SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருத்தளியான் காண் அவன் என் சிந்தையானே!

2020-01-29@ 10:04:31

அருணகிரி உலா 91

காரைக்குடியிலிருந்து 20.கி.மீ தொலைவிலுள்ள திருத்தலம் திருப்பத்தூர். இறைவன் பெயர் திருத்தளி நாதர். இறைவி சிவகாமி. கோயில் ‘திருத்தளி’ என்றே அழைக்கப்படுகிறது. அயலார் படையெடுப்பினால் அழிந்து போய், பல நூற்றாண்டுகளாக எழுப்பப் பெறாமல் இருந்த ராஜகோபுரம் 1992 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.

ராஜகோபுரத்து நம்பியாண்டார் நம்பி வாயில் வழியாகக் கோயிலுள் நுழைகிறோம். இரண்டாம் பிராகாரத்தில் கொடி மரம், நந்தி தரிசிக்கையில் தென் கிழக்கில் அருணகிரியாரால் பாடப்பெற்ற சுப்பிரமணியர் காட்சி அளிக்கிறார். இச்சந்நதி தனி ஆலயமாக சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு திருப்புகழை சமர்ப்பிக்கிறோம்.
 
‘‘ இருட்டுப் பாரில் மறலி தனதுடல்
பதைக்கக் கால் கொடுதை செய்தவன் வீழ
எயிற்றுப் போவி அமரருடலவர் தலைமாலை
எலுப்புக் கோவை யணியு மவர் மிக
அதிரித்துக் காளி வெருவ நொடியினில்
 எதிர்த்திட் டாடும் வயிர பயிரவர் நவநீத
திருட்டுப் பாணி யிடப முதுகிடை
  சமுக்கிட்டேறி யதிர வருபவர்
செலுத்துப் பூதமலகை யிலகிய படையாளி
செடைக்குட் பூளை மதிய மிதழிவெ
ளெருக்குச் சூடி குமர வயலியல்
 திருப்பத்தூரில் மருவி உறைதரு பெருமாளே ’’
[ எயிற்றுப் போவி = எயில் துப்பு ஓவி = திரிபுரங்களின் வலிமையை அழித்து]

அஞ்ஞானம் மிகுந்த இந்த உலகில் எமனின் உடல் பதறும்படி தனது காலால் உதைத்து அவனை விழச் செய்தவன், முப்புரங்களின் வலிமையை ஒழித்தவர், தேவர்களின் உடல், அவர்களின் சிரங்களால் ஆன மாலை ஆகிய எலும்பு வடத்தை மாலையாக அணிந்தவர், அதிக முழக்கம் செய்து காளி அஞ்சும்படி நொடிப்பளவில் எதிர்த்து பைரவ மூர்த்தி, வெண்ணெய் திருடிய கரங்களை உடைய திருமால் ஆகிய காளையின் முதுகில் சேணமிட்டு ஏறி உலகதிர பவனி வருபவர், ஏவப்படும் பூதம், பேய் இவைகளை விளங்கும் படையாகக் கொண்டவர், ஜடையில் பூளை, சந்திரன், கொன்றை, வெள்ளெருக்கு இவற்றைச் சூடியுள்ளவர் ஆகிய சிவபிரானின் குமரனே ! வயல்கள் மிகுந்த திருப்பத்தூர் எனும் தலத்தில் பொருந்தி உறையும் பெருமாளே!
 
[திரிபுர சம்ஹாரத்திற்கு சிவபிரான்  எழுந்தருளிய போது தேவர்களனைவரும் சேர்ந்து ஒரு தேர் சமைத்தார்கள். இறைவன் வெற்றியடையப் போவது நம்மால்தான் என்று தேவர்கள் இறுமாந்த போது இறைவன் தேரைச் சற்று அழுத்தினார். தேர் நிலை தடுமாறவே, திருமால் ரிஷபமாகி இறைவனைத் தாங்கினார். ‘‘தடமதில்கள் அவை மூன்று தழலெரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால் காண் சாழலோ’’- திருவாசகம்].
 
