். யார் அந்த பூதம்?”  என்று கேட்டான் இரணியன். “ஆம் தந்தையே! எல்லோருக்குள்ளும், எல்லாப் பொருட்களுக்குள்ளும் எந்தத் திருமால் உறைகின்றாரோ, அதே திருமால்  தான் என் இதயத்தினுள்ளும் புகுந்திருக்கிறார். உள்ளிருந்து அவர் தருகின்ற ஞானத்தைக் கொண்டு தான் நான் இத்தனையும் பேசுகிறேன்!” என்று  விடையளித்தான் பிரகலாதன்.தனது பரம எதிரியான திருமாலைப் போற்றித் துதிக்கும் பிரகலாதனைக் கொல்ல எண்ணிய இரணியன், அவனைப்  பலவிதமான இன்னல்களுக்கு ஆட்படுத்தினான். ஆனால் அனைத்து இன்னல்களிலிருந்தும் பிரகலாதனைத் திருமால் காத்தார்.

முடிவில், தன் அரண்மனையிலிருந்த ஒரு தூணைப் பிரகலாதனிடம் சுட்டிக் காட்டிய இரணியன், “எல்லாவற்றுக்குள்ளும் திருமால் இருப்பதாக நீ  சொல்கிறாயே! இதோ இந்தத் தூணில் அவர் உள்ளாரா?” எனக் கேட்டான். “நம் ஒவ்வொருவருக்குள்ளும், அதுபோலவே உலகில் உள்ள ஒவ்வொரு  பொருளுக்குள்ளும் திருமால் உறைந்திருக்கிறார்! அவர் தூணிலும் உள்ளார், துரும்பிலும் உள்ளார்!” என்று சொன்னான் பிரகலாதன். அவனது  வார்த்தையை மெய்ப்பிக்கும் வகையில், தூணைப் பிளந்து கொண்டு நரசிம்மராகத் தோன்றி, இரணியனை வதைத்தார் திருமால்.இவ்வாறு உலகிலுள்ள  அனைத்துப் பொருள்களுக்குள்ளும் தனது ஞானத்தாலும் சக்தியாலும் வியாபித்திருப்பதால் திருமால் ‘விச்வாத்மா’ என்றழைக்கப்படுகிறார். ‘விச்வம்’  என்றால் உலகம். உலகிலுள்ள பொருட்கள் அனைத்திலும் வியாபித்தவர் (நிறைந்திருப்பவர்) ‘விச்வாத்மா’. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 227-வது  திருநாமம்.“விச்வாத்மனே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களுக்கு ஞானமும் சக்தியும் மேன்மேலும் பெருகும்படித்திருமால்  அருள்புரிவார்.


228. ஸஹஸ்ராக்ஷாய நமஹ (Sahasraakshaaya namaha)

கண்ணனின் நண்பரான உத்தவர், ஒருமுறை கண்ணனிடம், “கண்ணா! உண்மையான நண்பன் யார்?” என்று கேட்டார். “ஆபத்தில் உதவி செய்பவனே  உண்மையான நண்பன்!” என்றான் கண்ணன்.“அவ்வாறாயின், துரியோதனனின் சபையில் சூதாடிப் பாண்டவர்கள் தோற்றார்களே! அப்போது நீ ஏன்  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாய்? தர்மபுத்திரர் சூதாடச் செல்வதற்கு முன்னமேயே நீ அவரைத் தடுத்திருக்கலாம்! அல்லது, நாட்டை  இழந்தபோதாவது தடுத்திருக்கலாம்! அவர் ராஜ்ஜியத்தையும் செல்வங்களையும் சூதாட்டத்தில் இழந்ததோடு மட்டுமின்றி, தன் தம்பிகளையும் இழந்து,  தன்னையும் இழந்து, திரௌபதியையும் இழக்கும் வரை நீ ஏன் அவர்களைக் காக்கவில்லை? ஆபத்து வரும் நேரத்தில் நீ அவர்களுக்கு அருகில்  இல்லாமல் போய்விட்டாயே! நீ  ஓர் உண்மையான நண்பனா?” என்று கேட்டார் உத்தவர்.“திரௌபதி என்னை அழைத்தவுடன் நான் புடவை கொடுத்து  அவளைக் காத்தேனே!” என்றான் கண்ணன்.

