SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவிலில் ஜடாரியை தலையில் வைத்து எடுப்பதன் அர்த்தம் தெரியுமா?

2020-01-30@ 10:12:48

பெருமாள் கோவில்களில் கட்டாயம் இந்த ஜடாரி எனப்படும் சடகோபத்தை பக்தர்கள் தலையில் வைத்து பின்பு எடுப்பார்கள். நம்மில் இக்கட்சியை காணாதவர்கள் இல்லை. ஆனால் இந்த சடகோபத்தை ஏன் தலையில் சாத்துகிறார்கள்? இதற்கு எப்படி ஜடாரி என்ற பெயர் வந்தது? அதன் வரலாறு என்ன? யாரால் இந்த பழக்கம் நடைமுறையில் உள்ளது? போன்ற கேள்விகளுக்கு இப்பதிவில் பதில் காண்போம் வாருங்கள்.

பன்னிரு ஆழ்வார்களில் முதன்மையானவர் நம்மாழ்வார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் வைணவத்தில் நாட்டம் கொண்டவர். பெருமாள் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தார். பக்தியில் சிறந்து விளங்கினார். இவரது இயற்பெயர் மாறன் என்பதாகும். வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். மாறன் என்று பெயர் சூட்டியதன் காரணம் ஒவ்வொரு ஜனனத்தின் போதும் முற்பிறவி நினைவுகள் அழிந்து புதிய ஆத்மாவாக பிறப்பெடுப்பது தான் உலக நியதி. அப்படி பழைய நினைவுகள் அழியும் போது ஒருவித ஜட வாயுவானது சிசு பிண்டத்தில் புகும். அந்த ஜட வாயுவை அழித்து முற்பிறவி நினைவுகளுடன் அப்படியே உலக நியதிக்கு மாறாக பிறந்ததால் மாறன் என்று போற்றப்பட்டார். பிறந்ததும் அழவும் இல்லையாம். இதன் காரணமாக தான் ஜடாரி என்ற பெயரும், சடகோபன் என்ற பெயரும் இவருக்கு வந்தது.

ரிக் யஜுர், சாம, அதர்வண என்கிற நான்கு வேதங்களையும் நம் இனிய தமிழ் மொழியில் பாசுரங்களாக வடிவமைத்தவர் நம்மாழ்வார். இதனால் இவருக்கு ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ என்ற சிறப்பு பெயரும் உண்டு. திருக்குருகூர் என்ற இடத்தில் கோவிலில் உள்ள ஒரு புளிய மரத்தடியில் ஏறத்தாழ பதினாறு வருடங்கள் அசைவின்றி தவக்கோலம் பூண்டார். இவரின் பக்திக்கு இணங்கி திருமாளே தம் திருவடியில் சரணாகதி கொடுத்தார் என்பது வரலாறு.

இந்த ஜடாரியானது எப்படி இருக்கிறது என்று பாருங்கள். அழகிய மன்னனின் தலையில் இருக்கும் கிரீடம் போல் உள்ளது. அதன் மேல் பகுதியில் உச்சியில் தான் பெருமாளின் மலர் பாதங்கள் பொரிக்கபட்டுள்ளது. நாம் தேடி செல்லாவிட்டாலும் நம்மை தேடி அந்த பாதங்கள் வந்து ஆசீர்வதித்து செல்லும். நம்மாழ்வாரே இதை செய்விப்பதாக ஒரு கூற்று உள்ளது. நம்மாழ்வாரின் கோவிலில் வைக்கும் இதே போன்ற கிரீடத்திற்கு ராமானுஜம் என்று பெயர். இதில் நம்மாழ்வாரின் உருவம் பொரிக்கபட்டிருக்கும். இந்த கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார் திருநகரி என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது. நம்மாழ்வார் தவமிருந்த புளிய மரம் இன்றளவும் அங்கே காணப்படுகிறது.

“அவரவர் தமதமதறி வறிவகை வகை அவரவ ரிறையவ ரெனவடி அடைவார்கள் அவரவர் ரிறையவர் குறைவில் ரிறையவர் அவரவர் விதிவழி யடைய நின்றனரே”

நம்மாழ்வாரின் கூற்றுபடி ஒவ்வொருவரின் புரிந்து கொள்ளும் ஆற்றல் மாறுபட்டவை. அவரவர்களின் புரிதலுக்கு ஏற்ப விரும்பிய இறைவனை தொழுகிறார்கள். இதில் எந்த தவறுமில்லை. அனைவரின் குறிக்கோளும் இறைவனை அடைவது ஒன்று தானே? அதை எந்த வழியில் நிறைவேற்றினால் என்ன? இறுதியில் கொண்ட கொள்கை வெற்றி பெற்றால் போதுமானது. தத்தம் திறனுக்கேற்ப இறைவனை அடைவது தான் ஞானம் என்று உரைக்கிறார்.

இன்றைய கலியுகத்திலும் நமக்கு பெருமாளின் ஆசீர்வாதம் கிட்டுவதற்கு ஜடாரி என்னும் திருமாலின் பாதம் பொறித்த அழகிய கிரீடம் நம் தலையில் வைத்து எடுக்கிறார்கள். நம்மாழ்வாரே இறைவனின் திருவடிகளை நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பதாக ஐதீகம். இதனால் ஆணவம் அழிந்து பக்தி மேம்படும். இறையருள் முழுமையாக நமக்கு கிட்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்