 ‘‘ஆல கோட்டு மிடற்றுச் சோதி கபாலி,
பார்ப்பதி பக்ஷத்தால் நட
மாடி தாத்திரி  பட்சித் தாவென உமிழ்வாளி
 ஆடல் கோத்த சிலைக்கைச் சேவக
னோடை பூத்த தளக்கட் சானவி
யாறு தேக்கிய கற்றைச் சேகர சடதாரி
சீல மாப்பதி மத்தப் பாரிட
சேனை போற்றிடும் அப்பர்க் கோதிய
சேத னைர்த்த ப்ரசித்திக்கே வரு முருகோனே
சேலறாக்கயல் தத்தச் சூழ்வய
லூர வேற்கர விப்ரர்க்காதர
 தீர தீர்த்த திருப்புத்தூருறை பெருமாளே ’’
 
 விஷத்தின் அறிகுறியைக் கழுத்தில் தரிக்கும். பேரொளி வடிவினன், [ ‘‘கொடு விட மதுதனை வாங்கியே திருமிடறினில்
இருவென ஏத்தும் ஈசுரர்’’ கூந்தலூர் திருப்புகழ்] பிரம்ம கபாலத்தை ஏந்தியவன், பார்வதியை அருகில் கொண்டு நடமாடுபவன்,பூமியை உண்டு வாயைத் திறந்து உலகேழையும் காண்பித்தவன் ஆகிய திருமாலை அம்பாகத் திரிபுர சம்ஹாரப் போரில் அமைத்துக் கொண்ட வில் வீரன், கால்வாய்களில் பூத்த பூவிதழ்களின் தேன் கலந்த நதியைத் திரண்ட முடியுள்ள ஜடையில் வைத்திருப்பவர், தூய பெருந்தெய்வம், உற்சாகம் நிறைந்த பூதப் படைகள் போற்றி நிற்கும் உலகத் தந்தை சிவபிரானுக்கு ஞானப் பொருளை உபதேசித்த புகழைத் தனக்கே உரியதாக்கிக் கொண்ட முருகோனே !
 
சேல் மீன்களும் நீங்காத கயல் மீன்களும் குதித்து வரும் வயல்கள் சூழ்ந்த ஊரில் உறைபவனே ! திருக்கையில் வேலை உடையவனே ! அந்தணர்க்குப் பற்றுக் கோடாய் இருப்பவனே! தீரனே! தூய மூர்த்தியே! (அ) சிவகங்கை,  ஸ்ரீதளி எனும் விசேஷ தீர்த்தங்களை உடைய திருப்புத்தூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே!
 
[வாளி = அம்பு. திரிபுர சம்ஹாரத்தின் போது திருமால் சிவபிரான் கையில் அம்பாக அமைந்திருந்தார்.
 
 சானவியாறு = கங்கை நதி, பகீரதச் சக்ரவர்த்தி தன் முன்னோர்களின் சாபம் நீங்கத் தவம் புரிந்து கங்கையை வரவழைத்தான். கங்கை தமது ஆசிரமத்தின் வழியே வருவது அறிந்த ஐந்து முநிவர் அதை ஆசமனஞ் செய்தார். பகீரதன் அவரை வேண்ட அவர் அதைத் தமது காதின் வழியாக வெளியே விட்டார். அவர் காதின் வழியே வெளிவந்ததால் கங்கை ஜாநவி என்று பெயர் பெற்றாள்.

 சடாதாரி என்பது குறுகி சடாரி என ஆயிற்று].
அப்பர் பெருமான் பின்வருமாறு பாடுகிறார்.
‘‘பொன் காட்டக் கடிக் கொன்றை மருங்கே நின்ற
புனக் காந்தள் கை காட்டக் கண்டு வண்டு
தென் காட்டுஞ் செழும் புறவின் திருப்புத்தூரில்
திருத்தளியான் காண் அவன் என் சிந்தையானே ’’.
 
முருகப் பெருமான் அமர்ந்துள்ள இரண்டாம்  பிராகாரத்திலேயே யோக பைரவ மூர்த்தி தனி ஆலயத்தில் அமைந்துள்ளார். இவருக்கு அர்த்த சாமத்தில் புனுகு சாத்தப்பட்டு வடைமாலை, சம்பாசாதம் படைக்கப்படுகிறது. பைரவர் சந்நதிக்குப் பின்புறத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் நாகேஸ்வரர். அம்பிகை திருப்புத்தூர் திருத்தளிக்கு வருகை தந்த போது வாசுகியும் கார்க்கோடகனும் உடன் வந்ததாகவும், அவர்கள் வணங்குவதற்காக உருவாக்கப்பட்ட மூர்த்தியே நாகேஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகப் புராணங்கள் கூறுகின்றன.
 
