SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மங்களம் அருள்வாள் கங்கை அம்மன்!!!

2020-01-24@ 10:03:18

கீழ்புதுப்பட்டு, மரக்காணம், விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டத்திற்குட்பட்ட கீழ்புதுப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 250 வருடங்களுக்கு முன்னால் கடுமையான பஞ்சம் நிலவியது. இந்தப் பஞ்சத்தின் காரணமாக அப்பகுதியினர் ஒன்று திரண்டு இறைவனை வேண்டியதாகவும் அப்பொழுது பக்தர்களில் ஒருவர் அருள் வந்து ஆடி, நான், கங்கை அம்மன் வந்திருக்கிறேன். இந்த மண்ணில் புதைந்து இருக்கிறேன் என்று கூற, உடனே அப்பகுதி  மக்கள் அந்த இடத்தில் தோண்டிப் பார்த்து கங்கை அம்மனை வெளிக்கொணர்ந்து சிறிதாக ஆலயம் கட்டி வழிபட்டார்கள் இதன் விளைவாக கடும் பஞ்சம் விலகியது. மக்களின் வாழ்வில் செழிப்பும் சந்தோஷமும் மேலோங்கியது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆடி மாதம் வரக்கூடிய திருவிழா காலங்களில் சாமி ஊர்வலம் சென்று திரும்பி வந்ததும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்வது வழக்கம். இன்றும் அது நடக்கிறது. இது அப்பகுதிகளில் தெய்வீகத்தன்மை வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

சுற்றுவட்டாரங்களில் இருக்கும் அனைத்து விவசாயிகளும் இக்கோயிலின் திருவிழாவினை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் படி இந்த ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது.சூரிய குலத்து திலீபனின் மகன் பகீரதன், காஸ்யப முனிவரால் ஏற்பட்ட முன்னோர்களின் சாப விமோசனம் வேண்டி பிரம்மதேவனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார்.அந்த தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவன் எதிரே தோன்றி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அப்பொழுது தனது முன்னோர்கள் எரிந்து அஸ்தி ஆக இருக்கக்கூடியவர்களை உயிருடன் எழுந்து வர வேண்டும் என்று வேண்டி நின்றான் அப்பொழுது பிரம்மதேவர்  ‘‘பகீரதா, உனக்கு அனுக்கிரகம்  செய்வதற்கு என்னால் இயலாது ஆனால் உனக்கு அனுக்கிரகம் செய்வதற்கு சிவபெருமான் உதவுவார். ஏனென்றால் சிவபெருமானுடைய இரண்டாவது மனைவியாகிய கங்கையம்மனுடைய தீர்த்தத்தினால் மட்டுமே அவர்கள் உயிர்ப்பித்து எழுப்பி வர முடியும். ஆகவே முதலில் நீ சிவபெருமானை வேண்டி தவம் செய் ஏனென்றால் கங்கையின் வேகத்தினை தாங்குவதற்கு பூலோகத்தில் எந்தவிதமான பொருளும் இல்லை.’’ இதைக் கேட்ட பகீரதன் ‘‘எங்களிடம் மிகப் பெரிய படை பலம் கொண்ட வீரர்களை கொண்டு இமய மலையை வேண்டுமானாலும் எதிரே பெயர்த்து வைத்துவிடலாம்’’ என்று பிரம்ம தேவனிடம் கூறினான்.

 இதைக்கேட்ட பிரம்மதேவன் ‘‘இமயமலையை இமைப்பொழுதில் தகர்த்து எறிந்து விடுவாள் கங்காதேவி ஆகவே அந்த ஆக்ரோஷத்தை தாங்கக்கூடிய வலிமை பூலோகத்தில் எந்த பொருளுக்கும் இல்லை ஆகவே சிவபெருமானே இதற்கு உனக்கு ஒரு வழியை செய்வார் அவரை நோக்கித் தவம் செய்’’ என்று கூறினார். பகீரதன் சிவபெருமானை நோக்கி  தவம் மேற்கொண்டார் அதன் பலனாக சிவபெருமான் அவன் முன் தோன்றினார். ‘‘உன் தவத்தினால் மகிழ்ந்த நான் உனக்கு உதவவே வந்தேன்’’ என்றார். உனக்கு என்ன வேண்டும் என்று வினவினார் உடனே பகீரதன் ‘‘ஐயனே எனது முன்னோர்கள் அஸ்தியாக கிடக்கின்றனர் அவர்கள் உயிர்ப்பித்து வருவதற்கு தாங்களே அனுக்கிரகம் செய்ய வேண்டும். ஆகவே கங்கை தீர்த்தம் எனக்கு தேவைப்படுகிறது அந்த கங்கா தேவியின் அனுக்கிரகத்தை பெறுவதற்கு தாங்களே இவ்வுலகத்தில் கங்கை வரும்பொழுது தாங்கி, பாய்ந்தோட வழி செய்து கொடுக்க வேண்டும்’’ என்று கூறினான்.