“இல்லை கண்ணா! நீ நினைத்திருந்தால் இந்தச் சூழ்நிலையே வராதபடி காப்பாற்றியிருக்க முடியும். திரௌபதியைப் பணயமாக வைத்துச் சூதாடும்படி  தர்மபுத்திரரிடம் துரியோதனன் சொன்னபோதே நீ தடுத்திருக்க வேண்டும். திரௌபதி தன் மானத்தையே இழக்கும் நிலை நேரிட்ட போது தானே நீ  உதவினாய்? எனவே நீ செய்த உதவி தாமதமான உதவியே ஆகும்! மேலும், அவர்களுக்குத் துன்பம் நேரிட்ட போது, நீ அருகில் இருந்திருக்க  வேண்டும்!” என்றார் உத்தவர். (உத்தவர் மட்டுமல்ல, மகாபாரதம் படிக்கும் ஒவ்வொருவர் மனத்திலும் இந்தக் கேள்விகள் எழும்.)புன்னகைத்தபடியே  கண்ணன், “உத்தவா! துரியோதனனுக்குச் சூதாடத் தெரியாது. எனவே தான் சூதாடாமல், தன் சார்பில் மாமன் சகுனியைச் சூதாடச் சென்னான் அவன்.  அந்த விவேகம் தர்மபுத்திரனிடம் இல்லை.

தர்மபுத்திரன் தன் சார்பில் சூதாட என்னை அழைத்திருக்கலாமே! நானும் சகுனியும் சூதாடி இருந்தால், நான் எளிதில் அவனை வென்றிருப்பேனே!  தர்மபுத்திரன் அதைச் செய்யவில்லை. பக்தன் ஆபத்தில் பிரார்த்தனை செய்தால் தானே நான் போய் உதவ முடியும்?” என்று விடையளித்தான்.“தர்மபுத்திரர் உன்னை அழைக்காவிட்டாலும், நீ அருகில் இருந்திருக்கலாமே கண்ணா!” என்றார் உத்தவர்.கண்ணன் சிரித்துக் கொண்டே,“உத்தவா! தான்  சூதாடுவது எனக்குத் தெரியக்கூடாது என்பதற்காக, துரியோதனின் அரண்மனைப் பக்கம் நான் வரவே கூடாது என்று எனக்கு அன்புக் கட்டளை இட்டு  விட்டுச் சென்றார் தர்மபுத்திரன்!” என்றான்.மேலும், “அரண்மனைக்குள் நான் வரக்கூடாது என்று தர்மபுத்திரன் சொன்னபடியால், நான் உள்ளே வராமல்  வெளியே காத்திருந்தேன். உள்ளே நடப்பவற்றை என் ஞானக் கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தேன். திரௌபதியை துச்சாசனன் துகிலுரிய  முற்பட்டபோது, அவள் வாய் திறந்து,

“சங்கசக்ரகதாபாணே த்வாரகாநிலயாச்யுத |
கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷ மாம் சரணாகதாம் ||”

என்று அழைத்தாள். அவள் அழைத்தவுடன் நான் புடவையைச் சுரந்து அவளைக் காப்பாற்றினேன். மற்ற பாண்டவர்கள் துரியோதனனுக்கு அடிமையான  போது கூட, துரியோதனன் மீது அவர்கள் கோபம் கொண்டார்களே ஒழிய, என்னை அழைக்கவேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றவில்லை.  திரௌபதி தான் சரியான நேரத்தில் என்னை அழைத்தாள். நானும் உதவினேன்! இதில் என் தவறு என்னஉள்ளது?” என்று கேட்டான்  கண்ணன்.கண்ணனின் பதிலைக் கேட்டுப் பரவசமடைந்த உத்தவர், “கண்ணா! நீ எப்போதும் உன் அடியோர்கள் கூடவே இருந்து, அனைத்து  நிகழ்வுகளையும் கவனித்து வருகிறாய். ஆபத்து ஏற்படும் போது அவர்கள் உன்னை அழைத்தால், நீ வந்து காப்பதற்கும் தயாராகத் தான் உள்ளாய்.  யாரேனும் துன்பப்படுகிறார்கள் என்றால், அவர்கள் உன் உதவியை நாடவில்லை என்று தான் பொருள்!” என்று கூறினார்.