திரிபுரசம்ஹாரத்திற்குப் பிறகு ஈசன் ஆடிய கூத்தினை மறுமுறைக்கான விருப்பம் கொண்ட கௌரிக்குத் திருத்தளியில் இறைவன் ஆடிக்காட்டியதால் அது கௌரி தாண்டவம் என்று பெயர் பெற்றது. இது குறித்துத் திருமால் கூறக் கேட்ட லட்சுமி தானும் அதைக் காண விரும்பி திருத்தளி இறைவனைக் குறித்துத் தவமிருந்தாள். லட்சுமிக்காகவும் இறைவன் ஒருமுறை இத்தலத்தில் நடனமாடிக் காட்டினாராம். இரண்டாம் பிராகாரத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள அழகிய மண்டபத்தில் கௌரி தாண்டவக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். தேவி தாண்டவத்தைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறார். நந்தி தேவர் மத்தளம் வாசிக்கிறார்.
 
மூலவர் சந்நதியை நோக்கிச் செல்கிறோம். சதுர பீடமான ஆவுடையார் மேல் பாணம் அமைந்துள்ளது. முகப்பில் நால்வர், பொல்லாப் பிள்ளையார், நர்த்தன விநாயகர், வள்ளி தெய்வ யானையுடன் கூடிய முருகப் பெருமான்  ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். அமர்ந்த நிலையில் காணப்படும் நவகிரகங்களையும், சௌமிய நாராயணரையும் தரிசிக்கிறோம்.
 
சிவகாமி அம்மை தனிக் கோயிலில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருட்பாலிக்கிறார். கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இக்கோயில், பல திருப்பணிகளுக்குப் பின்பு இருபதாம் நூற்றாண்டில் புதுக் கோலம் பெற்றது.
 
நமது அடுத்த இலக்கு திருப்புனவாயில் எனப்படும் திருத்தலம் ஆகும். பேச்சு வழக்கில் இன்று திருப்புனவாசல் எனப்படுகிறது, ஆவுடையார் கோயிலிலிருந்து 25 கி.மீ தொலைவிலுள்ளது இத்தலம். ஆவுடையார் கோயிலிலிருந்து மீமிசல் வழியாக வந்து இத்தலத்தை அடையலாம். இறைவர் விருத்தபுரீஸ்வரர், பழம்பதிநாதர். இறைவி பிருஹந்நாயகி, பெரிய நாயகி. ஊரருகில் சர்ப்ப நதி எனும் பாம்பாறு உள்ளது . நாங்கள் சென்ற போது தூத்துக்குடி திருமந்திர நகர் உழவாரப்பணி மன்றத்தினர் கோயிலைச் சுத்தப்படுத்துவதில் முனைந்திருந்தது கண்டு மனம் மிக நெகிழ்ந்தது.
 
கோயிலுக்கு வெளியிலுள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் எனப்படுகிறது. ஐந்து நிலைகளை உடைய கோபுர வாயிலில் இடப்புறம் வல்லபை கணேசரும் வலப்புறம் தண்டாயுதபாணியும் குடிகொண்டுள்ளனர். உள்ளே கொடி மரம், நந்தி, பலிபீடம் உள்ளன. இடப்புறம் சந்திரனும் வலப்புறம் சூரியன், பைரவர், மற்றும் நவகிரகங்களும் உள்ளனர். இடப்புறத்தில் சற்று தொலைவில் ஐந்து விநாயகர்கள், சதுர்முக லிங்கம், கபில புத்திரர்கள் ஒன்பது பேர், ஆதி சைவ சிவனடியார்கள் இருவர் ஆகியோரைக் காணலாம்.
 