 பகீரதனின் தவத்தின் காரணமாக கங்காதேவி தோன்றி, ஒரு கலசத்தில் கங்கை தீர்த்தத்தை தந்தருளினாள். அதனைப் பெற்று தனது
முன்னோர்களின் அஸ்தி மேல் பகீரதன் தெளித்தார். 600 சனத்குமாரர்கள் உயிரோடு எழுந்தனர். மனிதர்களின் பாவங்களை நொடிப் பொழுதில் தீர்க்கக் கூடிய வல்லமை கொண்ட கங்கா தேவியின் அனுக்கிரகத்தை கண்டு மனம் உருகினார். கங்காதேவியை பூலோகத்திலேயே வந்தமர்ந்து அருளும்படி வேண்டினர். அடுத்த நொடியே அந்த இடத்தினை விட்டு அகன்று கைலாயத்திலிருந்து வெண்மை நிறத்தில் மிகப் பெரிய பிரளயம் போன்ற நீர் திரட்டி வந்து கொண்டிருந்தது. அதன் வேகத்தின் காரணமாக பூமியில் அதிர்வுகள் ஏற்படலாயின. பல உயிர்கள் மிரட்சியும் பயத்தையும் அடைந்தது. அதனால் எல்லாவிதமான உயிர்களுக்கும் தாங்கள் அழிந்து விடுவோமோ என்ற அச்சம் வந்தது.

 இதனை கண்ட பகீரதன் தானும் ஐயம் உற்று சிவபெருமானை நோக்கி வேண்ட, அக்கணமே சிவபெருமான் அவ்விடம் தோன்றி, தன்னுடைய ஜடா முடியை அவிழ்த்து கங்கையை அதில் தாங்கினார். தன் கணவரின் திரு மேனி தன் மேல் தீண்டியதால் கங்காதேவி ஆக்ரோஷம் உக்கிரம் அனைத்தையும் அடக்கி, நாணம் கொண்டு பூமியில் தவழ்ந்து , பல பாவங்களை கரைக்கக் கூடிய புண்ணிய நதியாக பூலோகத்தில் ஓடி கொண்டிருக்கிறாள். இக்கோயிலில் மூலவர் கங்கை அம்மன் அமர்ந்த கோலத்தில் அருட்பாலிக்கிறாள்.இத்தலத்தில் ராம ஆஞ்சநேயர் சந்நதியும் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாலயத்தில் ஒரு குரங்கு சில காலமாக வாழ்ந்து வந்துள்ளது.
 
கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் உணவினை உண்டு கோயிலின் வளாகத்திலேயே தங்கி விடும். இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் உடல்நிலை சரியில்லாமல் அதனுடைய உயிர் பிரிந்தது. அந்த குரங்கின் சடலத்தை இந்த ஆலயத்தில் பக்கத்திலே புதைத்து அங்கே ஒரு அனுமனுடைய சந்நதியை எழுப்பினார்கள். ராம ஆஞ்சநேயர் என்ற நாமம் கொண்ட இத்தல அனுமனிடம் வேண்டிய கோரிக்கைகள் நிறைவேறியதன் காரணமாக அந்த பக்தர்களின் வழிபாடு காரணமாக இவ்வாலய ஆஞ்சநேயர் மகத்துவம் பெற்று திகழ்கிறார். சனிக்கிழமைதோறும் அனுமன் சந்நதியில் பக்தர்கள் அதிகமாக கூடுகின்றனர். இக்கோயில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள கீழ்புதுப்பட்டு மதுரா கங்கை நகரில் அமைந்துள்ளது. புதுச்சேரி பஸ் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரை சாலையில் 14 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

- ஆர். மூர்த்தி
படம்: எம்.சரவணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்