SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவனருள் கிட்டச் செய்யும் திரிசூல வழிபாடு!!

2020-01-22@ 10:48:35

*சிவபெருமானுக்குரிய படைக்கலங்களுள் முதன்மை பெற்றது சூலமாகும். அது தலைப்பகுதியில் மூன்று கூர்மையான பகுதிகளைக் கொண்டிருப்பதால் முத்தலைச் சூலம் என்று திரிசூலம் என்றும் அழைக்கப்படுகின்றது.

*சூலத்தை ஏந்தி நின்று அருள்புரிவதால் சிவபெருமான் சூலபாணி என்றும், சூலதரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

*திரிசூலம், உயிர்களைப் பற்றியுள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை நீக்கி அவற்றிற்கு மோட்சத்தை அருள்கிறது. அது ஞானத்தை  வழங்குவதாகவும் உள்ளது. அஸ்திரங்களுக்கு எல்லாம் தலைவனாக இருப்பதால் அதனை அஸ்திர ராஜன் எனவும் அழைப்பர்.

*பகைவர்களை வென்று சுகமாக வாழவும், ஞானத்தினைப் பெற்று மகிழ்ச்சியாக வாழவும், திரிசூலத்தைச் சிவபெருமானாகவே போற்றி வழிபடுகின்றனர். இந்த  விரதத்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். கண்ணுக்குப் புலனாகாத பகை விலகும்.

*பொன்னால் திரிசூலத்தைச் செய்து, அதைச் சுற்றிலும் எட்டுத் திசைகளிலும் அஷ்டாயுதங்களை நிலைப்படுத்தி அஸ்திர பூஜை செய்வர். அத்தி மரத்தாலும்,  கருங்காலி மரத்தாலும் சூலங்களைச் செய்து வழிபடுகின்றனர்.
   
*சூலத்தின் மையத்தில் மூன்று கிளைகளில் சிவபெருமானையும் இடது கிளையில் திருமாலையும் வலது கிளையில் பிரம்ம தேவனையும், மூன்றும் கூடுமிடத்தில்  விநாயகர், முருகன், வீரபத்திரர், சாத்தன் ஆகியோரையும் அதன் கீழுள்ள கண்டத்தில் ஏகாதச ருத்திரர்களையும், அதன் கீழுள்ள பத்மத்தில் அஷ்டமாத்ருகா,  அஷ்டலட்சுமிகள் ஆகியோரையும் பூஜிக்கின்றனர்.

*திரிசூல வழிபாடு இல்லறத்தாருக்குப் பாதுகாப்பையும் செல்வத்தையும் அருள்கின்றது. அழிவிலிருந்து காப்பாற்றுகிறது.

*காசி நகருக்கு அவிமுத்தம் என்று பெயர் வழங்குகிறது. இதற்கு அழிவற்றது என்பது பொருள். இந்த தலத்தைத் திரிசூலம் தாங்கிக் கொண்டிருப்பதாகப் புராணங்கள்  கூறுகின்றன.

*சூலாயுதத்தைத் தனியாக வழிபடுவதற்குப் பதில் சந்திரசேகரர் திருவுருவத்தில் சார்த்தி வைத்து வழிபடுவதும் உண்டு. திரிசூல விரதத்தை விரத மகாத்மியம்  சிறப்புடன் விளக்குகிறது. சிவாலயங்களில் இவரை முதன்மை மூர்த்தியாகக் கொள்வர். கொடியேற்றம், கொடியிறக்கம் இவர் முன்பாகவே நடைபெறும்.  தீர்த்தவாரியில் நீருள் மூழ்கித் தீர்த்தம் அளிப்பவரும் இவரே.

*தினமும் ஸ்ரீபலி நாயகரைக் கொண்டு செய்யப்படும் ஸ்ரீபலி உற்சவம் பெருந்திருவிழாக்களில் சூலதேவரை வைத்துக் கொண்டே செய்யப்படுகின்றது.

*பெருந்திருவிழாவில் சுவாமி புறப்பாட்டிற்கு முன்பாகத் திரிசூலம் எடுத்துச் செல்லப்படுகின்றது. இதனைப் படை வலம் செய்தல் என்பர்.

*திரிசூலத்தைச் சிவபெருமானாகவே போற்றுகின்றனர். சில ஆலயங்களில் திரிசூலத்தின் முன்புறம் உமாமகேஸ்வரர் அர்த்தநாரீஸ்வரர், ரிஷபாரூடர் வடிவங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.

*கிராமிய தெய்வமான பிடாரி ஆலயங்களிலும் திரிசூலமே படைக்கலமாக உள்ளது. அதன் நடுவில் காளியின் உருவம் அமைக்கப்படுகின்றது.

*திரிசூலத்தை மிகப் பழங்காலந்தொட்டே மக்கள் சிறப்புடன் போற்றி வருகின்றனர். அது காவலின் சின்னமாக விளங்குகின்றது.

- ஆர். அபிநயா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-02-2020

  18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai20

  சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

 • modi20

  வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

 • hospital20

  ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

 • kaasi sivan20

  காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்