SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வல்வினைகள் போக்கும் வயலூர் முருகன்

2020-02-03@ 15:45:52

சோழமன்னன் ஒருவன் வயலூர் பகுதியில் வேட்டையாடி விட்டுத் திரும்பினான். வழியில் கரும்பு ஒன்று மூன்று கிளைகளுடன் வளர்ந்திருப்பதை அதிசயமாகப் பார்த்தான். ஒரு ஆர்வத்துடன் மன்னன் அதை ஒடித்தபோது அதிலிருந்து உதிரம் கசிந்தது. உடனே, அந்தக் கரும்பை வேரோடு பறித்தான். அப்போது அங்கே, ஒரு சிவலிங்கம் இருந்தது! மன்னன் அங்கேயே ஈசனுக்கு கோயில் அமைத்தான். இவரே ஆதிநாதர் என்ற அக்னீஸ்வரர். மறப்பிலி நாதர் என்றும் வணங்கப்படுகிறார். இறைவி ஆதிநாயகி, முன்னிலை நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். தல விருட்சம் வன்னிமரம். தீர்த்தம். வன்னி மற்றும் சக்தி தீர்த்தங்கள். ஆதிநாயகி அம்மன் சந்நதி தெற்கு பார்த்து அமைந்துள்ளது அபூர்வமானது.

ஆதிநாதர் சந்நதியில் சுந்தர தாண்டவமூர்த்தியின் விக்ரகம் உள்ளது. இந்த நடராசர் திருஉருவத்தில் திருவாசி இல்லை. காலடியில் முயலகனும் இல்லை. சிரத்தில் சடாமுடி இல்லை. கிரீடம் மட்டும் உள்ளது. இவர் இப்படி கால் தூக்காமல் நடன நளினத்தில் தோன்றுவதை சுந்தர தாண்டவம் என்கிறார்கள்.  முதலில் ஆதிநாதரையும், ஆதிநாயகியையும் வழிபட்ட பின்னரே முருகப் பெருமான் சந்நதிக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம். தன் வேலால் சக்தி தீர்த்தம் உருவாக்கி அதில்  நீராடியபின் தாய் தந்தையரை, தேவர்கள் காண பூஜை செய்யும் புதல்வனாக விளங்குகிறார் இந்த முருகன். வயலூர், பெயருக்கேற்ப காவிரிக் கரையில் வயல்கள் சூழ்ந்த பசுமையுடன் விளங்குகிறது.

கருவறையில் சுப்ரமணிய சுவாமி வள்ளி - தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனமளிக்கிறார்.  இந்த முருகனை சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்று சுடர்களும் வழிபட்டு பேறு பெற்றதால் இது ஜோதிதலமாகத் திகழ்கிறது. முருகன் வேல் கொண்டு உருவாக்கிய சக்தி தீர்த்தத்தை குமார தீர்த்தம் என்றும் அழைக்கிறார்கள். அருணகிரிநாதர் விராலி மலையில் தங்கி இருந்தபோது வயலூர் வர, அவரிடம், ‘திருப்புகழ் பாடு,’ என முருகன் கூறியதாக தலபுராணம் கூறுகிறது. இங்கு வந்த அருணகிரியார் கணபதியை துதித்து ‘கைத்தல நிறை கனி’ என்று துவங்கும் பாடலைப் பாடியிருக்கிறார்.

இவர் இந்த வயலூர் தலத்தில் பாடிய 18 திருப்புகழ் பாடல்கள், பொய்யா கணபதியின் அருளால் உருவானது என்பது இத்தலத்தின் இன்னொரு சிறப்பு.  இந்த பொய்யா கணபதியின் கையில் உள்ளது விளாங்கனி. இவர் சந்நதி அருகே அருணகிரிக்கு பீடம் உள்ளது. தட்சிணாமூர்த்தி, பொய்யா கணபதி, அருணகிரி மூவரையும் ஒருங்கே தரிசிப்பது இத்தலத்தில்  மட்டுமே முடியும். பொய்யா கணபதி சந்நதியை அடுத்து முத்து குமாரசுவாமி சந்நதி உள்ளது. மயில்மேல் அமர்ந்து காட்சி தருகிறார் அவர். சூரியன் சாயாதேவியுடன் நவகிரக மண்டலத்தில் அமர்ந்த தலம் என வயலூரின் பெருமைகள் ஏராளம்.  திருச்சியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் வயலூர் ஆலயம் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்