எப்போதும் நம்முடன் இருந்துகொண்டு, அனைத்து நிகழ்வுகளையும் கவனித்துக் கொண்டிருக்கும் திருமால், நாம் அழைத்தவுடன் நம்மைக் காக்க  வருவதற்குத் தயார் நிலையில் உள்ளார் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறதல்லவா?அனைத்து நிகழ்வுகளையும் திருமால் கவனித்து வருகிறார்  என்பதையே அடையாளப் பூர்வமாக (figurative-ஆக) ஆயிரக்கணக்கான கண்களோடு கூடியவர் - ‘ஸஹஸ்ராக்ஷ:’ என்று ஸஹஸ்ரநாமத்தின்  228-வது திருநாமம் குறிப்பிடுகிறது. ‘ஸஹஸ்ரம்’ என்றால் ஆயிரக்கணக்கான என்று பொருள். ‘அக்ஷி:’ என்றால் கண் என்று பொருள். நம் கண்களால்  காண இயலாத அனைத்தையும் கண்காணிக்க வல்லவர் என்ற அளவில் இதன் பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும்.“ஸஹஸ்ராக்ஷாய நமஹ”  என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் திருமாலின் திருக்கண் நோக்குக்கு இலக்காவார்கள்.


229. ஸஹஸ்ரபதே நமஹ (Sahasrapadhe namaha)

திருமலையில் ஸ்ரீநிவாசனாக அவதாரம் செய்த திருமால், அருகிலுள்ள நாராயணபுரத்தை ஆண்டு வந்த ஆகாசராஜனின் மகனான பத்மாவதி மீது  காதல் கொண்டார். அவளை விரைவில் மணந்து கொள்ளத் துடித்தார். அந்நிலையில் ஸ்ரீநிவாசனுக்கு உதவியாளராக இருந்த வகுளமாலிகை என்னும்  பெண், ஸ்ரீநிவாசனின் மனக்கருத்தை அறிந்து கொண்டாள். “ஸ்ரீநிவாசா! நீ வருந்த வேண்டாம். உனக்காக நான் ஆகாசராஜனின் அரண்மனைக்குச்  சென்று, பத்மாவதியின் பெற்றோர்களைச் சந்தித்துப் பேசி நல்ல செய்தியோடு வருகிறேன்!” என்று சொல்லி விட்டு நாராயணபுரத்தை நோக்கிச் சென்றாள்.இந்நிலையில், பத்மாவதியும் ஸ்ரீநிவாசன்மேல் காதல் கொண்டிருந்தாள். காதல் நோய்க்குரிய அறிகுறிகள் அவளிடம் தென்படத்  தொடங்கின. தன் மகளுக்கு ஏதோ புதுவிதமான நோய் ஏற்பட்டதாகக் கருதிய அவளது தாய் தரணிதேவி, அரண்மனைப் பணிப்பெண்களைத் திருமலை  அடிவாரத்தில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலுக்கு அனுப்பிப் பத்மாவதிக்காக அர்ச்சனை செய்து வரும்படி கூறினாள்.

கபிலேஸ்வரர் கோயிலில் அர்ச்சனை செய்து விட்டு வெளியே வந்த அப்பெண்களை, அரண்மனையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வகுளமாலிகை  தற்செயலாகச் சந்தித்தாள். தான் அரசியைச் சந்திக்க விழைவதாக அப்பெண்களிடம் கூறினாள். அவர்களும் வகுளமாலிகையைத் தரணிதேவியிடம் அழைத்துச் சென்றார்கள்.“உங்கள் மகள் பத்மாவதியைத் திருமலையில் வசிக்கும் ஸ்ரீநிவாசனுக்குப் பெண் கேட்பதற்காக வந்துள்ளேன்!”  என்று தரணிதேவியிடம் சொன்னாள் வகுளமாலிகை. “அதற்காகத் தான் காத்திருக்கிறேன்!” என்று சொன்ன தரணிதேவி, “திருமணத்துக்கான  ஏற்பாடுகளை விரைந்து செய்திடுவோம்!” என்றும் கூறினாள். வகுளமாலிகைக்கோ இன்ப அதிர்ச்சி! திருமலையில் வெறும் 100 சதுர அடி நிலத்தில்  வாடகைக்குக் குடி இருக்கும் ஸ்ரீநிவாசனுக்குப் பெண் தர, அரசி சற்றும் தயக்கம் காட்டாமல் சம்மதித்து விட்டாளே என்று மிகவும் மகிழ்ந்தவளாய்,  ஸ்ரீநிவாசனிடம் திரும்பி வந்தாள் வகுளமாலிகை. நற்செய்தியையும் தெரிவித்தாள்.

