SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரம் தந்து காத்திடுவாள் பள்ளூர் வாராஹி அம்மன்

2020-01-18@ 17:04:10

அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாம் ஆதி பராசக்தியின் தலைமை அதிகாரியாக அருள்பவளே வாராஹி. காசியில் தனிக்கோயில் கொண்ட இந்த தேவிக்கு பள்ளூரிலும் ஓர் ஆலயம் உள்ளது. சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தற்போது வாராஹி தேவி அருள்புரியும் இந்த கருவறையில் மந்திரகாளியம்மன் வீற்றிருந்தாள். ஒரு துர்மந்திரவாதி மந்திரகாளியம்மனையே மந்திரத்தால் கட்டிப்போட்டு சக்தியை ஒடுக்கி வைத்திருந்தான். அந்த இறுமாப்பில் அட்டகாசங்கள் பல செய்தான். அன்னையும் காலம் வருமென்று தெரிந்து வேடிக்கை பார்த்தாள். அருகிலிருந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

அதனோடு அருட்பெருங் கருணையான அன்னை வாராஹியும் மிதந்து வந்தாள். மெல்ல கரை தொட்டு எழுந்தாள். அங்கிருந்த கோயிலுக்குள் மந்திரகாளியம்மன் இருப்பதை அறிந்து கோயில் திறக்க வேண்டி நின்றாள். ‘‘துர்மந்திரவாதி என்னை கட்டி வைத்துள்ளான். கதவைத் திறந்தால் ஆபத்து வரும்’’ என்று சொன்னாள் மந்திரகாளியம்மன். அகிலத்தையே ஆட்டிவைக்கும் வாராஹி சிரித்தாள். 'எப்படியாவது உன்னைக் காப்பாற்றுவேன்' என்று உறுதி சொன்னாள். சப்த மாதர்களில் ஒருவளான வாராஹி துர்மந்திரவாதியை வதம் செய்யப்போகும் நிகழ்வைக் காண மற்ற அறுவரான பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் ஆலய வாயிலில் காத்திருந்தனர்.

நடுநிசியில் ஆலய வாயிலை எட்டி உதைத்தான் துர்மந்திரவாதி. கோபக் கண்களோடு காத்திருந்த வாராஹி தேவி அவனை இரண்டாக வகிர்ந்தாள். கிழித்துத் தூக்கி எறிந்தாள். மந்திரகாளியம்மன் விடுவிக்கப்பட்டாள். வாராஹியிடம், ‘தாங்களே இந்த கருவறையில் அமர வேண்டும்‘ எனக் கேட்டுக் கொண்டாள். துர்மந்திரவாதியின் உடல் விழுந்த இடத்தின் அருகில் மந்திரகாளியம்மன் கோயில் கொண்டாள். ஆலயத்தின் முகப்பில் சங்கு, சக்கரம், அபயம், வரதம் தாங்கிய திருக்கோலத்தில் வாராஹி தேவி அருள்கிறாள். இருபுறங்களிலும் தேவியின் தோழியர் சாமரம் வீசி அன்னையை குளிர்விக்கின்றனர். கோபுர வாயிலின் இரு உள்புற சுவர்களிலும் பிரத்யங்கரா, ஸ்வர்ணாகர்ஷண பைரவர் போன்றோர் சித்திர வடிவில் அருள்கின்றனர்.

அர்த்தமண்டபத்தின் முகப்பிலும் வாராஹி தேவியின் இரு புறங்களிலும் இரு சிங்கங்கள் அரோகணிக்க கம்பீரமாக அருள்கிறாள். பிரகார வலம் வருகையில் மந்திரகாளியம்மனின் திருவுரு இத்தலத்தில் அருளியதன் நினைவாக சிறிய வடிவில் தோழியருடன் கோஷ்டத்தில் அவள் சிலை நிறுவப்பட்டுள்ளது. வேப்பமரம், தலமரம். பிராகார சுற்றுச்சுவர்களில் பேரெழிலுடன் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, போன்றோரும், சப்தமாதர்களும் சுதை வடிவில் அருள்கின்றனர். கருவறை கோபுரத்தில் வாராஹி, வைஷ்ணவி, மகாலட்சுமி போன்றோர் பொலிவுடன் திகழ்கின்றனர். ஆலயவலம் வந்து சங்கு, சக்கரம் ஏந்திய துவாரபாலகியரின் அனுமதி பெற்று பலிபீடம், சிங்கத்தை அடுத்து, கருவறையின் வலதுபுறம் விநாயகப்பெருமானை தரிசிக்கிறோம்.