வெளிப்பிராகாரத்தைச் சுற்றி வருகையில் ‘ஆகண்டல விநாயகர்’ எனும் பெயருடைய விநாயகரைக் காண்கிறோம். [ ஆகண்டலன் = இந்திரன்] கௌதமரின் சாபம், நீங்கப் பெற இந்திரன் பூசித்த விநாயகர் இவர், ஆனைக்கா திருப்புகழில்
 
   ‘‘கமலனும் ஆகண்டலாதி அண்டரும் எமது பிரான் என்று தாள் வணங்கிய கரிவனம் வாழ் ஜம்பு நாதர்’’
எனும் வரிகளில் ஆகண்டலன் என்ற பெயரில் இந்திரனைக் குறிப்பிட்டுள்ளார். விநாயகரை வணங்கித் திரும்ப வந்து கருவறையை நோக்கிச் செல்கிறோம். மணிச்சத்தம் கேட்டு அவசரமாக உள்ளே நுழைந்த போது காலை பூஜையில் பால் அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. மூலவரும் ஆவுடையாரும் மிகப் பெரிய உருவத்தைக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. பிரமனால் உருவாக்கப்பட்ட சதுர்முக லிங்கமே ஆதியில் வழிபடப்பட்டு வந்தது.

பின்னர் இரண்டாம் சுந்தர பாண்டியன், தஞ்சை பிரகதீஸ்வரருக்கு அடுத்தபடியாக பெரிதானதாகக் கருதப்படும் பெரிய சிவலிங்கத்தை நிர்மாணித்தான். ஆவுடையாரின் சுற்றளவு மிக அதிகமாதலால் ‘‘ திருப்புனவாயிலில் மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று’’ என்ற பழமொழி எழுந்தது! கருவறை விமானம், ராஜ கோபுரத்தைவிடவும் உயர்ந்தது என்பது வியக்கத்தக்கது.
 
 இறைவனுக்குத் தீபாராதனை காட்டப்பட்ட பின் மீண்டும் வெளியே வந்து பிராகாரத்தைச் சுற்றுகிறோம். ஆகண்டலவிநாயகரை மீண்டும் தொழுது நடக்கும் பொழுது கருவறைக் கோட்டத்தில் அழகான தட்சிணாமூர்த்தி திருவுருவைக் காணலாம். பின்புறக் கோட்டத்தில் விஷ்ணுவும் ஆஞ்சநேயரும் உள்ளனர், தட்சிணாமூர்த்திக்கு எதிரே அறுபத்து மூவரும், விஷ்ணுவுக்கு எதிரே அகஸ்தியரும் காட்சி அளிக்கின்றனர். அடுத்தாக நாம் காண்பது முருகன் தன் தேவியருடன் விளங்கும் தனிச் சந்நதி.

இத்தலத்தில் அருணகிரியார் பாடிய ஒரு பாடல் மட்டுமே கிட்டியுள்ளது. சற்று தொலைவில் அம்பிகை பெரிய நாயகியின் தனிக் கோயில் விளங்குகிறது. நுழைவாயிலின் இடப்புறம் துர்க்கை, விநாயகர் அகியோரும் வலப்புறம் முருகனும் உள்ளனர். ஒரு கையகலமே உள்ள விநாயகர் முருகன் திருவுருவங்கள் மிக அழகாக  வடிக்கப்பட்டுள்ளன. கருவறை வாயிலில் விநாயகர் மட்டுமே உள்ளார். தேவியை வணங்கி விட்டு வெளியே வரும் போது காளி கோயில் ஒன்று எதிரே தென்படுகிறது. குடவரையிலுள்ள காளி உக்ர மூர்த்தி ஆதலால் நேரிடையாகத் தரிசிக்க அனுமதி இல்லை. எதிரே வைக்கப்பட்டிருக்கும் நிலைக் கண்ணாடியில் காளியின் பிம்பத்தைக் கண்டு வணங்கலாம்.
 
உழவாரப் பணி அதிவேகமாக நடந்து கொண்டிருந்தது. ராஜகோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டு காட்டுச் செடிகளைப் பிடுங்கி அப்புறப்படுத்திக் கொண்டிருந்த இளைஞரைப் பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. மீண்டும் முருகன் சந்நதியை அடைந்து, அமர்ந்து, தெளிவாக எழுதி வைக்கப்பட்டிருக்கும் தலத் திருப்புகழை உள்ளம் உருகப்பாடி அர்ப்பணிக்கிறோம்.

(உலா தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • madurai

  கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

 • kurosiya

  கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

 • medition2020

  சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

 • in22222

  கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

 • india2020

  கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்