இந்நிலையில், திருமலைக்கு வந்த நாரதர், ஸ்ரீநிவாசனிடம், “ஊர் பெயர் தெரியாத பெண்ணான வகுளமாலிகை வந்து பெண் கேட்டவுடன், அரசியான  தரணிதேவிஎப்படித் தயக்கமில்லாமல் திருமணத்துக்குச் சம்மதித்தாள்? ஒன்றுமே புரியவில்லையே!” என்று கேட்டார்.அதற்கு ஸ்ரீநிவாசன்,  “வகுளமாலிகை அரண்மனையை நோக்கி இங்கிருந்து புறப்பட்டாள் அல்லவா? அவள் அரண்மனையைச் சென்றடைவதற்கு முன்னதாக, நான் ஒரு  குறத்தி வேடமிட்டுக் கொண்டு அரண்மனைக்குச் சென்றேன். அங்கே தரணிதேவி என்னை அழைத்துக் குறி சொல்லச் சொன்னாள். அவளிடம், “உங்கள்  மகள் பத்மாவதி காதல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். திருமலையில் வாழும் ஸ்ரீநிவாசனுக்கு இவளை மணம் முடித்து வைப்பதே இதற்கு  மருந்தாகும். ஸ்ரீநிவாசனின் சார்பில் வகுளமாலிகை என்னும் பெண் உங்களைத் தேடி வந்துகொண்டிருக்கிறாள். அவளிடம் உங்கள் பரிபூரணமான  சம்மதத்தைத் தெரிவித்து விடுங்கள்! தாமதப்படுத்தினால் உங்கள் மகளின் உயிருக்கே ஆபத்து!” என்று குறிசொல்லிவிட்டு வந்தேன். அதனால் தான்  வகுளமாலிகை அங்கே சென்றவுடனேயே, தரணிதேவி சம்மதம் தெரிவித்தாள்!” என்றார்.

“ஆனாலும், வகுளமாலிகை அரண்மனையை நோக்கிப் புறப்பட்ட பின்னர் தானே நீ புறப்பட்டாய்? அப்படியிருக்க, அவளுக்கு முன் நீ எப்படி குறத்தி  வேடமிட்டு அரண்மனைக்குச் சென்றாய்?” என்று ஸ்ரீநிவாசனிடம் கேட்டார் நாரதர்.அப்போது குறுக்கிட்ட வியாசர், “நாரதா! ஸ்ரீநிவாசன் திருமலையில்  மட்டும் தானா இருக்கிறான்? அவன் எங்கும் நிறைந்திருப்பவன் ஆயிற்றே! நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்குச் செல்வான், நினைத்த இடத்தில்  தோன்றுவான். அத்தகைய சக்தி படைத்தவனாகத் திகழ்வதால்தான் வகுளமாலிகைக்குப் பின்னால் ஸ்ரீநிவாசன் புறப்பட்டாலும், அவள் அரண்மனையை  அடைவதற்கு முன்பே ஸ்ரீநிவாசனால் அரண்மனையை அடைய முடிந்தது! வகுளமாலிகை இத்திருமணத்தைத் தானே பேசி ஏற்பாடு செய்ததாக  எண்ணியிருந்தாலும், உண்மையில் அனைத்தையும் நடத்தியவன் ஸ்ரீநிவாசனே!” என்றார்.