மூலக்கருவறையில் இரு வாராஹிகளை தரிசிக்கலாம். ஒருவர், சிறு வடிவிலான ஆதிவாராஹி; அடுத்தவர் பெரிய வடிவிலான தற்போதைய வாராஹி. இந்தப் பெரிய வாராஹியின் பீடத்தில் ஆறு மாதர்களின் சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. எருமை வாகனத்தில், பத்மாசனத்தில், நான்கு திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அபயவரத முத்திரைகள் தாங்கி தெற்கு நோக்கி அருள் பொங்க வீற்றிருக்கிறாள். பூமியையே தன் பன்றி முகக் கொம்புக்கிடையில் தாங்கி காத்தருளிய மஹா விஷ்ணுவைப்போல இந்த உலகோர் அனைவரையும் தன் பன்றிமுக அருட் பார்வையால் காத்து ரட்சிக்கிறாள் வாராஹி. தன் அங்க தேவதையான லகு வார்த்தாலியையும், பிரத்யங்க தேவதையான ஸ்வப்ன வாராஹியையும், உபாங்க தேவதையான திரஸ்கரணியையும் தன்னுள்ளே ஏற்றிருக்கிறாள்.

தன் முன்னே நிறுவப்பட்டுள்ள ஸ்ரீசக்ரத்தின் மூலம் மேலும் தன் சக்தியை மகோன்னதமாக்கி பக்தர்களை வளப்படுத்துகிறாள்.ஒவ்வொரு வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி தினங்களில் இந்த அன்னையின் சந்நதியில் வாழை இலையில் அரிசியைப் பரப்பி உடைத்த தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள் பக்தர்கள். வாழ்வின் அதலபாதாளத்தில் சரிந்தவர்களையும் அன்னை சிகரத்தின் மேல் அமர்த்துகிறாள்.  செவ்வாய்க் கிழமைகளிலும், மற்ற நாட்களில் செவ்வாய் ஹோரை நேரத்திலும் இந்த அன்னையை மாதுளை முத்துக்களால் அர்ச்சிக்க, செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் கைகூடுகிறது. அபிஷேகம் செய்து சிவப்பு நிற துணியை சாற்றி செவ்வரளிப் பூக்களால் அர்ச்சித்து, சர்க்கரை பொங்கலை நிவேதிக்க தொழில் வளம் பெருகுகிறது.

முழு கறுப்பு உளுந்தில் வடை செய்து அன்னைக்குப் படைத்திட மன நோய்கள், ஏவல், பில்லி சூன்யம் போன்றவை நீங்குகின்றன. கரிநாளில் இந்த அன்னைக்கு ஒன்பது இளநீரால் அபிஷேகம் செய்து செவ்வரளிப்பூ சாற்றி, செம்மாதுளை முத்துக்கள், செவ்வாழைப் பழங்களை நிவேதித்தால், குடும்பப் பிரச்னைகள் பஞ்சாகப் பறந்து விடுகின்றன. விதவிதமான பூஜைகளில் மகிழ்ந்து வேண்டுவதை சடுதியில் அருள்வதில் இவளுக்கு நிகர் எவருமில்லை. இதில் குறிப்பிடத்தக்க ஒரு தகவல், எந்த வித பூஜைக்கும் இந்த ஆலயத்தில் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்தே நிவேதனப் பொருட்களை தயாரித்து வந்து அன்னைக்குப் படைக்கலாம். வாராஹி தேவிக்கான ஸஹஸ்ரநாமங்களில் ஒன்று, அரசாலை.

இதனால் ஆரம்பத்தில் அரசாலை அம்மன் என்றே இந்த தேவி வணங்கப்பட்டிருக்கிறாள் என்று தெரிகிறது. சிங்கத்தை வாகனமாகக் கொண்டு மூவுலகங்களுக்கும் தேவியான லலிதா பரமேஸ்வரியின் சேனா நாயகியாக தண்டநாதா எனும் திருநாமமும் இவளுக்கு உண்டு. வாராஹி கல்பம் எனும் நூலில் வாராஹிக்கு பல்வேறு வாகனங்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வாகன விபத்துகள் ஏற்படாமலும் இவள் காக்கிறாள். திருவானைக்கா திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி தேவி வாராஹியின் அம்சமே. காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் திருமால்பூர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ளது பள்ளூர்.  

 - ஆர்.அபிநயா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iyanman2020

  துபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்

 • drawing20

  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்