அனைத்து இடங்களிலும் பரவி இருக்கும் திருமால், நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தை அடைந்து விடுகிறார் என்பதையும், ஒரு மனிதன் ஓர்  இலக்கை அடைய எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு விரைவாக அந்த இலக்கை அடைய வல்லவர் என்பதையும் இந்த  சம்பவத்திலிருந்து அறிய முடிகிறது. திருமாலிடம் இருக்கும் இத்தகைய பயணிக்கும் ஆற்றலையே அடையாளப்பூர்வமாக (illustrative-ஆக) ஆயிரம்  பாதங்களைக் கொண்டவர் - ‘ஸஹஸ்ரபாத்’ என்று சொல்கிறார்கள். ‘ஸஹஸ்ரம்’ என்றால் ஆயிரம். ‘ஸஹஸ்ரபாத்’ என்றால் ஆயிரக்கணக்கான  பாதங்களை உடையவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 229-வது திருநாமம். “ஸஹஸ்ரபதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு  ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகளில் வெற்றி ஏற்படவும், கால் சம்பந்தப்பட்ட நோய்கள் விரைவில் குணமடையவும் திருமால் அருள்புரிவார்.

குறிப்பு: ஸஹஸ்ரமூர்த்தா (226), ஸஹஸ்ராக்ஷ: (228), ஸஹஸ்ரபாத் (229) ஆகிய திருநாமங்களுக்கு முறையே ஆயிரம் தலைகளைக் கொண்டவர்,  ஆயிரம் கண்களைக் கொண்டவர், ஆயிரம் பாதங்களைக் கொண்டவர் என்று பெரியோர்கள் பொருள் உரைக்கவில்லை. ‘ஸஹஸ்ரமூர்த்தா’ என்றால்  எல்லையில்லாத ஞானத்தைக் கொண்டவர், ‘ஸஹஸ்ராக்ஷ:’ என்றால் அனைத்தையும் கவனிப்பவர், ‘ஸஹஸ்ரபாத்’ என்றால் நினைத்த இடத்துக்கு  விரைவாகப் பயணிக்க வல்லவர்  என்றே பொருள் உரைத்திருக்கிறார்கள்.

230. ஆவர்த்தனாய நமஹ  (Aavarthanaaya namaha)

திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில், ஆதிநாதப் பெருமாள் சந்நதிக்கு அருகிலுள்ள புளியமரப் பொந்தில், யோகத்தில் அமர்ந்திருந்த  நம்மாழ்வாருக்குத் திருமால் உயர்ந்த ஞானத்தையும் பக்தியையும் அருளி, தன் வடிவழகையும், குணங்களையும், மேன்மையையும் காட்டினார்.  அவற்றை எல்லாம் அநுபவித்து மகிழ்ந்த நம்மாழ்வார், தமது அநுபவங்களை எல்லாம் திருவாய்மொழி என்னும் பிரபந்தமாகப் பாடினார்.திருமாலின் திருமேனி அழகில் மிகவும் ஈடுபட்ட நம்மாழ்வார், தன்நிலை மறந்து பெண் நிலைக்கு மாறினார். அவ்வாறு பெண் பாவம் ஏறிட்டுக்  கொண்ட நம்மாழ்வாரைப் ‘பராங்குச நாயகி’ என்று சொல்வார்கள். அந்தப் பராங்குச நாயகி நிலையில் நம்மாழ்வார் பாடிய பாலனாய் எனத் தொடங்கும்  பதிகத்தை, பராசர பட்டர் என்னும் ஆச்சாரியர், தமது சீடரான நஞ்ஜீயருக்கு நாடக வடிவில் விளக்கி வந்தார்:

தலைவனான திருமாலைப் பிரிந்து பிரிவாற்றாமையால் தவித்து வருகிறாள் பராங்குச நாயகி. அப்போது அவளுடைய தாய், தனது மகள் வாடி  இருப்பதைக் கண்டு மகளிடம் வருகிறாள். தாய்: பெண்ணே நீ ஏன் வாடி இருகிறாய் பராங்குச நாயகி: ஒன்றுமில்லைதாய்: பொய் சொல்லாதே! நீ  எதையோ நினைத்து ஏங்குகிறாய்! அது என்ன? பராங்குச நாயகி: உன்னிடம் சொன்னால் மட்டும் என் வருத்தம் தீர்ந்துவிடுமா?தாய்: உன்  வருத்தத்தைத் தீர்ப்பதற்கு என்னால் இயன்றதைச் செய்கிறேன்! சொல்! பராங்குச நாயகி: எனக்குத் துளசிவேண்டும்!தாய்: இவ்வளவு தானே! நம்  இல்லத்துக்கு அருகில் பெரிய துளசி வனமே இருக்கிறதே! உனக்குத் துளசி கிடைக்க நான் ஏற்பாடு செய்கிறேன்!

பராங்குச நாயகி: எனக்கு இந்த துளசி வேண்டாம்! அன்று ஊழிக் காலத்தில், ஆலிலைக் கண்ணனாகத் திருமால் தோன்றி, ஏழு கடல்களையும், ஏழு  மலைகளையும், ஏழு தீவுகளையும், அனைத்து உயிர்களையும் உண்டு தன் வயிற்றுக்குள் வைத்துக்காத்தாரல்லவா? அப்போது அந்த ஆலிலைக்  கண்ணன் தனது திருவடிகளிலே துளசி மாலை ஒன்றை அணிந்திருந்தார். அந்த துளசி மாலை தான் எனக்கு வேண்டும்!தாய் (திகைப்புடன்): ஊழிக்  காலம் முடிந்து பற்பல யுகங்கள் ஆகிவிட்டனவே! அந்நாளில் திருமால் அணிந்த துளசியை எங்கு போய் தேடுவேன்? அது இந்நேரம் வாடியும்  போயிருக்குமே!பராங்குச நாயகி: திருமாலைப் பிரிந்து தவிக்கும் எனது வாட்டத்தைப் போக்கவேண்டும் என்றால், ஊழிக் காலத்தில் அவன் அணிந்த  துளசி மாலையைத் தவிர வேறு மருந்தில்லை!

இந்தக் காட்சியை விளக்கும் நம்மாழ்வாரின் பாசுரம்

“பாலனாய் ஏழுலகுண்டு பரிவின்றி
ஆலிலை அன்ன வசம் செய்யும் அண்ணலார்
தாளிணை மேலணி தண்ணந் துழாய் என்றே
மாலுமால் வல்வினையேன் மடவல்லியே”

இதன் பொருளைப் பராசர பட்டர் வருணிக்கையில், குறுக்கிட்ட நஞ்ஜீயர், “சுவாமி! பராங்குச நாயகிக்கு அவள் சொல்லும் மருந்து கிடைக்க  வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லையே! அவளது நோய் எப்படித்தான் தீரும்?” என்று கேட்டார்.பராசர பட்டர் சிரித்தபடி, “திருமால் தனது கையில்  சுதர்சனச் சக்கரத்தை ஏந்தியிருக்கிறார் அல்லவா? அது தான் காலச்சக்கரம். முன்பு ஊழிக் காலத்தில் தான் அணிந்த துளசி மாலையைப் பராங்குச  நாயகி பெற விரும்புவதை அறிந்த திருமால், தன் கையிலுள்ள காலச் சக்கரத்தை மாற்றுத் திசையில் சுற்றினார். சக்கரம் நேராகச் சுற்றினால்,  காலமும் முன்நோக்கிச் செல்லும். சக்கரத்தை மாற்றுத் திசையில் திருமால் சுற்றியதால், காலம் பின்நோக்கிச் செல்லத் தொடங்கியது. ஊழிக்  காலத்தை அடைந்தாள் பராங்குச நாயகி. ஆலிலைக் கண்ணனைத் தரிசித்தாள். அவன் பாதங்களில் இருந்த துளசி மாலையைப் பெற்று வாட்டம்  தீர்ந்தாள்!” என்று விளக்கம் அளித்தார்.‘ஆவர்த்தன:’ என்றால் சுழற்றுபவர் என்று பொருள். இடைவிடாது சுழலும் காலச்சக்கரத்தைத் தன் கட்டுப்பாட்டில்  வைத்துச் சுழற்றி வருவதால் திருமால் ‘ஆவர்த்தன:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 230-வது திருநாமம்.“ஆவர்த்தனாய நமஹ”  என்று தினமும் சொல்லி வருபவர்களின் வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்படித் திருமால்அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்